கறுப்பு வெள்ளையில் மிளிரும் கலைவண்ணம்!

கறுப்பு வெள்ளையில் மிளிரும் கலைவண்ணம்!
Updated on
1 min read

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ப்ரியா நடராஜனின் கைவண்ணத்தில் சென்னை வின்யாஸா கலைக் கூடத்தில், ‘லைன்ஸ் ஆஃப் ஹெரிடேஜ்’ என்னும் தலைப்பில், எண்ணற்ற கோயில்களின் கோபுரங்களை ஓவியங்களாக ஒரே இடத்தில் தரிசிக்க முடிந்தது. இந்த மாதம் 10-ம் தேதி வரை நீங்களும் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பிரம்மாண்டமான நந்தி, பேளூர், ஹளபேடு, ஹம்பி கோயில்கள், கோனார்க் சூரியக் கோயில், குதுப்மினார், தாஜ்மகால், ரிப்பன் கட்டிடம் என 70-க்கும் அதிகமான கறுப்பு, வெள்ளை ஓவியங்களை இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளார் ப்ரியா.

“கோயில் கோபுரமோ, வரலாற்றுப் பெருமை வாய்ந்த நினைவிடங்களோ எதுவாக இருந்தாலும் எந்தக் கோணத்தில் அதை வரையலாம் என்பது பிடிபட வேண்டும். அப்படிப்பட்ட கோணம் கிடைத்தவுடன், அந்தக் கோணத்தில் பிடிபடும் விஷயங்களை பென்சிலில் ‘ஸ்கெட்ச்’ செய்து கொள்வேன். அவ்வளவுதான். அந்தக் கோணத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை மாதிரிக்கு வைத்துக்கொண்டு வரையத் தொடங்கிவிடுவேன். சில படங்களை வரைய ஒரு வாரம் ஆகும். சிலவற்றை வரைந்துமுடிக்க மாதக் கணக்கில் ஆகும். அப்படிக் கடந்த நான்கு ஆண்டுகளாக வரைந்த ஓவியங்களைத்தான் இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறேன்” என்கிறார் ப்ரியா.

சிறுவயதிலிருந்தே இவரின் கைப்பழக்கத்துக்கு வந்துவிட்டது ஓவியம். நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம், தைல வகைகளில் வரையும் திறமை பெற்றிருந்தாலும் இவரது விருப்பமான தேர்வு கறுப்பு, வெள்ளை வண்ணங்களைக் கொண்டு வரையும் ஓவியங்களே.

“எனக்கு என்னவோ வண்ணங்களில் அவ்வளவு ஈர்ப்பில்லை. கறுப்பு, வெள்ளை ஓவியங்கள்தான் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. இண்டியன் இங்க் கொண்டு வரையும்போது, மையைத் தொட்டுத் தொட்டு வரைய வேண்டும். கறுப்பு, வெள்ளை வண்ணத்தில் தவறு நேர்ந்துவிட்டால் திருத்தவே முடியாது. திருத்தினாலும் அது அப்பட்டமாகத் தெரிந்து ஓவியத்தின் சிறப்பைக் குறைத்துவிடும். ரோட்ரிங் மை பேனாக்கள் வந்தபிறகு சில சிரமங்கள் குறைந்திருக்கின்றன” என்கிறார்.

பூரி ஜகன்னாதர், பனாரஸ் கோயில்கள், பிரகதீஸ்வரர் கோயில் முகப்புகளையும் நினைவுச் சின்னங்களையும் பழைய ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டும் வரைந்திருக்கிறார் ப்ரியா.

“இப்படி வரைந்ததன் மூலம், கோயில்களில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் அவை அமைந்திருக்கும் இடங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு இன்றைக்கு மாறியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அந்தவகையில் சில ஓவியங்கள் இட அமைப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக இருக்கும்” என்கிறார் ப்ரியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in