

கல்வியும் பொருளாதார வாய்ப்பும் வாய்க்கப்பெற்ற பல பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் தடம் பதிக்கிறார்கள். ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று இந்தச் சமூகம் வகுத்துவைத்திருக்கும் துறைகளிலும் பெண்களின் ஆளுமையைக் காணமுடிகிறது. ஆண்கள் மட்டுமே அரசாண்ட தொழில்முறை புகைப்படத் துறையிலும் இன்று பல பெண்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் புகைப்படங்களுக்காக ஸ்டுடியோக்களை மட்டுமே நம்பியிருந்த காலத்தில், ஒரு பெண் தனியாக ஸ்டுடியோ ஆரம்பித்து நடத்தி வருவது அத்தனை எளிதல்ல. ஆனால் அதைச் சாத்தியப்படுத்திக் காட்டி யிருப்பதில்தான் சந்தரபாரதி வித்தியாசப்படுகிறார். தொழில்நுட்பம் வளர்ந்து, செல்போனையே கேமராவாகப் பயன்படுத்தும் இந்தக் காலத்திலும் ஸ்டுடியோ நடத்திவருவது இந்தத் தொழில் மீதான அவரது ஈடுபாட்டுக்குச் சான்று.
கேமரா தூக்கவைத்த வறுமை
சந்தரபாரதி, தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர். வறுமை இவரது படிப்புக்குப் பத்தாம் வகுப்புடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வீட்டின் பொருளாதாரத் தேவையைச் சமாளிக்கத் தேனியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் 15 வயதில் பிரிண்ட்டராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டார். அந்த ஆர்வம்தான் இன்று அவரைத் தனி ஆளாக யாருடைய உதவியும் இல்லாமல் திருமணம், காதணி விழா போன்ற விசேஷங்களுக்குச் சென்று படம் எடுக்கவைக்கிறது.
ஆண்டிப்பட்டி, போடி ஸ்டுடியோவில் சந்தரபாரதி பணியாற்றியபோது அந்தக் கடையின் உரிமையாளர் முதன்முதலாகப் புகைப்படம் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது தயக்கமும் பயமும் சேர்ந்து சந்தரபாரதிக்குக் காய்ச்சலே வந்து விட்டதாம். பிறகு மெல்ல மெல்லப் பயம் நீங்கி, புகைப்படத் துறையின் மீது தீராத காதல் பிறந்ததாகச் சொல்கிறார் சந்தரபாரதி.
தனி அடையாளம்
ஹோட்டலில் சப்ளையராகப் பணியாற்றிய பரசுராமன் என்பவரை 18-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். சந்தரபாரதியின் புகைப்பட ஆர்வத்தை அவருடைய கணவர் புரிந்துகொண்டார். புகைப்படத் தொழிலை முழுமையாகக் கற்றுக்கொண்ட பின்னர் கணவரின் தூண்டுதலால் ஆண்டிப்பட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தில் வாடகைக்கு அறை எடுத்து ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறார். வயதான பிறகு தேனியில் இருந்து தினமும் அங்கே சென்றுவர சிரமமாக இருந்ததால் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோவை தேனிக்கே மாற்றிவிட்டார்.
“24 வருஷத்துக்கு முன்னால எனக்கு முதல் குழந்தை பிறந்தப்போ ஒரு மாசம் மட்டுமே வீட்டில் இருந்தேன். என் மாமியார் குழந்தையைப் பார்த்துக்கிட்டதால அடுத்த மாசத்துல இருந்து ஸ்டுடியோக்குக் கிளம்பிட்டேன்” என்று புன்னகையுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தான் புகைப்படத் தொழில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிராம மக்கள் பலர் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்ததால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டதாகச் சொல்கிறார்.
ஏளனத்தை மீறிய புன்னகை
“புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்ற மூடநம்பிக்கை சிலருக்கு இருந்த காரணத்தால் புகைப்படம் எடுக்கச் சென்ற இடங்களில் என்னை ஏளனமாகப் பேசினார்கள். சிலர் என்னை அடிக்காத குறையாக விரட்டியிருக்கிறார்கள். என் கணவர் எனக்குப் பக்கபலமாக இருந்ததால் இதுபோன்ற சங்கடங்களை என்னால் எளிதாகக் கடந்துவர முடிந்தது” என்று சொல்லும் சந்தரபாரதி, தேனி மாவட்டத்தின் சிறந்த புகைப்படக் கலைஞர் விருது பெற்றிருக்கிறார்.
அந்தக் காலத்தில் புகைப்படம் எடுக்கக் கிராமங்களுக்குச் செல்ல பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை. அதனால் சில நேரங்களில் முதல்நாளே விசேஷ வீட்டுக்குச் சென்று புகைப்படம் எடுத்த அனுபவமும் இவருக்கு உண்டு.
“இப்போ தொழில் போட்டி அதிகமாகிடுச்சு. என்னாலயும் பழைய மாதிரி ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஸ்டுடியோவுக்கு வர்றவங்களுக்கு மட்டும் போட்டோ எடுத்துத் தர்றேன். வீட்டு விசேஷங்களுக்குக் கூப்பிட்டா அங்கேயும் போய்ப் படம் எடுப்பேன்” என்று சந்தரபாரதி நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வாடிக்கையாளர்கள். ஒருவர், “அக்கா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும், அவசரம்” என்றார். அருகில் இருந்த மூதாட்டியோ, “தாலுகா ஆபீஸ் போகணும். எனக்கும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் படம் சீக்கிரம் வேணும்” என்றதும், சந்தரபாரதி கேமராவைக் கையில் எடுத்தார். அதில் இருந்து வெளிப்படுகிற ஃபிளாஷ் வெளிச்சம் அந்த அறையை மட்டுமல்ல, அவரது வாழ்வையும் பிரகாசிக்கச் செய்கிறது.