பத்து விரல்கள் செய்யும் மாயம்

பத்து விரல்கள் செய்யும் மாயம்
Updated on
2 min read

தினமும் சமைத்து, துணி துவைத்து, வழக்கமான வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதுடன் தங்களுக்கான ஆடைகளையும் நெய்கிறார்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்பி பழங்குடியினப் பெண்கள்.

“எப்போது நெய்யக் கற்றுக் கொண்டேன் என்று நினைவில்லை. என் அம்மா நெய்யும்போது பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது என் மகளும் என்னைப் பார்த்து கற்றுக் கொள்கிறாள்” என்று நெய்தபடியே பேசுகிறார் பழங்குடியினப் பெண் கீதா தாரா.

அசாம் மாநிலம் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள சோனாபூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கார்பி இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கார்பி இனப் பெண்களுக்கு ஆடை நெய்தல் என்பது அன்றாட வீட்டு வேலைகளில் ஒன்று. அவர்கள் சிறுவயதிலிருந்து வீட்டிலேயே நெசவு செய்து பழகுவதால் பல வண்ணங்களில் அழகான நூல் வடிவங்கள் கொண்ட ஆடைகளையும் அவர்களால் மிக எளிதாக நெய்ய முடிகிறது. நகரத்து வாழ்க்கையை மட்டுமே பார்த்து வளரும் எவரும் கார்பி பெண்கள் மிக இயல்பாகவும் லாகவமாகவும் ஆடைகள் நெய்வதைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.

கை கொடுக்கும் கைத்தொழில்

நவீன உலகின் அனைத்து அம்சங்களும் இன்னும் முழுமையாக ஊடுருவாத கிராமங்களில் சீனி மூர் கிராமமும் ஒன்று. தங்களது அடிப்படைத் தேவைகளைக் கிட்டத்தட்ட முழுமையாகத் தங்களின் உழைப்பாலேயே பூர்த்தி செய்து கொள்ளும் வாழ்க்கை முறை இவர்களுடையது. உணவுத் தேவையை அருகில் உள்ள மலைப் பகுதியில் இவர்கள் வளர்க்கும் காய்கறிகளும் பன்றிகளும் பூர்த்தி செய்கின்றன. கான்கிரீட் வீடுகள் கட்டும் பழகும் தொடங்கியிருந்தாலும் பெரும்பாலான வீடுகள் காடுகளில் உள்ள மூங்கில்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கின்றன.

கார்பி இனத்தின் பெண்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வேண்டிய ஆடைகளை ‘ஹால்’ என்ற மரத்தாலான இயந்திரத்தில் நெய்து கொள்கிறார்கள். ஆண்களுக்கான ‘சொல்சாங்’ என்ற ஆடை, பெண்களுக்கான ‘பிகோபினி’ என்ற ஆடை ஆகியவற்றை நெய்கின்றனர். பொதுவாக நீலம், கறுப்பு, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட நிறங்களையே பயன்படுத்துவதால் அவர்களின் ஆடைகள் பளிச்சென்று இருக்கின்றன. ஆடைகளுக்கான வண்ணங்களை முன்பு, மரங்களிலிருந்தும் காய்களிலிருந்தும் எடுத்தனர். ஆனால் இப்போது சந்தைகளில் கிடைக்கும் நூல்களையே பயன்படுத்துகின்றனர்.

பதினைந்து ‘கமுசாக்கள்’ (வேட்டி போன்ற ஆடை) நெய்ய ஒரு மாதம் ஆகும் என்கிறார் கீதா தாரா. பொதுவாக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே நெய்தாலும் இந்த முறை சொசைட்டியில் விற்பதற்காக அவர் நெய்கிறார்.

பொதுவாகப் பழங்குடிகள் தாய்வழி சமூகமாக இருப்பார்கள் என்று கூறப்பட்டாலும் கார்பி மக்கள் தந்தைவழி சமூகமாகத்தான் இருக்கிறார்கள். அதனால் நெய்தல் என்பது சமையலைப் போல பெண் களின் வேலையாகத் தான் இருக்கிறது.

“தினமும் பணிகளை முடித்த பிறகு இரவிலோ அல்லது பணிகளுக்கு இடையிலோ நெய்வேன்” என்கிறார் பழங்குடியினப் பெண் சகுந்தலா. நெய்தல் என்பது வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக மாறவில்லை என்பதற்கும் இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. மாறிவரும் சூழலில் பெண்களின் கைத்திறன் அவர்களுக்கு வருமானம் ஈட்டக் கூட்டிய தொழிலாக மாற்றப்பட்டால் அவர்களின் பொருளாதார சுதந்திரம் மேம்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in