Last Updated : 29 Mar, 2015 01:25 PM

Published : 29 Mar 2015 01:25 PM
Last Updated : 29 Mar 2015 01:25 PM

தற்காப்பே பெண் காப்பு

தி ருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்ததுமே வாழ்வு நிறைவுபெற்றுவிட்டதாக ஒரு மலைக் கிராமப் பெண் நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த நிறைவுப் புள்ளியையே தன் புது வாழ்க்கைக்கான தொடக்கப் புள்ளியாக மாற்றியிருக்கிறார் செந்தமிழ் செல்வி. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பலரும் நினைக்கும் தற்காப்புக் கலையை இரண்டே ஆண்டுகளில் கற்றுக் கொண்டதுடன் அதை ஏழை மாணவிகளுக்குக் கற்றுத் தருகிறார். செந்தமிழ்செல்வி எப்படியொரு சூழ்நிலையில் கராத்தே கலையைக் கற்றுக் கொண்டார் தெரியுமா?

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, ஜவ்வாலுமலை புதூர் நாடு என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி. வசதியற்ற குடும்பத்தின் மூத்த மகள் இவர். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த செந்தமிழ்செல்வி, தன் திருமணத்துக்குப் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அதனால் தனியார் நிறுவனத்தில் 2 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார். தினமும் காலை எட்டு மணிக்கு வேலைக்குச் சென்றால் வீடு திரும்ப இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.

பாதுகாப்பு கவசம்

திருப்பத்தூர் அடுத்த வெங்கலாபுரம் கிராமத்துக்கு இரவு நேரத்தில் தனியாக வீட்டுக்கு வரும்போது வழியில் ஏற்படும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்க தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார். மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான தனக்குத் தற்காப்புக் கலை கற்றுக் கொடுப்பார்களா என்ற சந்தேகம், அந்த ஆர்வத்துக்குத் தடைபோட்டது. திருப்பத்தூர் ‘பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூட்’ என்ற கராத்தே பயிற்சி மையத்தில் தன் மூத்த மகளைச் சேர்த்த செந்தமிழ்செல்வி தன் ஆசையை, கராத்தே மைய பயிற்சியாளர் கதிரவனிடம் கூறினார். கலையைக் கற்றுக்கொள்ள வயது தடையில்லை, தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும் என நம்பிக்கை தந்ததுடன் தாய், மகள் இருவருக்கும் பயிற்சி கொடுத்தார் கதிரவன்.

இலவச பயிற்சி

பொதுவாக மூன்று ஆண்டுகளில் கராத்தே பயிற்சி சரியாக முடித்தவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப்படும். செந்தமிழ்செல்விக்கு இருந்த வேகமும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் அவருக்கு இரண்டு ஆண்டுகளிலேயே பிளாக் பெல்ட் வாங்கித் தந்தது.

தொடர்ச்சியான பல பயிற்சிகள் மூலம், பெண்களுக்கான தனி பயிற்சியாளராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதன் மூலம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று தற்காப்பு கலையில் பயிற்சியளிக்கத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் வசதியற்ற மாணவிகளுக்குத் தற்காப்புக் கலையை இலவசமாகக் கற்றுத் தருகிறார்.

துணிவே துணை

இவரிடம் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள் இந்திய அளவில் 15 பரிசுகளைப் பெற்று வேலூர் மாவட்டத்துக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர். அதிலும் 9 முதல் பரிசுகளைத் தமிழக அளவில் அரசுப் பள்ளி மாணவிகள் பெற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தில் பிறந்தவள் நான். பள்ளிப் படிப்பைத் தாண்டி அடுத்த நிலைக்கு என்னால போக முடியலை. திருமணத்துக்குப் பிறகு பல துன்பங்களை அனுபவித்தேன். மனதளவில் உடைந்துபோனேன். வீரம் இருந்தால் ஒரு பெண் எத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவாள். அதனால்தான் கராத்தே கற்றுக்கொண்டேன். பல போராட்டங்களுக்கு நடுவேதான் இந்தப் பயிற்சியைத் தொடங்கினேன்” என்று சொல்லும் செந்தமிழ்செல்வி, அரசுப் பள்ளி மாணவிகள் பரிசு பெறுவதே தன் உழைப்புக்கான ஊதியமாக நினைக்கிறார்.

எதற்கெடுத்தாலும் தயங்கி நிற்கும் பெண்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் கராத்தே கற்றுக்கொண்ட செந்தமிழ்செல்வியைப் புகழ்கிறார் அவருக்குப் பயிற்சியளித்த சரவணன். “தன்னால் சாதிக்க முடியும் என்ற அவரது தன்னம்பிக்கை வீண் போகவில்லை. இன்று ஆறாயிரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியளித்து வருகிறார் என்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார் சரவணன். அடுக்கிவைத்த செங்கற்களை ஒரே அடியில் தூளாக்குகிறார் செந்தமிழ்செல்வி. அதே உறுதியுடன் வாழ்க்கையையும் எதிர்கொள்கிறார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x