

அழுகையும் புலம்பலும் அந்த அறையைச் சூழ்ந்து கொள்கின்றன. சோகத்தில் இருக்கும் அவலட்சணமான அரக்கன் ஒருவன் தன்னை முதல் முறையாகக் கண்ணாடியில் பார்த்துவிட்டதுதான் காரணம். இப்போது அவன் பயத்தால் திகைத்துப்போய் நிற்கிறான். அவன் ரத்தவோட்டம் நின்றுவிட்டது, இதயம் துடிக்க மறந்துவிட்டது! பயத்தில் குழந்தைகள் தங்கள் காதுகளை மூடிக்கொள்கிறார்கள்.
வானவில் நிறங்களில் தொப்பி போட்டுக் கொண்டு, சிவப்பு கவுன் அணிந்தபடி நிற்கும் கீதா ராமானுஜம்தான் அந்த அரக்கன். கோபம் முதல் குறும்புவரை அத்தனை பாவங்களையும் அநாயாசமாக நிகழ்த்திக்காட்டும் கீதா ராமானுஜம் பிரபல கதைசொல்லி. குறும்புத்தனமாகக் குரங்குகளைப் போலவும், ரீங்காரமிடும் வண்டுகளைப் போலவும் அச்சு அசலாக நடித்துக்காட்டும் கீதாவைப் பார்த்துக் குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கோயம்புத்தூரில் உள்ள புக் மார்க் நூலக செயல்பாட்டு மையத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட கதைசொல்லும் நிகழ்வு அது.
என் முதல் கதைசொல்லி!
கீதாவின் சிறு பிராயம் கதைகளால் நிரம்பியது. அவருடைய அப்பா இரவில் வீடு திரும்பியதும் அவர்கள் வீடு போர்க்களமாக மாறுமாம். வேறொன்றுமில்லை! அவர் அப்பாவும் ஓர் சிறந்த கதைசொல்லி. உலகப் போர்கள், விடுதலைப் போராட்டம், புரட்சி என உலக வரலாற்றைப் புத்தகங்களில் புரட்டுவதற்கு முன்பே கீதாவின் கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அவருடைய அப்பா.
வகுப்பில் சாகசம்
குழந்தைப் பருவத்தில் வரலாற்றின் மீது உருவான ஈர்ப்பு, பிற்காலத்தில் கீதாவைச் சமூக ஆய்வு ஆசிரியராக மாற்றியது. அவர் வகுப்பில் வரலாற்றுப் பாடம் சாகசக் கதைகளாக உயிர் பெற்றன. “நாங்கள் மரத்தடியில் உட்கார்ந்து படித்தோம். கைவினைக் கலையின் ஊடாகப் பண்டைய நாகரிகங்களைக் குழந்தைகள் கற்றுக் கொண்டனர்” என்கிறார் கீதா.
“பண்டைய காலத்து மன்னர்களும் விவசாயிகளும் பயன்படுத்திய நாணயங்கள், அவற்றின் உலோகங்களைப் பற்றி விவாதிப்போம். அதன்பின், அதே உலோகங்களைக் கொண்டு, வகுப்பில் மாணவர்கள் பண்டைய நாணயங்களை உருவாக்குவார்கள். அப்போது அந்த வகுப்பு ஒரே சமயத்தில் கைவினை, கணிதம், வேதியியல் என பல துறை பாட வகுப்பாக மாறிவிடும்” என்கிறார்.
இருக்க வேண்டிய இடம்!
கீதாவின் கற்பிக்கும் முறை குழந்தைகளையும் பெற்றோரையும் பெரிதும் ஈர்த்தது. ஆனால், அது வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரை நூலகராக மாற்றியது. இந்த நடவடிக்கைக்கு அஞ்சிக் கதை சொல்வதை கீதா நிறுத்திவிடவில்லை. அதன்பின் நூலகத்திலேயே கதை சொல்லும் அமர்வுகள் தொடர்ந்தன.
இப்படியாகக் கீதாவின் கதை ஒன்றைக் கேட்ட ஒரு குழந்தையின் பெற்றோர், மக்கள் மத்தியில் கதை சொல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின் கதைசொல்லி கீதா ஊர் கடந்து, நாடு கடந்து, ஏன் கண்டங்கள் கடந்தும் அழைக்கப்பட்டார். எத்தனை தூரம் பறந்தாலும், தன் கதைகளைப் பழங்குடி கிராமங்களுக்குக் கொண்டுசென்றுவிடுகிறார் கீதா.
“ஒரு கதைசொல்லி, தான் சொல்லும் கதையோடு உறவாட வேண்டும். கதைகள் பிரவாகமாக உள்ளிருந்து எழ வேண்டும். அந்நிலையில் தான் பார்வையாளர்கள் கதையை உள்வாங்கிக் கொள்வார்கள்” என்கிறார் கீதா.
புதிய அவதாரம்
புதிய கல்வி நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, கதாலயா என்ற கற்பிக்கும் மையத்தைத் திறக்கவிருக்கிறார் கீதா. அதற்காக நாடு முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார். “கதாலயா ஓர் மாற்றுக் கல்வி திட்டமாக அமையும். பரீட்சை, போட்டி போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகாமல், ஒவ்வொரு குழந்தையும் தன் திறனைக் கண்டறிந்து, அதில் ஜொலிக்கச் செய்யும் முயற்சி இது. கதைசொல்லும் கருத்தியலின் மையமான கவனித்தல், பேச்சாற்றல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவைதான் இத்திட்டத்தின் அடிநாதம்” என்கிறார் கீதா.
குழந்தைகளின் ஞானத் தேடலை ஊக்குவிப்பதற்குப் பதிலாகத் தகவல்களை நிரப்பி அனுப்புகிறது, தற்போதைய கல்வித் திட்டம் எனக் கவலை கொள்கிறார் கீதா. இந்தக் கல்வித் திட்டத்தில் உணர்வுரீதியான அறிவாற்றலுக்கு இடமில்லை. பொறுத்திருந்து கவனிக்கக் கற்றுத் தருவதுதான் கதைசொல்லுதல் எனும் அற்புதக் கலை. அதைக் கற்றுக்கொள்ளும்போது குழந்தைகள் பாடத்தை உணரத் தொடங்குவார்கள் என்பதுதான் கீதா எனும் கதைசொல்லி நமக்குச் சொல்லும் செய்தி.
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ம.சுசித்ரா