

தங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக வேலைசெய்துவரும் பார்வதியைக் குறித்து திருத்துறைப்பூண்டி வாசகி பார்வதி கோவிந்தராஜ் எழுதிய, ‘எங்கிருந்தோ வந்தாள்’ அனுபவப் பகிர்வு, என்னையும் எழுதத் தூண்டிவிட்டது. எங்கள் வீட்டிலும் அப்படியொருவர் உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிவருகிறார்.
எங்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் அவரது பெயர் (பழனாள்-கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான்) மட்டும்தான் இல்லையே தவிர, அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். 45 ஆண்டுகளாக வீட்டு வேலைகளில் துணைபுரிகிறார். எனக்குத் தோழியாய், என் குழந்தைகளுக்குத் தாயாய், என் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியாக, என்னைச் சார்ந்தவர்களுக்கு இன்னொரு அம்மாவாக இருந்துவருகிறார் பழனாள்.
பொள்ளாச்சியில் பெரிய கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். திருமணத்துக்குப் பிறகு திருப்பூரில் குடியேறினேன். அங்கே கிராமத்திலுள்ள தோட்டத்து வீட்டுக்குத் தோட்ட வேலைகளைச் செய்யவந்த பல பெண்களில் பழனாளும் ஒருவர். டவுனில் இருந்து வந்ததால் தோட்டத்து வேலைகள் எவையும் எனக்குத் தெரியாது. பழனாள் என்னிடம் அன்பாகப் பேசுவார்.
வீட்டு வேலைகளில் உதவுவார். எனக்கு எல்லா விஷயங்களிலும் உறுதுணையாக இருந்தார். நான் பிரசவத்துக்காக ஊருக்குச் சென்றுவிட்டேன். மீண்டும் திருப்பூர் வருவதற்கு ஆறு மாதங்களாகிவிட்டன. நான் ஊருக்குச் சென்றிருந்தபோது தோட்டத்தில் வேலை இல்லாததால் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் பழனாள்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மிஷினில் மாட்டிக்கொண்டதால் ஒரு கையை இழந்துவிட்டார். அவருக்கு நான்கு குழந்தைகள். ஊரிலிருந்து வந்து மீண்டும் அவரைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். உடல்நலன் தேறியபிறகு பழனாளை வீட்டுக்கு வரச் சொல்லி அவரால் முடிந்த வேலைகளைச் செய்யச் சொல்லி நான் அவருக்கு உதவினேன்.
பழனாளுக்குக் கைதான் இல்லையே தவிர, மனதளவில் பெரிய ஜாம்பவான். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் வேலை செய்வார். வீட்டை ஒரு தூசு தும்பு இல்லாமல் சுத்தமாகத் துடைத்து, கண்ணாடிபோல் வைத்திருப்பார்.
வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் நிறைய பாட்டி வைத்திய முறைகளைச் சொல்வார். எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் ஒருசேரப் பெற்றவர் அவர். அவருக்குப் பிற்காலத்தில் உதவும் என்பதற்காக அஞ்சலகத்தில் பல ஆண்டுகளாகச் சேமிப்புத் தொகையைக் கட்டிவருகிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாகக் கோயில் குளங்களுக்குச் செல்வோம். எங்கள் இருவரது இந்த பந்தம் அடுத்த பிறவியிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை.
நீங்களும் சொல்லுங்களேன் தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவம் முதல் கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனத்துக்குத் தெளிவைத் தரலாம். |
- எஸ். கலாதேவி சாமியப்பன்,
திருப்பூர்.