ஆனந்திபென் பட்டேல்: ஆசிரியர் பணியில் இருந்து முதல்வர் பதவிக்கு

ஆனந்திபென் பட்டேல்: ஆசிரியர் பணியில் இருந்து முதல்வர் பதவிக்கு
Updated on
1 min read

மாநிலத்தில் ஒரே சமயத்தில் ஆளுநராக ஒரு பெண்ணும், முதல்வராக ஒரு பெண்ணும் இருக்கும் சம்பவங்கள் எப்போதாவதுதான் அரங்கேறும். இப்போது அது குஜராத்தில் நடந்திருக்கிறது. குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றதன் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது.

பார்ப்பதற்கு சாது போல இருக்கும் ஆனந்திபென், செயலில் புலிப் பாய்ச்சல் காட்டக்கூடியவர். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அரசியலில் இவர் தனி அடையாளத்துடனேயே செயல்பட்டது இவரது தனிச்சிறப்பு. இதற்கு இரண்டு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம்.

ஆண்கள் பள்ளியின் ஒரே மாணவி

குஜராத்தில் மேஷ்னா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்திபென். படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், இவர் வசித்து வந்த மாவட்டத்தில் பெண்கள் படிப்பதற்கென்று தனிப் பள்ளிக்கூடம் இல்லை. அப்போது அந்த மாவட்டத்தில் ஒரே ஒரு ஆண்கள் பள்ளிக்கூடம் மட்டுமே இருந்தது.

அந்தப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று ஆனந்திபென் பட்டேல் வீட்டில் அடம் பிடித்தார். பெற்றோர் விரும்பவில்லைதான். ஆனாலும், மகளின் ஆசையை நிறைவேற்றினர். 700 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளியில் ஒரே மாணவியாகக் ஆனந்திபென் பட்டேல் கல்வி பயின்றார். 4-ம் நிலை வரை அந்தப் பள்ளியில் படித்த பிறகு அடுத்தடுத்த மேற்கல்வியை வெவ்வேறு ஊர்களில் படித்தார். பிறகு ஒரு பள்ளியின் முதல்வராக உயர்ந்தார்.

பேரணி பெண்

1992-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ராமஜென்ம பூமியை மையமாக வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தது. அந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ‘தேசிய ஒற்றுமை பேரணி’யைப் பாரதிய ஜனதா நடத்தியது. பல மாநிலங்கள் வழியாகச் சென்று முடிவில் காஷ்மீரில் உள்ள நகரில் தேசியக்கொடியை ஏற்றுவதுதான் திட்டம். இதற்காக நாடு முழுவதும் 1,500 பாரதிய ஜனதா தொண்டர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் ஒரே பெண்ணாக ஆனந்திபென் பட்டேலும் இடம் பிடித்தார்.

மிகுந்த பதற்றத்திற்குரிய பேரணி, பிரச்சினைகள் வரலாம் என்று தெரிந்தும் இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக தைரியமாகக் களம் இறங்கினார் ஆனந்தி. இந்தப் பேரணியில் ஒரே பெண்ணாக இவர் பங்கேற்றதன் மூலம் தேசியத் தலைவர்களுடன் நல்ல அறி முகம் கிடைத்தது. இது அரசியலில் இவர் அடுத்த நிலைக்குச் செல்லவும் வழிவகுத்தது.

துணிவு, தைரியத்துடன் செயல்பட்டால் நல்ல நிலைக்குச் செல்லலாம் என்பதற்கு குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நல்ல உதாரணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in