சிதாரில் சாதிக்கும் அனுபமா

சிதாரில் சாதிக்கும் அனுபமா
Updated on
1 min read

அருவியில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரைப் போல ஒரு நிலையிலும், நதியில் தவழ்ந்து வரும் தண்ணீரைப் போல மற்றொரு நிலையிலும் இசை பிரவாகமெடுப்பதை உணர வைப்பதில் சிதார் இசைக்கு இணை வேறு இல்லை.

பொதுவாகச் சிதார் வாசிப்பதில் ஆண் கலைஞர்களே பிரபலமாக இருக்கிறார்கள் என்றாலும், அதிலும் மிளிரும் பெண் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

இசைக் குடும்பத்தில் பிறந்த கொழுந்து அனுபமா பகவத். ஒன்பது வயதில் இவருடைய இசைப் பயிற்சி ஆர்.என். வர்மாவிடம் தொடங்கியது. பதிமூன்று வயதிலிருந்து பண்டிட் விமலேந்து முகர்ஜியிடம் தொடர்ந்தது. இவரிடமிருந்துதான் வடநாட்டின் பாரம்பரிய இசையாகப் போற்றப்படும் இம்தாகினி கரானா இசை வடிவத்தை அனுபமா கற்றுக்கொண்டார். சாகித்தியத்தைப் பாடுவது போல் துல்லியமாக வாத்தியத்தின் வாசிப்பில் கொண்டுவரும் `காயகி’ பாணி இசையைக் குருவின் வழியில் இந்தியாவின் பிரபல மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் சிதார் கலைஞராக வளையவருகிறார் அனுபமா.

இந்திர கலா சங்கீத் விஷ்வ வித்யாலயாவில் இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற அனுபமா, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதிநல்கையைப் பெற்றிருப்பவர். அமெரிக்காவின் ஒஹையோ கலை மையத்தின் உதவித்தொகையையும் பெற்றிருக்கிறார்.

தூர்தர்ஷன், நியூயார்க், கலிபோர்னியா தொலைக் காட்சிகளிலும் நிகழ்ச்சி வழங்கியிருக்கும் அனுபமா, இந்தியாவின் பிரபலமான உஸ்தாத் அமீர் கான் ஸ்மிருதி சம்ரோ (இந்தூர்), சங்கீத ஆய்வு மையம் (கொல்கத்தா), சங்க மோச்சன் சம்ரோ (வாரணாசி) ஆகிய முன்னணி சபாக்களின் மேடைகளிலும் சிதாரை ஒலித்திருக்கிறார்.

புல்லாங்குழல் - வீணா-வயலின் வாசிக்கும் கலைஞர் களுடன் இணைந்து ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளை குளோபல் ரிதம்ஸ், லோட்டஸ் இசை விழா, சின்சினாட்டி காயர் போன்ற உலகின் முக்கியமான இசை மேடைகளில் வழங்கியிருக்கிறார் அனுபமா.

அனுபமாவின் துரித கால வாசிப்பையும் மத்திம கால ராக ஆலாபனையையும் கேட்க உலகம் முழுவதும் மொழிகளைக் கடந்து பல ரசிகர்கள் காத்திருப்பதுதான் அவரது இசைத் திறமைக்குச்சாட்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in