பெண்கள் 360: நீச்சல் உலகின் முதல் சாம்பியன்

பெண்கள் 360: நீச்சல் உலகின் முதல் சாம்பியன்
Updated on
3 min read

நீச்சல் உலகின் முதல் சாம்பியன்

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பெண்கள் பங்கேற்கும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த போராளி, சாரா ஃபேனி தூரக் (sarah fanny durack). சிட்னியில் 1889 அக்டோபர் 27 அன்று ஐரிஷ் பெற்றோருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தார்.

குழந்தையாக இருக்கும்போதே சாராவுக்கு நீச்சலில் ஆர்வம் அதிகம். குழந்தைப் பருவத்தில் ஆஸ்திரேலியாவின் கூகி கடற்கரையை ஒட்டியிருந்த ஏரிகளிலும் குளங்களிலும் தன்னுடைய சகோதரிகளுடன் அவள் நீந்துவது வாடிக்கை.

13 வயதிலேயே நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தனது வாழ்நாள் முழுவதும் நீச்சல் உலகின் அசைக்க முடியாத ராணியாகத் திகழ்ந்தார்.

1912-ல் நடந்த கோடை ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் முன்னிலையில் நீச்சல் உடையில் பெண்கள் பங்கேற்பது தகாத செயல் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது.

அந்த வாதத்தைப் புறந்தள்ளிய சாரா, அதற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். ‘நியூ சவுத் வேல்ஸ் ஸ்விம்மிங் அசோசியேஷனி’ல் மனு கொடுத்தார். பெண்களின் பங்கேற்புக்காக வாதாடினார். அவரது போராட்டத்தின் பலனாக ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த ஆண்டே இரண்டு உலக சாதனைகளைப் படைத்து உலக நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீச்சல் உலகின் முதல் பெண் சாம்பியன் ஆனார். நீச்சலில் வரலாற்றுச் சாதனை புரிந்த அவரது முதல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஜூலை 12 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

16jpg

பெண்களுக்கு வட்டி மானியம்

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, “பெண்கள் முன்னேறாமல் உலகில் எந்த நாடும் முன்னேற முடியாது. எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.

பெண்களின் பங்களிப்பைக் கிராம பொருளாதாரம் அதிகமாக ஊக்குவிக்கிறது. சமூக பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.  மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.

முத்ரா திட்டத்தின்கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை கடன் வழங்கப்படும். பெண்கள் மேம்பாட்டுக்குத் தனித்திட்டம் புதிதாக உருவாக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வழிநடத்தும் திட்டங்கள் கொண்டுவரப்படும். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

நந்தினிக்குத் திருமணம்18jpgright

அரசு நடத்தும் மதுக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் நந்தினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டார். திருமணம் நடைபெறவிருந்த நிலையில் நந்தினி கைதுசெய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. 

இந்நிலையில் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும் கடந்த 9-ம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 10-ம் தேதி மதுரை தென்னமநல்லூர் கிராமத்திலுள்ள அவர்களின் குலதெய்வ கோயிவில் நந்தினிக்கும் குணா ஜோதிபாசுவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் மாலை மாற்றிகொண்டு, ‘இல்வாழ்விலும் சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம். சொந்த நலனைவிட சமுதாய நலனுக்கு முன்னுரிமை அளிப்போம்’ என இயற்கை, முன்னோர்கள், தியாகிகளின் சாட்சியாகத் திருமண உறுதிமொழியேற்றனர்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

இந்திய தடகள வீராங்கனை டுட்டி சந்த், தான் தன்பாலின உறவில் இருப்பதாக மே மாதம் அறிவித்தார். இதற்காகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். சொந்த ஊரில் நிலவிய எதிர்ப்பு, சகோதரியின் மிரட்டல், பெற்றோரின் புறக்கணிப்பு போன்றவற்றால் கடும் மனநெருக்கடிக்கு உள்ளான நிலையில், இத்தாலியில் தற்போது நடைபெற்று வரும் 30-வது கோடைக்கால பல்கலைக்கழகப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் டுட்டி சந்த்.

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனையான 11.32 விநாடிகளைத் தன் வசம் வைத்துள்ள டுட்டி சந்த், இந்தப் போட்டியில் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து தங்கம் வென்றார். மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, டுட்டி சந்தைப் பாராட்டி, ‘ஓடிக்கொண்டே இருங்கள். எப்போதும்போல் பயமின்றி ஓடுங்கள்’ என ட்வீட் செய்துள்ளார். வெற்றிக்குப் பின்பு, ‘என்னைக் கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்’ என ட்வீட் செய்துள்ளார்  சந்த்.

தொடரும் கொடுமை

பிஹார் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் பகவான்பூர் என்னும் கிராமம் உள்ளது. கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணிடமும் அவருடைய மகளிடமும் தவறாக நடக்கச் சிலர் முயன்றனர்.

அதை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது அப்பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர்கள், கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிதிருத்துபவரை அழைத்து அந்தப் பெண்ணுக்கும் மகளுக்கும் மொட்டை அடிக்க வைத்து அவர்களைக் கிராமம் முழுவதும் வலம்வரச் செய்தனர்.

தாயும் மகளும் இது குறித்துப் புகார் செய்ததன் அடிப்படையில், வார்டு கவுன்சிலர், கிராமத் தலைவர், முடிதிருத்தம் செய்தவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது முதல்கட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்தனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in