இசையின் மொழி: செண்டை ஒரு சுகமான சுமை!

இசையின் மொழி: செண்டை ஒரு சுகமான சுமை!
Updated on
1 min read

தமிழகத்தின் கோயில் விசேஷங்களில் நாகசுரம் தவறாமல் இடம்பெறுவதுபோல் கேரளத்தின் கோயில் விசேஷங்களில் இடம்பெறும் தாள வாத்தியம் செண்டை. மரத்தில் உருளை வடிவத்தினாலான இந்தத் தாள வாத்தியத்தின் மேற்பகுதியும் அடிப்பகுதியும் தோலால் மூடப்பட்டிருக்கும். மேற்பகுதியில் இரண்டு குச்சிகளைக் கொண்டு ஒலி எழுப்புவார்கள். பொதுவாக இந்த வாத்தியத்தை ஆண்கள் மட்டுமே வாசிப்பர். தற்போது பெண்களும் இந்த வாத்தியத்தை விருப்பமுடன் கற்றுக்கொண்டு வாசித்துவருகின்றனர்.

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா என்னும் ஊரில் செயல்படும் ‘ஸ்பந்தனா ஜனா விகாசனா’ மகளிர் சுய உதவிக் குழுவினர் ‘பகவதி மகிளா செண்டை குழு’வைத் தொடங்கியிருக்கின்றனர்.

“சுய உதவிக் குழுக்கள் என்றாலே ஊறுகாய், அப்பளம், பினாயில், மெழுகுவர்த்தி ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்வார்கள் என்னும் பலரின் நினைப்புக்கு மாறாக எங்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் குழுவில் இருக்கும் காமாட்சியின் கணவர் துக்காராம்தான் எங்களுக்குச் செண்டை வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். செண்டை வாசிப்பின் ஆரம்பப் பாடத்தை 15 நாட்களில் நாங்கள் கற்றுக் கொண்டோம். இன்னும் தீவிரமாக முயன்றால் யக் ஷகானா நிகழ்த்துக் கலையின்போது வாசிக்கும் அளவுக்குத் தயாராகிவிடுவோம். உள்ளூரில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் வாசிக்கிறோம். மைசூர் தசரா விழா குறித்து கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று அறிவிக்கும் பணியைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்துவருகிறோம்” என்கிறார் குழுவில் ஒருவரான சர்மிளா.

மகளிர் செண்டை குழுவில் தனலட்சுமி, காமாட்சி, சர்மிளா, கீதா, சுசித்ரா, அஸ்வினி, பாரதி ஆகியோர் உள்ளனர். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பல பெண்களும் ஆர்வமாகச் செண்டை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார்களாம்.

“ஏறக்குறைய 20 கிலோ எடையுள்ள வாத்தியத்தை தோளில் சுமந்துகொண்டு வாசிக்கும்போது, வாத்தியத்தின் எடையைத் தாங்கமுடியாமல் தோள்பட்டைகள் வலிக்கும். ஆனாலும் அதன்மூலம் எங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியின் கனம் அதிகம். அது ஒரு சுகமான சுமை” என்கின்றனர் பகவதி மகிளா குழுவைச் சேர்ந்த சுசித்ராவும் சர்மிளாவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in