

பெண்கள் நடத்தும் தொழில் என்றால் அப்பளம், வடகம், ஊறுகாய் என்று உணவுப் பொருள் தயாரிப்புத் தொழிலாகத்தான் இருக்கும் என்பது பலரது நினைப்பு. ஆனால் திருச்சியைச் சேர்ந்த ராஜமகேஸ்வரி, ராஜேஸ்வரி, சாந்தி, வாசுகி, ஜீசஸ்மேரி உள்ளிட்ட 25 பெண்கள் அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார்கள். திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலையில் இருந்து மின் உற்பத்திக்குத் தேவையான கொதிகலன் (பாய்லர்) உதிரி பாகங்கள் செய்துதரும் ‘ஜாப் வொர்க்’ தொழிலை இவர்கள் செய்து வருகிறார்கள்.
2008-ம் ஆண்டில் இதற்காகப் பயிற்சி பெற்ற இந்த பெண்கள், இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுவாகச் சேர்ந்து புதுக்குடி அருகே 11 யூனிட்களை தொடங்கினர். ஒவ்வொரு யூனிட்டையும் ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கியவர்கள், மொத்தம் 11 யூனிட்கள் மூலம் ஆண்டுக்கு 300 டன் வரை உதிரி பாகங்கள் தயார் செய்து பெல் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனர். இவர்களுடன் ‘வீட்’ அமைப்பில் பயிற்சியில் கலந்துகொண்ட பலரும் இரும்பு சம்பந்தமான தொழில் என்றவுடன் ஒதுங்கிக்கொண்டனர். அடுத்தாக யூனிட் போடும் இடத்தைத் தேர்வு செய்யச் சென்றபோது, இது நமக்கு சரிப்பட்டு வராது என்று மேலும் பலர் விலகிவிட, இந்தக் குழுவினர் மட்டும் துணிந்து களமிறங்கினர்.
“எங்கள் படிப்புக்கும் நாங்கள் செய்யும் இரும்புத் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், எங்களிடம் முயற்சியும் பயிற்சியும் நிறைய இருக்கிறது” என்கிறார் ராஜமகேஸ்வரி. சிறு சிறு பிரச்சினைகளைத் தவிர்த்து நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்த இந்தத் தொழிலால் கிடைத்த லாபத்தைக்கொண்டு வங்கிக் கடன், அடமானம் வைத்த நகைகளைத் திருப்புவது என ஏறுமுகமாக தொழில் சென்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
தடையை வென்ற உறுதி
“2013 டிசம்பரில் பெல் நிறுவனத்தில் இருந்து, ‘ஜாப் வொர்க்’ எடுப்பவர்கள் மூலப் பொருட்களை அவர்களே கொள்முதல் செய்ய வேண்டும் என்று வெளியான அறிவிப்பால் கலங்கினோம். நடுத்தர பின்புலத்தைக்கொண்ட எங்களுக்கு ரா-மெட்டீரியல் பர்ச்சேஸ் செய்ய கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்கான உத்தரவாதத்தை வங்கிக்கு அளிக்க எங்களுக்கு வழியில்லை. அதையடுத்து 2014 ஜனவரியில் எங்கள் யூனிட்களில் வேலை நடப்பது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. என்ன செய்வது என்று விழி பிதுங்கியபோது மாவட்ட நிர்வாகம் மற்றும் பெல் நிறுவனத்திடம் எங்களின் நிலையை எடுத்துக் கூறினோம்” என்கிறார் வாசுகி.
இட வாடகை, காவலாளி சம்பளம், மின் கட்டணம் செலுத்தி வேலை நடக்காதபோதும் யூனிட்டைப் பராமரித்து வந்தார்கள். 11 மாதங்கள் கடந்த நிலையில் தாக்குப் பிடிக்க முடியாத 150-க்கும் மேற்பட்ட பெரிய யூனிட்களையெல்லாம் மூடிவிட்டனர். ஆரம்பத்தில் தொழில் தொடங்க இவர்களுக்கு உதவியாக இருந்த திருச்சி மாவட்ட சி.ஐ.ஐ முன்னாள் தலைவர் ராணி முரளிதரன் மற்றும் பாரதிதாசன் கல்லூரி மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை ஆகியோரின் உதவியுடன் தொடர்ந்து முயற்சித்ததால், இவர்களுடைய யூனிட்களுக்கு மட்டும் பெல் நிறுவனத்தினர் சிறப்பு அனுமதியுடன் மெட்டீரியல் வழங்க ஒப்புதல் அளித்தனர்.
“முதல் கட்டமாகக் கடந்த மாதம் யூனிட்டுக்கு 50 டன் மெட்டீரியல் கொடுத்தனர். தற்போது முழுவீச்சில் வேலை நடக்கிறது. அடுத்த அத்தியாயத்துக்குத் தயாராகிட்டோம்” என்று சொல்லும் ஜீசஸ்மேரியின் கண்களில் ஒளிவிட்ட நம்பிக்கையை, உடனிருந்த தோழிகளின் கண்கள் பிரதிபலித்தன.