

தென்னிந்திய உணவு வகைகளை 1000 பெண்கள் சேர்ந்து சமைக்கும் உலக சாதனை முயற்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. உலகிலேயே தென்னிந்திய உணவு வகைதான் சிறந்தது என்பதை உரக்கச் சொல்வதற்காக நடத்தப்பட்ட முயற்சி இது. இந்நிகழ்ச்சிக்கு வடிவம் கொடுத்தவர் சமையல்கலை நிபுணர் மால்குடி கவிதா.
சவேரா நட்சத்திர ஹோட்டலில் மால்குடி என்ற பிரிவில் தென்னிந்திய உணவு வகைகளைச் சமைத்துப் பிரபலமானதால், கவிதாவின் பெயருடன் மால்குடி என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. விருத்தாசலத்தைச் சேர்ந்த இவர் முதலில் பத்திரிகை நிருபராகப் புதுக்கோட்டையில் பணிபுரிந்தார். அதன் பிறகு, சென்னையில் ஹோட்டல் துறை பணியைத் தொடங்கியிருக்கிறார். அம்பிகா எம்பயர், சவேரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்திருக்கிறார். சவேரா ஹோட்டலில் மால்குடி பிரிவில் தற்போது பிரபலமாக இருக்கும் பச்சை காய்கறி சொதி, காரைக்குடி கோழிக்கறி உள்ளிட்ட பல உணவு வகைகள் கவிதாவின் கைவண்ணத்தில் உருவானவை.
“எனக்கு சமையல் மிகவும் பிடிக்கும். அதுதான் எனக்கு சந்தோஷமும். உணவோடு விளையாடுவேன். உணவோடு உரையாடுவேன். 100 வயதுக்கு மேலும் வாழ்ந்த நமது முன்னோர்கள் உண்ட, பல மருத்துவ குணங்கள் கொண்ட தென்னிந்திய உணவு முறைதான் உலகிலேயே சிறந்தது” என்கிறார் கவிதா.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகள் சமைக்கப்பட்டன. ஆந்திராவின் இறால் உணவு (ரொய்லு வேப்புடு), மீன் குழம்பு (சப்பல புலுசு), கர்நாடகாவின் நெய்யுடனான கோழிக்கறி (துப்ப கொரி), தமிழ்நாட்டின் செட்டிநாடு கோழி, உருளைக்கிழங்கு பிரியாணி, எண்ணெய்க் கத்தரிகாய் போன்ற பலவகை உணவைப் பெண்கள் ஆர்வத்துடன் சமைத்தனர். ‘உணவோடு விளையாடு சீசன் 2’ நிச்சயம் உண்டு என்கிறார் கவிதா.
“ஹோட்டல் துறையில் பெண்கள் வரவேற்பாளராக இருக்கலாம். ஆனால் சமையலறையில் முக்கிய பொறுப்பில் இருக்க பல தடைகள் உள்ளன. எனவேதான், நான் அதில் சாதிக்க வேண்டும் என்று தோன்றியது. துயரங்கள் நம்மை அழுத்தும்போது மிக வேகமாக மேலெழ வேண்டும் என்று தோன்றும்” என்று சொல்லும் கவிதா, தனது 20 ஆண்டுகால பணியில் 30 வட்டார உணவுத் திருவிழாக்களை நடத்தியுள்ளார்.
35 மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து சமைத்து, சமையல் கலை நிபுணர் தாமோதரனின் சாதனையை முறியடித்து லிம்கா மற்றும் மிரக்கல் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்துள்ளார்.
கோடைக்காலத்துக்கு ஏற்ப நம் உணவுப்பழக்கம் இருக்க வேண்டும் என்று சொல்லும் கவிதா, “நீர்ச்சத்து கொண்ட காய் வகைகள், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, சுரைக்காய் உள்ளிட்ட காய் வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதை பொரியலாக மட்டுமில்லாமல் விதவிதமாகச் செய்து சாப்பிடலாம். பீர்க்கங்காய் துவையல், பீர்க்கங்காயும் முந்திரியும் சேர்த்து பொரியல் ஆகியவையும் செய்யலாம்” என்கிறார்.