பார்வை: தகுமா இந்த வசை?

பார்வை: தகுமா இந்த வசை?
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்று விமர்சித்தார். அதற்குப் பல்வேறு முனைகளில் இருந்து கண்டனமும் எதிர்ப்பும் எழுந்தது. இது இயல்பு. ஆனால் சிலர் நடிகை குஷ்புவின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி, அவரது புகைப்படங்களை சமூகவலைத் தலங்களில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் தொடர்ந்து வசவுகள் பாடிய வண்ணம் இருக்கின்றனர்.

ஒருவர் ஒரு கருத்து சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க வேண்டுமே தவிர, கருத்து சொன்னவரின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பது முறையா? குஷ்பு பேசியது சரியா, தவறா என்ற விவாதங்களைத் தாண்டி, அவர் ஒரு பெண், நடிகை என்பதாலேயே இப்படி அள்ளிவீசப்படுகிற நடத்தை சார்ந்த அவதூறுகள் சரியா? சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிற பெண்ணோ, அரியணையில் அமர்ந்து அரசாளும் ராணியோ.. யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்துவதற்கு இந்தச் சமூகம் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் பால் ஒழுக்கம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது.

ஒரு தவறை ஆண் செய்தால் அவன் அறிவில்லாதவன் என்று சொல்வதும் பெண் செய்தால் ஒழுக்கம் கெட்டவள் என்று தூற்றுவதும் எந்த மாதிரியான மரபு?

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஆண்களைப் பற்றி இப்படிக் கேள்வி எழுப்புவதில்லையே? தவிர அது அவரவரின் அந்தரங்கம். ஒரு பெண் பொதுவெளியில் இயங்குகிறார் என்பதற்காகவே அவருடைய அந்தரங்கத்தைக் கேள்வி கேட்கலாம் என்ற மனோபாவம் சரியா?

அரசியல் அறிவும் தெளிவும் இல்லாமல் ஒரு நடிகை செய்கிற அதிகபட்ச தவறுக்கு எதிர்வினையாற்றக் கூடாதா என்றால் நிச்சயமாக செய்யலாம். ஆனால் ஆணை எப்படிக் கையாளுவோமோ எந்த வரையறைக்குள் நிறுத்துவோமோ அதே அளவுகோலுடன் பெண்ணையும் நடத்த வேண்டும். தவறு செய்கிற எந்த ஆணின் கற்பையும் கேள்வி கேட்காத இந்தச் சமூகம் ஒரு பெண் கருத்துத் தெரிவித்தால் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு கற்பு நெறி குறித்து கதைகள் பேசுகிறது. இந்த அணுகுமுறை சரியா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in