

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வரை நடுத்தெருவில் வைத்து அடித்தே கொன்றுவிட்டனர். அதுவும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவர். சிறைக்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், அத்துமீறி உள்ளே நுழைந்து அந்த இளைஞரை வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணமாக்கி, உதைத்து கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடைபெற்ற இத்தகைய படுகொலையை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் எழுந்த சமூகக் கோபத்தின் வெளிப்பாடாகப் பார்க்க முடியுமா? டெல்லி நிர்பயா சம்பவத்தைக் கண்டித்துத் தெருவில் இறங்கிப் போராடிய ஒவ்வொருவரும், நிர்பயாவுக்கு மட்டுமல்ல அதற்கு முன் நடைபெற்ற பல பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கும் நீதிகேட்டு முழக்கமிட்டனர். அரசாங்கம் இறங்கிவந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக உத்தரவாதமளிக்கும்வரை போராட்டம் தொடர்ந்தது.
ஆனால், நாகாலாந்து சம்பவத்தின் பின்னணியை இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இனவாதம், மதவாதம், ஆணாதிக்கம் மற்றும் அரசியல் பின்னணி என்று அதற்குப் பின்னால் பல காரணங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
வன்முறையின் ஊற்றுக்கண்
அங்கு நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி வெளியான செய்தியில், ‘பலாத்காரம் செய்தவர் ஒரு முஸ்லிம், வங்க மொழி பேசுபவர், வங்க தேசத்தவராக இருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாகாலாந்தில் நாகா இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பரபரப்பான நிலை இருந்துவருகிறது. வங்காள தேசத்தவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துவிடுகிறார்கள் என்ற பிரச்சாரமும் தொடர்ந்து செய்யப்படுகிறது. ‘எங்கள் பெண்ணை’ இஸ்லாமிய, வங்காள மொழி பேசும் ஆண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிவிட்டான் என்ற கோபம்தான் வன்முறைக்கு அடிப்படையாக இருந்துள்ளது என்று கருத இடமிருக்கிறது. நாகா இனத்தைச் சேர்ந்த ஆண், பாலியல் பலாத்காரம் செய்திருந்தால் இதே போன்ற எதிர்வினை இருந்திருக்குமா என்ற கேள்வியைச் சுலபத்தில் ஒதுக்கிவிட முடியது.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை அந்தச் சமூகம் எப்படி நடத்தப் போகிறது என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது. அவளை எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் வாழ விட்டு விடுமா? பெண்ணின் உடல் ஒரு சாதியின் அல்லது ஒரு சமூகத்தின் கவுரவமாகக் கருதப்படுகிறது. அந்த உடலை இன்னொரு சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர் தீண்டும்போது அந்தக் கவுரவத்துக்கு ‘இழுக்கு’ ஏற்பட்டுவிட்டது என்ற உணர்வின் வெளிப்பாடாகவும் இந்த வன்முறையைக் கருதலாம்.
இத்தகைய ‘கவுரவம்’தான், சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து திருமணம் செய்வோரை ‘கவுரவக்’ கொலை செய்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. இப்படியொரு ‘கவுரவ’த்தின் எதிரொலியாக நடைபெற்றிருக்கும் இந்த வன்முறையால், பெண்களுக்கு எந்த விதத்தில் நன்மை ஏற்படும்?