Last Updated : 02 Nov, 2014 02:52 PM

 

Published : 02 Nov 2014 02:52 PM
Last Updated : 02 Nov 2014 02:52 PM

பழசு இப்போ புதுசு

வீட்டில் இருக்கும் பழைய, பயன்படாத சி.டி-யை என்ன செய்வோம்? வேண்டாம் என்று குப்பையில் எறிந்துவிடுவோம். இப்படி ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தூக்கியெறியப்படுகிற சி.டி-கள் தெருவிலோ குப்பைக் கிடங்கிலோ சேர்ந்துவிடும். எலெக்ட்ரானிக் குப்பை என்று சொல்லப்படும் இவை எளிதில் மட்குவதில்லை.

அவை மண்ணுக்குள் புதைந்து நீரையும் நிலத்தையும் மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தூக்கியெறிவதைவிட வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று உமாமகேஸ்வரி யோசித்ததன் விளைவு வண்ண வண்ணக் கைவினைப் பொருட்கள்! மயிலாடுதுறையைச் சேர்ந்த இவர், நாம் வேண்டாம் என்று தூக்கியெறியும் பொருட்களைப் பலர் பார்த்து ரசிக்கக்கூடிய கலைப் பொருட்களாக மாற்றிவிடுகிறார்.

‘எனக்குச் சிறு வயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம், அந்த ஆர்வமே என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது’-என்ற எந்த முன்வரலாறும் உமாமகேஸ்வரிக்கு இல்லை. சிறு வயதில் தையல் கற்றுக்கொண்டவர், திருமணத்துக்குப் பிறகு ஆடைகளில் வேலைப்பாடு செய்தார். ஒரு வருடத்துக்கு முன்புதான் கலைப் பொருட்கள் செய்வதில் இவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது.

“எங்க வீட்ல அடுக்கியிருந்த சி.டி-களை என்ன செய்யறதுன்னு யோசிச்சேன். நான் டிசைனர் பிளவுஸ் தைக்கறதால வீட்ல நிறைய ஸ்டோன்கள் இருக்கும். அந்த ஸ்டோன்களை சி.டி. மேல ஒட்டினேன். எங்க வீட்டு கதவுக்கு அடிச்ச பெயிண்ட் மீதியிருந்தது. அதை வைத்து சி.டி. மேல டிசைன் வரைந்தேன். நடுவில் அழகான பொம்மை உருவங்களையும் கடவுள் உருவங்களையும் ஒட்டினேன்” என்று தான் கைவினைப் பொருட்கள் செய்யத் தொடங்கிய கதையைப் பகிர்ந்துகொள்கிறார் உமாமகேஸ்வரி.

கல்யாணப் பத்திரிகைகளைக்கூட புதுவிதமான கலைப் பொருளாக மாற்றிவிடுகிறார். சின்னச் சின்னப் பானைகளில் ஓவியம் வரைந்து அவற்றைப் பூச்சாடியாக மாற்றுகிறார். தன் வீட்டு பூஜைக்கு வந்தவர்களுக்கு உமாமகேஸ்வரி தன் கையால் செய்த கைவினைப் பொருட்களைத் தந்திருக்கிறார். அதன் எளிமையும் நேர்த்தியும் விருந்தினர்களுக்குப் பிடித்துப்போக, அதேபோல் செய்து தரச் சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம்.

“நான் எந்த வகுப்புக்கும் போனதில்லை. எந்தப் புத்தகத்தைப் பார்த்தும் கைவினைக் கலையைக் கற்றுக்கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்ததை வைத்து நானே முயற்சி செய்துப் பார்க்கிறேன். அது அழகாக அமைந்துவிடுகிறது” என்று சொல்லும் உமாமகேஸ்வரி, தன் குடும்பத்தினரும் நண்பர்களும் தருகிற பாராட்டு உற்சாகத்தை அதிகரிக்கிறது என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x