

காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணயரும்வரை ஒவ்வொரு நாளும் பம்பரமாகச் சுற்றும் வாழ்க்கையில் பெண்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவதே அரிது. கையில் தேநீர்க் கோப்பையுடன் தனிமையில் அமர்ந்து பாடல்கள் கேட்பதில் உள்ள ஆனந்தத்தைப் பெண்கள் மட்டும் அறிவார்கள்.
இப்படிப் பெண்களின் பிரத்யேக மகிழ்ச்சி, சோகம், கோபம், பலம், பொறுமை எனப் பல்வேறு உணர்வுக் கலவைகளைத் தன்னுடைய நுட்பமான ஓவியங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஓவியர் நந்தினி.
பள்ளிப் பருவத்திலேயே ஓவியக் கலையில் ஆர்வம்கொண்டவர் நந்தினி. சுயமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட அவர், புகழ்பெற்ற ஓவியர்களான எம்.பி. தேவன், சி.என். கருணாகரன், டி. கலாதரன் ஆகியோரிடம் பின்னாளில் ஓவியப் பயிற்சி பெற்றுள்ளார்.
பளிச்சிடும் பன்முகத் திறமை
15 வயதிலேயே நந்தினி ஓவியக் கண் காட்சியை நடத்தியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கான மாநிலப் போட்டி, பல்கலைக்கழகங்களுக் கான தென் மண்டல அளவிலான போட்டிகளிலும் ஓவியத்தில் பரிசுகளைப் பெற்றவர்.
கேரளத்தில் உள்ள லலித்கலா அகாடமியிலும் நந்தினியின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்கள் மட்டுமல்லாமல் நடிப்பு, நடனம் என பன்முகத் திறமை கொண்டவர் இவர். சமீபத்தில் சென்னையில், ‘சிறு உரையாடல் – கேட்கப்பட வேண்டிய குரல்கள் (Small Talk – Voices to be heard) எனும் தலைப்பில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சி ஓவிய ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கண்காட்சியில் பெண்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் குறிக்கும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
“தங்களது சுதந்திரத்தை மற்றவர்கள் கொடுப்பார்கள் எனப் பெண்கள் எதிர்பார்க்கத் தேவையில்லை. பெண்களின் சுதந்திரத்தை அவர்களால்தாம் உருவாக முடியும். கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சமூகத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உந்துதல் இருந்தால்தான் பெண்கள் சுதந்திர வெளியை நோக்கி வருவார்கள். பெண்களின் விடுதலைக்கான உரையாடல்கள் விவாதங்களாக வேண்டும். அதற்கான ஒரு சிறு தொடக்கம்தான் என்னுடைய இந்த ஓவியங்கள்” என்கிறார் நந்தினி.