இசையின் மொழி: மயக்கும் மந்திர வீணை

இசையின் மொழி: மயக்கும் மந்திர வீணை
Updated on
1 min read

பார்வதியின் ரூபத்தை அடிப்படையாகக் கொண்டு சிவனால் படைக்கப்பட்ட வாத்தியம் ருத்ர வீணை என்கின்றன புராணங்கள். மிகவும் பழமையான ருத்ர வீணை, யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் இசைக் கருவி.

இசை உலகில் ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் என்னும் புகழை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் ஜோதி ஹெக்டே. சிதார் மற்றும் ருத்ர வீணை வாசிக்கும் பயிற்சியைத் தன்னுடைய 16-வது வயதில் பண்டிட் பிந்து மாதவ் பதக்கிடம் தொடங்கினார் ஜோதி. அதன் பின் ஹிந்துஸ்தானி இசையில் பிரபலமான துருபத் பாணியை, பண்டிட் இந்துதார் நிரோடியிடம் பயின்றார்.

ருத்ர வீணை வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களை உஸ்தாத் அசத் அலிகான் மற்றும் உஸ்தாத் பஹாதீன் தகார் ஆகியோரிடமும் பெற்றார். பாரம்பரியமான வாத்தியத்தைப் பல ஆண்டுகளாக ஆழமாக வாசித்துப் பழகினார். ஜோதியினிடத்தில் ஆழமாக விதைக்கப்பட்ட இசை விதை, அவரின் வித்வத்தை விருட்சமாகக் கிளை பரப்பியது.

சிதார், ருத்ர வீணை இரண்டு வாத்தியங்களிலும் இந்திய வானொலி நிலையத்தின் முதல் தரக் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இசையில் முதுகலை பட்டம் பெற்றார்.

வட இந்தியாவின் பிரபல மேடைகளிலும் திருவிழாக்களிலும் இவரின் ருத்ர வீணை ஒலித்தது. பூனே பல்கலைக்கழகத்தில் லலித் கலா கேந்திரா, வித்தியாசமான வாத்தியங்களுக்காக அமைத்திருந்த மேடையில் ருத்ர வீணையை வாசித்திருக்கிறார் ஜோதி. ஹிந்துஸ்தானி இசை மேதைகளான எஸ்.எப். தாகர் மற்றும் எம். தாகர் ஆகியோரின் நினைவஞ்சலிக்காக ருத்ர வீணை வாசித்திருக்கிறார். லண்டனில் நடக்கும் தர்பார் இசைத் திருவிழாவில் வரும் செப்டம்பர் மாதம் இவருடைய ருத்ர வீணையும் நாதம் எழுப்பப் போகிறது.

ருத்ர வீணையை வாசிக்கக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துவருகிறார். இது மரபின் வேர்கள் பட்டுப்போகாமல் இருக்க, தான் எடுக்கும் சிறிய முயற்சி என்கிறார் ஜோதி.

ருத்ர வீணையில் மந்திர ஸ்தாயியில் தொடங்கி படிப்படியாக உயர்ந்து மீண்டும் மந்திர ஸ்தாயியில் முடியும் இவரின் வாசிப்புப் பாணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in