Last Updated : 19 Apr, 2015 01:50 PM

 

Published : 19 Apr 2015 01:50 PM
Last Updated : 19 Apr 2015 01:50 PM

பக்கத்து வீடு: ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் ஆலிஸ்!

போராட்டக்காரர் என்பது தவிர உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் என்று பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.

“போராட்டம் என்பது நான் பூமியில் வசிப்பதற்கான வாடகை’’ என்று சொல்வதிலேயே தான் யார் என்பதை உணர்த்திவிடும் இவர். ஆலிஸ் வாக்கர்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் பிறந்தவர் என்றாலும் ஆலிஸ் தன்னை ஒரு நாட்டின் அடையாளமாகவோ, ஒரு கண்டத்தின் அடையாளமாகவோ வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. பூமியில் வசிக்கும் மனிதர்கள் என்ற அடையாளம் மட்டுமே நம் எல்லோருக்கும் போதுமானது என்கிறார்.

அமெரிக்காவில் நிறவெறி நிலவி வந்த காலத்தில், ஆப்பிரிக்க அமெரிக்கத் தம்பதிக்குப் பிறந்தார் ஆலிஸ். அப்பா விவசாயக் கூலியாகக் குறைந்த வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார். அம்மா வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். சின்ன வயதிலேயே தான் சந்திக்கும் மனிதர்களை உற்றுக் கவனிப்பது ஆலிஸின் வழக்கம். ஒருநாள் பண்ணை உரிமையாளர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதற்குப் படிப்பு என்று கேட்டபோது, ஆலிஸின் அம்மா கொதித்துவிட்டார். தன்னுடைய குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

எட்டு வயதில் தன் சகோதரன் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் ஆலிஸின் வலது கண் பாதிக்கப்பட்டது. அவர்களிடம் கார் இல்லாததால் ஒரு வாரம் கழித்துதான் மருத்துவரிடம் செல்ல முடிந்தது. பார்வை பறிபோய்விட்டதாக மருத்துவர் கூறினார். கண்ணில் ஏற்பட்ட தழும்பைக் கண்டு எல்லோரும் கிண்டல் செய்தனர். இதனால் பெரும்பாலான நேரத்தைத் தனிமையிலேயே கழித்தார் ஆலிஸ். நிறையப் புத்தகங்கள் படித்தார். தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் கவிதைகளை எழுதினார். 14 வயதில் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் ஏற்பட்ட தழும்பு அகற்றப்பட்டது.

எழுத்தும் ஆயுதமே

கல்லூரியில் படிக்கும்போது பேருந்தில் உட்கார்ந்திருந்த ஆலிஸை ஓர் அமெரிக்கப் பெண் இருக்கையை விட்டு எழச் சொன்னார். அந்த நிகழ்ச்சி ஆலிஸை வெகுவாகப் பாதித்தது. ஒருமுறை மார்டின் லூதர்கிங்கைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார் ஆலிஸ். அன்று ஆரம்பித்த போராட்டத்தை இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம் எழுத்து. ஆலிஸின் நாவல், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைப் புத்தங்கள் அடுத்தடுத்து வெளிவந்து வரவேற்பைப் பெற்றன. அவரது எழுத்துகளைப் பார்த்து, மிஸ் மேகசின் ஆசிரியர் பொறுப்பு தேடிவந்தது. பெண்ணுரிமைகளை வலியுறுத்தி காத்திரமான கட்டுரைகளை எழுதி வந்தார்.

சிவில் உரிமைப் போராட்டங்களில் தன்னுடன் பங்கேற்ற மெல்வின் ரோசென்மனைத் திருமணம் செய்து கொண்டார் ஆலிஸ். இது கலப்புத் திருமணம். வெள்ளை இனம் முதன்மையான இனமாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வந்த ‘குக்ளஸ் க்ளான்’ என்ற பழமைவாத அமைப்பு ஆலிஸையும் அவருடைய கணவரையும் தாக்கியது. உயிர் பயத்தை ஏற்படுத்தியது. எத்தனையோ இன்னல்களைச் சமாளித்து வந்த ஆலிஸ், இவர்களையும் தைரியமாக எதிர்கொண்டார்.

1982-ம் ஆண்டு ஆலிஸைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்ற ‘த கலர் பர்ப்பிள்’ நாவல் வெளியானது. அமெரிக்கா கடைப்பிடித்து வந்த நிறவெறிக் கொடுமைகளைச் சொன்னதோடு, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பிற்போக்குத்தனங்களையும் இந்த நாவல் சுட்டிக்காட்டியது. அடுத்த ஆண்டு புலிட்சர் விருதும் நேஷனல் புக் விருதும் இந்த நாவலுக்கு வழங்கப்பட்டன. 1985-ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றது.

வன்முறைக்கு எதிரான பயணம்

2003-ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் தினத்தில் வெள்ளை மாளிகை வாசலில் இராக் போரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார் ஆலிஸ்.

இராக் மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிலும் மதம், இனம், அரசியல் காரணங்களுக்காக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டால் அவற்றுக்கு எதிராக முதலில் ஒலிக்கும் குரல் ஆலிஸுடையதாக இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக மிகக் கடினமான பிரச்சாரங்களைச் செய்துவருகிறார். இன வேறுபாட்டைக் கடைப்பிடிக்கும் இஸ்ரேலின் ஹீப்ரு மொழியில் தன் நூல் வெளிவருவதைத் தடை செய்துவிட்டார்.

“இன வேறுபாட்டை எதிர்க்கும் என் எழுத்து, இன வேறுபாட்டை தூக்கிப்பிடிக்கும் மனிதர்கள் பேசும் ஒரு மொழியில் வெளிவருவதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்கிறார்.

ஆப்பிரிக்கா, இந்தியா, பாலி என்று உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். அங்கு வாழும் மக்களின் நிலைமைகளைக் கண்டுணர்கிறார்.

“பொருளாதாரத்தாலும் மதத்தாலும் இனத்தாலும் அரசியலாலும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவதும் அவர்கள் பக்கம் நிற்பதும்தான் என்னுடைய நியாயமாகக் கருதுகிறேன். புரட்சியாளர்கள், நல்ல தலைவர்கள், ஆசியர்களால்தான் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதனால் நான் இவர்களைத்தான் நம்புகிறேன்’’ என்கிறார் ஆலிஸ்.

ஆலிஸின் புத்தகங்கள் நீதி, சமத்துவம், அரசியல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை முன்னிறுத்துகின்றன. இவை 24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்றரைக் கோடிப் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன. புத்தகங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை ஆப்பிரிக்காவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்.

மனித உரிமைகள் மட்டுமின்றி பூமியில் வசிக்கும் ஒவ்வோரு உயிரினத்துக்காகவும் தான் போராடுவதாகச் சொல்கிறார் ஆலிஸ். அதனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராகவும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். தன் வாழ்க்கையில் 50 ஆண்டுகளைப் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்துள்ள ஆலிஸ், தன் மகளையும் போராட்டக்காரராகவே உருவாக்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x