Last Updated : 07 Jul, 2019 09:42 AM

 

Published : 07 Jul 2019 09:42 AM
Last Updated : 07 Jul 2019 09:42 AM

முகம் நூறு: கல்லூரி பாதி விவசாயம் மீதி!

தமிழகத்தின் பெருநகரப் பள்ளி ஒன்றில், “பால் எதிலிருந்து கிடைக்கிறது?” என ஆசிரியர் கேட்க, குழந்தைகளோ “பாக்கெட்டில் இருந்து” எனச் சொல்லியிருக்கிறார்கள். நகரத்துக் குழந்தைகளில் பலரும் நெல்லும் அரிசியும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விவசாயமே முதுகெலும்பாக இருந்த கிராமங்களில் அரசாங்கத்தின் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் இன்று விவசாயம் நொடித்துவருகிறது. எஞ்சியிருக்கும் விவசாயக் குடும்பங்களில்கூட மூத்த தலை முறையினரைப் போலவே இளம் தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட முடியாத  சூழல் நிலவுகிறது.

‘விவசாயத்தில் சாதித்த இளைஞர்’, ‘மென்பொருள் வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்குத் திரும்பிய பட்டதாரி’ என ஆங்காங்கே சில வெற்றிக் கதைகளைக் கேள்விப்பட்டாலும் விவசாயத்தில் ஈடுபடுகிற இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

இந்நிலையில் தங்கள் ஒரு ஏக்கர் வயலில் ஒற்றை ஆளாக நாற்றுநட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கல்லூரி மாணவி ராஜலெட்சுமி. கல்லூரி செல்லும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் வயல்காட்டு வேலைகளில் இவர் சுறுசுறுப்பாக இறங்கிவிடுகிறார்.

காலையில் கல்லூரி; மாலையில் வயக்காடு

தஞ்சாவூர் மாவட்டத்தையும் புதுக்கோட்டை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடு கிராமமான அக்கரைவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி. அவரைச் சந்திக்க நேரம் கேட்டபோது, “நான் காலையில ஆறே முக்கால் மணிக்கெல்லாம் காலேஜுக்குக் கிளம்பிடுவேன். நீங்க மத்தியானம் வந்தால் பார்க்கலாம்”  என்றார்.

ராஜலெட்சுமி குறிப்பிட்ட நேரத்தில் அக்கரைவட்டத் துக்குச் சென்றோம். ஊரில் எல்லோரும் விவசாயிகள்; கூலித் தொழிலார்கள்தாம். ஊரின் கடைக்கோடியில் இருக்கிறது ராஜலெட்சுமியின் ஓட்டு வீடு. அப்போதுதான் கல்லூரியிலிருந்து திரும்பியிருந்தார். கல்லூரி சென்றுவந்த சோர்வோ மதிய வெயிலின் தாக்கமோ எதுவும் அவரது முகத்தில் தெரியவில்லை. புன்னகையோடு பேசத் தொடங்கினார். “அம்மா ஆடு மேய்க்கப் போயிருக்காங்க. அப்பா கழனிக்குப் போயிருக்கார். எல்லோரும் வரும் நேரம்தான்” என்றார் ராஜலெட்சுமி.

ராஜலெட்சுமியின் அப்பா கருப்பையா, அம்மா காந்திமதி. இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். மூன்று அக்கா, ஒரு தம்பி. இதில் ஒரு அக்காவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மற்ற இருவரும் படிப்பை முடித்துவிட்டு ஊரணிபுரத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவருகின்றனர். ராஜலெட்சுமியும் அவரது தம்பியும் இரட்டைக் குழந்தைகள். தம்பி தொழிற்படிப்புப் படித்து வருகிறார். ராஜலெட்சுமி ஒரத்தநாட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இறுதியாண்டு படித்துவருகிறார்.

மேய்ச்சலில் கழியும் விடுமுறை

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தரத் தேவையில்லை என்பார்கள். நீந்துவது மீனுக்குத் தனிக் கலையல்ல; அது பிழைத்திருக்க நீந்தித்தான் ஆக வேண்டும். அதேநேரம், விவசாயக் குடும்பத்தில் பிறந்த அனைவருமே விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. மீன் குஞ்சுக்கு இருக்கும் அத்தியாவசியம் ராஜலெட்சுமி இல்லையென்ற போதிலும், விவசாயப் பணிகளை விரும்பிச் செய்தார். சிறு வயது முதலே வயலில் இறங்கத் தொடங்கிய தால் எல்லா வேலைகளும் அவருக்கு அத்துப்படி.

“எங்ககிட்ட ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. எங்க அஞ்சு பேரையும் படிக்க வைக்கறதுக்கும் எங்களைக் கரை சேர்க்கறதுக்கும் எங்க வயல்தான் முக்கியக் காரணம். எங்க அப்பா எப்பவும் வயல்லதான் இருப்பார். நெல் சாகுபடி முடிஞ்சதும் நிலக்கடலை, வெள்ளரி, கத்தரிக்காய்னு மாத்தி மாத்தி பயிரிடுவோம்.

நாங்களும் அப்பாவுக்கு உதவியா வயலுக்குப் போவோம். வயல்ல வரப்பு வெட்டுறது, நாத்து நடுறது, களை எடுக்கறது, அறுவடைன்னு எல்லா வேலைகளும் எனக்குத் தெரியும்” என்று சொல்லும் ராஜலெட்சுமி கல்லூரி முடிந்து மதியம் வீட்டுக்கு வந்ததும் வயலுக்குச் சென்று ஏதாவது வேலை செய்துவிட்டுத் திரும்புகிறார். சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் தனக்கு ஆர்வம் அதிகம் எனக் குறிப்பிடுகிறார்.

“எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஸ்கூல், காலேஜ்ல லீவு விடுறதே ஆடு, மாடு மேய்க்கத்தான். எங்க வீட்ல ஒரு மாடும் 13 ஆடுகளும் இருக்கு. லீவு விட்டா போதும். இந்த ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொழுது போயிடும்” என்கிறார் ராஜலெட்சுமி.

தனியே தன்னந்தனியே

ஒரு ஏக்கர் வயலில் தனி ஒருவராக நடவு செய்ததைப் பற்றிக் கேட்டால், “இதுல புதுசா என்ன இருக்கு?” என்றபடி சிரிக்கிறார் ராஜலெட்சுமி. “எங்க ஊர்ல இப்போ நடவு வேலை அதிகமா இருக்கு. எங்க வயல்ல வேலை செய்ய ஆளுங்க கிடைக்கல. நாங்க நாத்துவிட்டு முப்பது நாளாகிடுச்சு. ஆளுங்க இல்லையேன்னு காத்துக்கிட்டு இருக்க முடியாது. நாத்தைப் பிடுங்கி நடவு வேலைய ஆரம்பிச்சிடணும்.

அப்போதான் அப்பாகிட்ட, “நீங்க நாத்தைப் பறிச்சுக் கொடுங்க. நான் தனியாக நடவு நடுறேன்”னு விளையாட்டா சொன்னேன். விளையாட்டா சொன்னதை உண்மையாவே செஞ்சா என்னன்னு தோணுச்சு. அதையும் அப்பாகிட்ட கேட்டேன். அவரும் சரின்னு சொன்னார்” என்கிறார் ராஜலெட்சுமி.

கடந்த மாதம் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராஜலெட்சுமிக்கு அன்று கல்லூரி விடுமுறை. அன்று காலையிலிருந்து மாலைவரை நடவு செய்தார். பின்னர் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் கல்லூரிக்குச் சென்று விட்டு மதியத்துக்கு மேல் வந்து நடவு செய்தார்.

மூன்றே நாளில் நடவுப் பணியைத் தனியாளாக முடித்துவிட்டார். அது மட்டுமல்ல; 21 பேர் செய்ய வேண்டிய வேலையை ராஜலெட்சுமி மட்டுமே தனியாகச் செய்து முடித்திருக்கிறார். “நான் இப்படி நடவு நட்டதுல எங்க வீட்ல எல்லோருக்கும் சந்தோசம். கூலி ஆளுங்களுக்குத் தர வேண்டிய பணமும் மிச்சமாச்சு” எனப் புன்னகைக்கிறார்.

விழிப்புணர்வு தேவை

நம்முடைய வயலில் நாற்று நட  ஆள் கிடைக்க வில்லையே என்ற எண்ணத்தில் விளைந்த வைராக்கியத் தால்தான் தனியாக நடவு செய்ய முடிவெடுத்ததாக ராஜலெட்சுமி சொல்கிறார். “நான் இப்படி தனியா நடவு நடுறதை வீட்ல இருக்கறவங்களுக்குக் காட்டணும்னு செல்போனில் படம் எடுத்தேன்.

அப்புறம் எங்க சொந்தக்காரங்ககிட்ட இதைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன். விஷயம் எப்படியோ வெளியே தெரிஞ்சு பேப்பர்ல எல்லாம் நியூஸ் வந்துடுச்சு” என்கிறார். ராஜலெட்சுமியின் செயலைக் குறித்து நாளிதழ் வாயிலாகத் தெரிந்து கொண்ட அவருடைய கல்லூரிப் பேராசிரியர்களும் தோழிகளும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர்.

விவசாயம் அழிந்துவருவது குறித்த வேதனை ராஜலெட்சுமியின் சொற்களில் எதிரொலிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடும் அவரைக் கலங்கவைத்திருக்கிறது. “விவசாயம்தான் நமக்குச் சோறுபோடுது. இந்த மண்ணை நாம் எப்படி மறந்துவிட முடியும்? இந்த மண்ணை நாம் நேசிக்க வேண்டும்.

எல்லோரும் விவசாயத்தைவிட்டு விலகிச் செல்வது வேதனையா இருக்கு. இளைய தலைமுறையினர் விவசாய வேலைகளைச் செய்ய முன்வரணும். விவசாயத்துக்காக அரசாங்கம் அறிவிச்சிருக்கும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கணும். அந்தத் திட்டமெல்லாம் எந்தத் தலையீடும் இல்லாம விவசாயிகளுக்கு வந்து சேரணும்.

இப்போ தண்ணி பிரச்சினைதான் பெரிய பிரச்சினையா இருக்கு. நீர்ப்பாசனத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து விவசாயத்தை மேம்படுத்தவும் நிலத்தடி நீரைச் சேமிக்கறது தொடர்பாவும் அரசாங்கம் இன்னும் அதிகமா விழிப்புணர்வை ஏற்படுத்தணும், நடவடிக்கை எடுக்கணும்” என்று சொன்ன ராஜலெட்சுமி, தான் சொல்வது சரிதானே என்ற தோரணையுடன் பெற்றோரைப் பார்த்தார். மகளின் வார்த்தை களில் பொதிந்திருக்கும் நியாயத்தை உணர்ந்து பெற்றோர் இருவரும் புன்னகைக்க, அந்த ஓட்டு வீட்டுக்குள் வெளிச்சம் பரவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x