

மருந்துகொடுப்பதுடன் நின்றுவிடாமல், நோய் வராமல் தடுப்பது எப்படி எனச் சொல்லிக் கொடுப்பதே மருத்துவம். பயமுறுத்துவதைவிட, வாழ்க்கை மீதான பிடிப்பை உருவாக்குவதுதான் ஒருவரைத் தவறான பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான வழி” என்கிறார் டாக்டர் கீதா கணேஷ்.
உடுமலையில் பல் மருத்துவராகப் பணியாற்றும் இவர், புகையிலை ஒழிப்பைக் கையிலெடுத்து கிராமங்கள்தோறும் பயணிக்கிறார். புகையிலைப் பழக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் சேவையைச் செய்துவருகிறார். தன் கணவர் ராஜ்கணேஷுடன் இணைந்து 2005-ம் ஆண்டு முதல் கண் மருத்துவ முகாம்களை நடத்திவரும் கீதா, 2010-க்குப் பிறகு புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் கவனம் செலுத்திவருகிறார்.
வெற்றுப் பிரசங்கம் அல்ல
விழிப்புணர்வு என்ற பெயரில் வார்த்தைப் பிரசங்கம் செய்வதில் கீதாவுக்கு உடன்பாடு இல்லை. கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து, புகையிலைப் பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைத்து, ஒவ்வொருவராக மீட்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு உடுமலை அருகே எலயமுத்தூர் கிராமத்தில் இவர்கள் கண் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இறந்துபோன 25 வயது பெண்ணின் கண்களைத் தானமாகக் கொடுப்பதற்காக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கீதாவை அணுகியிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் மரணத்துக்கான காரணம் கீதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகையிலைப் பழக்கம் அதிகமாக இருந்ததால், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டு அந்தப் பெண் இறந்திருக்கிறார்.
“புகையிலைக்கு அடிமையாகி ஒரு பெண் சின்ன வயசுல இறந்தது எத்தனை துயரமோ, அவளது இழப்பால் கணவர், குழந்தை என ஒரு குடும்பமே நிலைகுலைந்து நின்றதும் அளவிட முடியாத துயரம்தான். இது ஒரு உதாரணம் மட்டும்தான். கிராமங்களில் இதுபோன்ற சம்பவங்கள், அவர்கள் அடிக்கடி சந்திக்கிற நிகழ்வாக இருக்கின்றன” என்று தான் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கிராமங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் புகையிலைக்குத் தங்கள் குடும்ப உறுப்பினரை இழக்கிறது. 2003-ம் ஆண்டு வெளியான புள்ளி விபரப்படி, புகையிலைப் பழக்கத்தால் ஒரு நாளுக்கு 2500 பேரும், ஒரு வருடத்துக்கு 10 லட்சம் பேரும் இறக்கிறார்கள். இந்த நிலைமை இன்று பல மடங்கு அதிகரித்திருக்கும்.
“இதையெல்லாம் பார்த்த பிறகுதான் நம் ஊர், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிக்கணும்னு தோணுச்சு. அதற்காகத் தொடர்ந்து நாலு வருஷமா புகையிலை எதிர்ப்பு இயக்கங்களை நடத்திட்டு இருக்கேன்” என்கிறார் கீதா கணேஷ்.
கிராமங்களைத் தத்தெடுப்போம்
விழிப்புணர்வு பிரச்சாரங்களோடு மட்டும் கீதா தன் சேவையை நிறுத்தவில்லை. பல கிராமங்களைத் தத்தெடுத்து புகையிலை பழக்கத்தை வேரறுத்து வருகிறார். கல்லூரிகளிலும் புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.
கடந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில், ஊராட்சி நிர்வாக உதவியுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புகையிலைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினார். அதில் மருத்துவ ஆலோசனை கொடுத்ததுடன் புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபடத் தேவையான மருந்துகளையும் கொடுத்து ஏராளமானோரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீள உதவினார். கடந்த மாதம் சின்னநெகமம் கிராமத்திலும் பலரை புகையிலைப் பழக்கத்திலிருந்து மீட்டிருக்கிறார் கீதா.
மண்டையோடு படம் இருந்தாலும் சரி, மரண பயம் காட்டும் வாக்கியம் இருந்தாலும் சரி, புகையிலையின் கொடுமையை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆண்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் பெண்களும் புகையிலைக்கு அடிமையாகி உள்ளனர். ஒரு செயல் நம் உடலுக்கு நல்லதா, கெட்டதா என்ற தெளிவு இல்லாமல் அதைத் தங்கள் பழக்கமாக வைத்திருப்பது எத்தனை ஆபத்தானது? அந்த ஆபத்தை மக்களுக்கு உணர்த்துவதையே தன் கடமையாகச் செய்துவருகிறார் கீதா கணேஷ்.
டாக்டர் கீதா கணேஷ்
நம்பிக்கைக் குரல்
கீதாவிடம் ஆலோசனை பெற்று புகைப்பழக்கத்தைக் கைவிட்ட ஜனார்த்தனன், “இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் டாக்டர் கீதா, புகையிலைப் பழக்கம் உள்ள ஒவ்வொருவரையும் தனிக்கவனம் எடுத்து ஆலோசனை வழங்கினார். சொந்த செலவில் மருந்துகளை வாங்கிக் கொடுத்தார்.
அதன் பலன் இன்று தெரிகிறது. கணபதிபாளையத்தில் நான் உள்பட கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல், இந்தப் புகையிலைப் பழக்கத்தை முற்றிலுமாக கைகழுவி விட்டோம்” என்கிறார். கீதாவின் வழிகாட்டுதலும் ஆலோசனையும் ஜனார்த்தனனைப் போலவே பலரது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில், ஊராட்சி நிர்வாக உதவியுடன் பொதுமக்கள் அனைவருக்கும் புகையிலைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினார். அதில் மருத்துவ ஆலோசனை கொடுத்ததுடன் புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபடத் தேவையான மருந்துகளையும் கொடுத்து ஏராளமானோரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீள உதவினார். கடந்த மாதம் சின்னநெகமம் கிராமத்திலும் பலரை புகையிலைப் பழக்கத்திலிருந்து மீட்டிருக்கிறார் கீதா.
“இதுவரை சுமார் 500 பேருக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்திய திருப்தி ஏற்பட்டுள்ளது. கிராமங்கள்தோறும் இந்தப் பணியைத் தொடர்வது பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. ஒரு கிராமத்தில் பணி முடிந்துவிட்டால் அங்கு ஒரு குழுவை அமைத்து, தொடர்ந்து கண்காணிக்கிறோம்” என்று சொல்லும் கீதா, அடுத்தடுத்த கிராமங்களைத் தேடி தனது பயணத்தைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்!