

ஒருவர் சாலையோரத்தில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்கிறவர்களிடம் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். சிலர் படிக்கிறார்கள், பலர் படிக்காமலேயே கசக்கியெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். இன்னும் சிலர் வாங்கவே இல்லை. ஆனால் அதே இடத்துக்கு இன்னொரு இளைஞன் வருகிறான். தன் கையில் வைத்திருக்கும் கூடையில் இருந்து கசங்கிய காகித உருண்டையை அந்த வழியாகச் செல்வோரிடம் கொடுக்கிறான். வாங்கியவர்கள் அனைவரும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று ஆர்வமாகப் பிரித்துப் படிக்கிறார்கள்.
“எதிலுமே இப்படியொரு மாற்றுச் சிந்தனைதான் வேண்டும். அதுதான் நாம் நினைக்கிற இலக்கை நோக்கி வழிநடத்தும்” என்று சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த வனிதா ஆனந்த். திருக்குறளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக 1330 குறட்பாக்களையும் கண்ணாடி பிம்ப வடிவில் எழுதியிருக்கிறார், அதுவும் ஏழே நாட்களில். சாதனை என்கிற பெயரில் பொதுவாகப் பலரும் உடல் பலத்தை வெளிப்படுத்தும் வித்தைகளையே செய்வார்கள். ஆனால் ஆனந்தியோ பெயரளவுக்குச் சாதனை செய்யாமல் பெயர் சொல்லும் சாதனையைச் செய்திருக்கிறார்.
“இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் நீதி சொல்லிக்கொண்டிருக்கிறது திருக்குறள். உலக அளவில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் இந்த நூல்தான். அதனால்தான் என் திறமையை வெளிப்படுத்துவதற்குரிய களமாகத் திருக்குறளைத் தேர்ந்தெடுத்தேன். பொதுவாகக் காகிதத்தில் எழுதும்போது இடமிருந்து வலமாகத்தான் எழுதுவோம். கண்ணாடி பிம்ப வடிவத்துக்கு வலமிருந்து இடமாக எழுத வேண்டும். மற்ற மொழிகள் போல தமிழ் மொழி எளிதான வரிவடிவம் கொண்டதில்லை. வளைவுகளும், சுழிகளும் அதிகம். அவற்றைக் கண்ணாடி பிம்ப வடிவில் எழுதுவது அத்தனை சுலபமில்லை. ஆனால் அந்த சவால் எனக்குப் பிடித்திருந்தது. தொடர்ச்சியான பயிற்சியால் அதைச் செய்துமுடித்தேன். என் புத்தகம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கண்ணாடி பிம்ப வடிவிலான முதல் நூல் இதுதான் என்பதும், அதை எழுதிய முதல் பெண் நான் தான் என்பதும் என் மகிழ்வை இரட்டிப்பாக்குகின்றன” என்று சொல்லும் வனிதா, சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியாகப் பணிபுரிந்து வருகிறார்.
“நான் தமிழிலக்கிய மாணவி. படித்தது தமிழ் என்றாலும் பிடித்துச் செய்வது சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பது. ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, நடத்தைப் பிறழ்வு, கவனச் சிதறல், அதீத துறுதுறுப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குப் பயிற்சியளித்து வருகிறேன். இது போன்ற குழந்தைகளுக்காகத் தனியாக பயிற்சிமையம் தொடங்க வேண்டும் என்ற திட்டமும் இருக்கிறது” என்று சொல்லும் வனிதா, இந்தப் பயிற்சிக்காக நல்லாசிரியர் விருதும் வாங்கியிருக்கிறார்.