

பெண்களின் ஆதித் தொழில் விவசாயம் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள் விவசாயத்தில் புதுமை படைக்கும் பெண்கள். சமீபத்தில் உளுந்து சாகுபடியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று பிரதமரிடம் விருது பெற்ற விசாலாட்சியும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கொந்தமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி. இவருடைய கணவர் வேலு, புதுச்சேரியில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் லோடுமேனாகப் பணியாற்றுகிறார். கணவர் வேலைக்குச் சென்றுவிட, விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார் விசாலாட்சி. விதையை நட்டோம், அறுவடை செய்தோம் என்று தன் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாமல், விவசாயத்திலும் தனித்துவம் இருக்க வேண்டும் என விசாலாட்சி நினைத்தார். அதற்கு விசாலாட்சியின் கணவரும் துணை நிற்க, புதியதொரு சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
வானூர் வேளாண்மை அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்த வம்பன்-5 ரக உளுந்தைத் தங்களது ஒரு ஹெக்டர் நிலத்தில் விதைத்தார். பின்னர் வேளாண் அலுவலர்களின் வழிகாட்டுதல்படி புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி சாகுபடி செய்ததில் 1,792 கிலோ உளுந்தை அறுவடை செய்திருக்கிறார். இதுவே கடந்த ஆண்டில் அதிகப்படியாக செய்யப்பட்ட மகசூல் என தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் அறிவித்தது. பிப்ரவரி 19-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்காரில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கிரிஷ் கர்மான் விருதையும், இரண்டு லட்ச ரூபாய் வெகுமதியையும் பெற்றிருக்கிறார்.
“கிராமத்துல பொறந்த எனக்கு உலக விஷயம் எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது எல்லாமே விவசாயம் மட்டும்தான். மூணாவது வரைக்கும் படிச்சிருக்கேன். பயிர் செஞ்சு, மகசூல் எடுத்தா விருதும் பரிசும் கிடைக்கும்னு எதிர்பார்த்து நான் விவசாயம் செய்யலை. நமக்கு சோறு போடற பூமி இதுங்கறதால அக்கறையா பயிரைப் பாதுகாப்பேன். என் வீட்டுக்காரர் வேலைக்கும், என் மகன் ரகு காலேஜுக்கும் போயிடுவாங்க. கழனியில நானே களை எடுத்து, நீர் பாய்ச்சி பொறுப்பா பார்த்துக்கிட்டேன். நான் கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்கிட்ட இந்த மண்ணுதான் இன்னைக்கு எனக்கு பிரதமர் கையால விருது வாங்கித் தந்திருக்கு” என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார் விருது வென்ற விசாலாட்சி.
இதற்கு முன் இதே நிலத்தில் 1,600 கிலோ உளுந்தை உற்பத்தி செய்திருக்கிறார். உளுந்து, மண்ணில் உள்ள சத்துகளை முழுமையாகக் கிரகித்துக்கொள்வதால் அடுத்து உளுந்தை சாகுபடி செய்யாமல் சவுக்கைப் பயிரிட்டிருக்கிறார் விசாலாட்சி.
“இந்தச் சவுக்கு இலைகள் பூமிக்குள் விழுந்து மக்கி எருவாக மாறிடும். செயற்கை உரங்களைவிட இந்த இயற்கை எரு, பூமித்தாயைத் தெம்பாக்கிடும். அதனால அடுத்து உளுந்து சாகுபடி செஞ்சு, இப்போ மகசூல் எடுத்ததைவிட அதிகமா மகசூல் எடுக்கணும்” என்று சொல்கிறார் விசாலாட்சி. அவர் நிச்சயம் அதைச் சாதிப்பார் என்பதைச் சொல்கின்றன அவரது முகத்தில் பளிச்சிடும் உறுதியும் நம்பிக்கையும்.