

‘எடையைக் குறைக்க வேண்டுமா? என்னிடம் கேளுங்கள்’ என்று கைபேசி எண்ணுடன் கவரும் விளம்பரங்களை நகரும் வாகனங்களில் பார்த்திருக்கலாம். சுவரொட்டிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று எல்லா இடங்களிலும் எடை குறைப்பு விளம்பரங்களின் ஆட்சிதான். அந்த அளவுக்கு உடல் பருமன் இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
உடல் எடையைக் குறைக்க பல நிறுவனங்களும் பெல்ட், பாத அணி, இயற்கை உணவு என்று போகாத ஊருக்கு வழிகாட்டி வியாபாரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. இப்படியொரு சூழலில் ‘நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எடையைக் குறைக்கலாம். காரணம் எடை குறைப்பு என்பது ஓர் அறிவியல் வழிமுறை’ எனச் சின்னச் சின்ன குறிப்புகள் மூலம் விரல் பிடித்துக் கூட்டிச் செல்கிறது ‘என்ன விலை அழகே!’ புத்தகம். அதைச் சாப்பிடக் கூடாது, இதை நினைத்தாலே ஆபத்து என்றெல்லாம் பயத்தின் சதவீதத்தைக் கூட்டாமல், ‘எடை குறைப்பு என்பது இவ்வளவுதான், இதை மட்டும் செய்தால் போதும்’ என்ற இவர்களின் அணுகுமுறை நடை நம்பிக்கை தருகிறது. குறிப்பாக ஜி. எம். டயட், குழந்தை பெற்ற பிறகு தளர்ந்த உடலை எப்படிப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது போன்ற அத்தியாயங்கள் பளிச்.
புத்தகம்: என்ன எடை அழகே!
ஆசிரியர்கள்: ஸ்நேகா - சாஹா
விலை: 80/-
வெளியீடு: சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி சாலை, மயிலாப்பூர்,
சென்னை - 600004
தொலைபேசி: 044 – 42209191