Last Updated : 22 Mar, 2015 12:55 PM

Published : 22 Mar 2015 12:55 PM
Last Updated : 22 Mar 2015 12:55 PM

மனது வைத்தால் மாதம் ரூ.30 ஆயிரம்

பட்டம் படிக்காமல், பயிற்சி பெறாமல் சந்தைப்படுத்தும் உத்தியில் கலக்குகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவகி. மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் கலைப் பொருட்களைக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று விற்று வருகிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார்.

புதிய அடையாளம்

இளம் வயதிலேயே கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் தவித்த இவருக்குக் கைகொடுத்தது தமிழக அரசின் மகளிர் திட்டம். அதிகம் படிக்கவில்லை, குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மூலையில் உட்கார்ந்து அழவில்லை. வாழ்ந்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையோடு துணிச்சலுடன் போராடினார். பொருட்களை உற்பத்தி செய்வதைவிட அவற்றை விற்பனை செய்வதுதான் சவால் நிறைந்தது. தேவகி அந்தச் சவாலைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.

“என் வீட்டுக்காரர் துரைராஜ் கான்ஸ்டபிளா இருந்தார். இருபது வருஷத்துக்கு முன்னால திடீர்னு இறந்துட்டார். நான் ரெண்டு குழந்தைகளோட தனியா தவிச்சேன். காவல் துறையில எனக்கு வேலை கிடைச்சுது. அங்கே வேலை பார்க்க எனக்குப் பயமா இருந்துச்சு. அதனால அந்த வேலயை மறுத்துட்டேன்” என்று சொல்லும் தேவகி, அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து மகளிர் குழுவில் இணைந்திருக்கிறார். சிறிய மண் குவளைகளில் கலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பூங்கொத்து, சிறிய சாமி சிலை போன்ற 10 வகையான கலைப் பொருட்கள் தயாரிக்க, கரூரில் ஒரு மாதம் பயிற்சி பெற்றார். அதற்குப் பிறகு அவர்கள் குழுவில் உள்ள 12 பெண்களைக் கொண்டு கலைப் பொருட்களை வீடுகளிலேயே தயாரித்தார்கள். ஆரம்பத்தில் அந்தப் பொருட்களை வாங்க யாருமே முன்வரவில்லை. இருப்பினும் அவர்கள் துவண்டுவிடவில்லை.

சந்தைப்படுத்தும் உத்தி

2004-ல் சென்னையில் நடைபெற்ற மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியில் தேவகி பங்கேற்றார். பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் அவரது முதல் அனுபவம் அதுதான்.

மக்களிடம் எப்படிப் பேசிப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதை அந்தக் கண்காட்சியில் தேவகி கற்றுக் கொண்டார். தொடர்ந்து டெல்லியில் நடந்த ஒரு கண்காட்சியிலும் பங்கேற்றார். தேவகியின் பேச்சுத் திறமையைப் பார்த்து, மகளிர் திட்டம் சார்பில் வடமாநிலங்களில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு இவரைத் தொடர்ந்து அனுப்பினர். டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், திரிபுரா, ஹரியானா, சத்தீஸ்கர், காஷ்மீர் என்று இந்தியாவில் உள்ள பொரும்பாலான மாநிலங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்திருக்கிறார்.

வெளிநாட்டிலும் வரவேற்பு

ஒரு முறை மத்திய அரசு சார்பில் இலங்கைக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் இவருக்கு ஆர்டர் கிடைக்கிறது. மற்ற சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களையும் விற்பனை செய்வதுடன், அவர்களுக்கும் வாடிக்கையாளர்களை உருவாக்கித் தருகிறார். அதன் மூலமும் குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது.

பல மொழிகள் அறிமுகம்

“ஆரம்பத்துல நான் வெளியூர் போனப்போ குடும்பத்தோட ஆதரவு கிடைக்கலை. ஆனா காலப்போக்குல ஏத்துக்கிட்டாங்க. இப்போ நான் தொழில்முனைவோரா இருக்கறதைப் பெருமையா நினைக்கறாங்க. மொழி தெரியாம வடமாநிலங்களில் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. தன்னம்பிக்கையோடு அந்தக் கஷ்டத்தைக் கடந்துட்டேன். இப்போ ஆங்கிலம், இந்தி, வங்காள மொழிகள் தெரியும். இந்தியாவின் எந்த மூலைக்கும் தனியாக என்னால் போகமுடியும்” என்று சொல்லும் தேவகிக்குப் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்பது கனவு. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தக் கனவு நனவாகும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தேவகி.

படங்கள்: என். ராஜேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x