

1921 மார்ச் 8, பெண்களின் சுதந்திரச் சிறகுகளை பிணைத்திருந்த கட்டுப்பாடுகள் எனும் விலங்குகள் பலவற்றை நொறுக்கிய மகிழ்ச்சியைக் கொண்டாட முன்வந்த முதல் நாள். அன்று முதல் ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் இன்று எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டுவிட்ட போதும் பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள் அரங்கேறி வருவதையும் பார்க்கிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மட்டத்திலும் பெண்ணடிமைத்தனம் வெவ்வேறு வடிவங்களில் தன் கோரமுகத்தைக் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.
பின்தங்கியவர்கள் என்று பலரும் நினைக்கும் பழங்குடிகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது. முனைவர் பட்டத்துக்காக தருமபுரி மாவட்டப் பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது வியக்கத்தக்கப் பல உண்மைகளை அறியமுடிந்தது.
பெண்மை போற்றுதும்
விரும்பிய வாழ்க்கை வாய்க்கும்போது பெண்ணடிமைத்தனம் காணாமல் போகும் என்கிறார் பாரதியார். தாய்வழி சமூகக் கூறுகளைக் கொண்ட சமூகங்கள் அனைத்தும் பெண்ணுரிமையையும், பெண்களுக்கான சுதந்திரத்தையும் இயல்பாகவே வழங்கி வந்துள்ளன. இந்தியச் சமூகங்களில் பெரும்பாலானவை தாய்வழி சமூக மரபு கொண்டவையே. குடும்பத்தில் பல முக்கியப் பொறுப்புகளை பெண்களிடமே வழங்குவது, வீட்டின் மூத்த பெண்களின் பெயரைச் சொல்லி சந்ததியினரை அடையாளப்படுத்திக் கொள்வது உள்ளிட்டவையே தாய்வழி மரபு. ஒதுங்கியிருந்து வாழ்ந்தாலும் பழங்குடி இனத்தவரிடம் மட்டுமே இன்றுவரை இந்த மரபு மாறாமல் நிற்கிறது. நவீனவாதிகள் என அடையாளப்படுத்திக் கொண்டு, நவீன வளர்ச்சிகள் அனைத்தையும் நுகர்வோர் பார்வையில் பழங்குடியினர் காட்டுமிராண்டிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் தெரியலாம். ஆனால் பார்த்து சிலாகிக்கத்தக்க பல அரிய பழக்கங்கள் அவர்களிடம் இன்றுவரை உயிர்ப்பு குறையாமல் நீடிக்கின்றன.
விதவை மறுமணம் தொடங்கி பெண்களுக்கான சமூக, பொருளாதார, சமய உரிமைகளை வழங்குவது வரை அவர்கள் மத்தியில் ஆதியிலிருந்து ஒரே நிலைப்பாடுதான். குருமன் இனத்தில் சமூக ஒப்புதலுடன் மறுமணம் நிகழ்த்தப்படுகிறது. தொதுவர் (தோடா) இனத்தில் கைம்பெண்கள் தன் கணவரின் குடும்ப ஆண்கள் அல்லது விருப்பப்படும் ஆண்களை மறுமணம் செய்து கொள்ளலாம். குருமன் இனக் குழந்தைகளுக்கு முதல்முறையாக முடி இறக்கும்போது தாய்மாமன் மடிக்கு பதிலாக குடும்பத்தில் உயிருடன் உள்ள மூத்தப் பெண்ணின் மடியில் குழந்தையை அமர்த்தி முடி இறக்கும் வழக்கத்தை இன்றும் காணலாம். இப்படி, பெண்ணுரிமை தொடர்பாக பழங்குடிகளைப் பார்த்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
கட்டுரையாளர், தருமபுரி அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்.