Published : 08 Mar 2015 11:31 AM
Last Updated : 08 Mar 2015 11:31 AM

கோபனாரி டூ டெல்லி: அசத்தும் பழங்குடிப் பெண்கள்

வேண்டா வெறுப்பாகத் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிதான் தங்களுக்கு நல்லதொரு அடையாளம் தந்திருப்பதாகச் சொல்லும் சுலோச்சனா, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதிக்குள்ளிட்ட கோபனாரி மலைக்கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்கள் குழுவில் இருக்கும் காளியம்மாள், உமா மகேஸ்வரி, ராதா, சுமதி, ப்ரியா போன்றோரும் இதே கோபனாரியைச் சுற்றியிருக்கும் மலைக்கிராமங்களைச் சேர்ந்த இருளர் பெண்கள். இவர்கள் டெல்லி கண்ணாட் பிளேஸில் ஜனவரியில் நடந்த ஆதிவாசிகள் உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் பாரம்பரிய உணவு வகைகளான மூங்கில் அரிசியில் புட்டு, பாயசம், லட்டு, தோசை, சாமை அரிசி பிரியாணி, சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி சாதம், தினை அதிரசம், கம்பு களி, கம்பு ரொட்டி, கம்பு கொழுக்கட்டை என 20-க்கும் மேற்பட்ட உணவு வகைளைச் சமைத்து, பாரம்பரிய உணவு வகைகளின் பெருமையைப் பறைசாற்றினர். அந்த வெற்றியால் அடுத்த மாதமே டெல்லியில் நடந்த உணவுத் திருவிழாவுக்கு அழைப்பு வந்தது. அதிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார்கள்.

“நாலுவருஷம் முன்னால எங்க ஊருக்கே வந்து சிலர் சுயதொழில் கத்துக் கொடுக்கிறோம். உங்ககிட்ட ஓவியம், கலை, தையல்னு எந்தத் திறமை இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவோம். எதிர்காலத்துல அதை வச்சு நீங்க சொந்தக்கால்ல நிக்கலாம். உங்க குழந்தைகளை, குடும்பத்தைக் காப்பாத்தலாம்னு என்னன்னவோ சொல்லிக் கூப்பிட்டாங்க. மலைமக்களுக்கே உரிய குணம். வீட்டுக்குள்ளேயே ஓடி ஒளிஞ்சிக்கிட்டோம். அப்புறம் ஃபாரஸ்ட் அதிகாரிகள் வந்து, பயிற்சி எடுத்துக்குங்க… அப்பதான் காட்டுக்குள்ளே குடியிருக்கவே விடுவோம். இல்லைன்னா எல்லோரும் கீழ்நாட்டுக்குப் போயிட வேண்டியதுதான்னு சொன்ன பின்னாடிதான் வேண்டா வெறுப்பா அந்தப் பயிற்சியில் கலந்துக்கிட்டோம். இப்ப அதுதான் எங்களை டெல்லி வரைக்கும் போய்க் கண்காட்சியில் கலக்கிட்டு வர வச்சிருக்கு!” என்கிறார் சுலோச்சனா.

தலைநகரில் தனித்துவம்

இவர்களுக்கு ஜனவரி கண்காட்சியில் 15 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பிப்ரவரியில் அது 30 ஆயிரமாக உயர்ந்தது. அந்தக் கண்காட்சியில் 17 மாநிலங்களிலிருந்து பல்வேறு பிரிவைச் சேர்ந்த மலைமக்கள் வந்திருந்தார்கள். அந்தந்த நாட்டுச் சமையலைச் செய்தனர்.

“அதில் 20-க்கும் மேற்பட்ட வகைகளைச் செய்தது நாங்கதான். முழுக்க முழுக்க சைவ உணவு மட்டுமல்ல, இயற்கையாக விளைந்த பொருட்களை வைத்துச் சமைத்தவர்கள் என்ற பாராட்டும் எங்களுக்குக் கிடைத்தது. அநேகமாக இனி டெல்லியில் எங்கள் உணவு இல்லாமல் மலைமக்கள் உணவுத் திருவிழாவே இருக்காது!’’ என்று பூரிப்புடன் பேசுகிறார்கள் குழுவினர்.

கோவையில் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ‘ஜன் சிக்ஸான் சன்ஸ்தான்’ (jss) என்ற அமைப்பினர் நான்கு வருஷடங்களுக்கு முன் இவர்களைப் பல்வேறு பயிற்சிக்காக அழைத்தார்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த 108 பேர் 8 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். முதலில் தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி பயிற்சி. பிறகு அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும் பயிற்சி.

“எனக்கு ஜே.எஸ்.எஸ்லயே பெயின்டிங் டீச்சர் வேலை கொடுத்துட்டாங்க. மலைக் கிராமங்களில் உள்ள பெண்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் கொடுப்பதும், எங்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களைத் தேசிய அளவில் நடக்கும் கண்காட்சிகளுக்குக் கொண்டு போய் வைப்பதும்தான் என் வேலை. அப்படி இதுவரை நூற்றுக்கணக்கான கண்காட்சிகளில் எங்க பெண்களோட ஓவியங்கள் இடம் பெற்றிருக்கு” என்கிறார் சுலோச்சனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x