Last Updated : 30 Jun, 2019 11:28 AM

 

Published : 30 Jun 2019 11:28 AM
Last Updated : 30 Jun 2019 11:28 AM

ஆடும் களம் 46: ரக்பியில் ராயல் முத்திரை

இந்தியாவில் ரக்பி அணி இருக்கிறது என்றாலே பலருக்கும் புருவம் உயரும். அதுவும் மகளிர் ரக்பி என்றால் நம்பக்கூட மாட்டார்கள். காரணம், மேற்கத்திய நாடுகளும் ஆசிய பசிபிக் நாடுகளும் மட்டுமே ரக்பியில் கோலோச்சிவருகின்றன. ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச வெற்றியைப் பதிவுசெய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியாவின் மகளிர் ரக்பி அணி!

மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே இந்த விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். உடல் வலுவோடு தொடர்புடைய ரக்பிக்கு இந்தியாவில் முக்கியத்துவம் தருவதில்லை. குட்டி நாடுகள் இந்த விளையாட்டில் அணிகளை வைத்திருக்கின்றன. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1998-ல்தான் ஆண்கள் ரக்பி அணி உருவானது. மகளிர் அணியோ ஓராண்டுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட மகளிர் அணிதான் இன்று வாகைசூடியிருக்கிறது.

நியூசிலாந்தில் 2021-ல் மகளிர் உலகக் கோப்பை ரக்பி போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகளை இறுதிசெய்வதற்காக டிவிஷன் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. ஆசிய டிவிஷன் 1 ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிகள்  பிலிப்பைன்ஸில் ஜூன் 19 முதல் 22 வரை நடைபெற்றன. இந்தத் தொடரில் இந்தியாவும் பங்கேற்றது. வலிமைமிக்க சிங்கப்பூர் மகளிர் ரக்பி அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது.

போட்டி தொடங்கியது முதலே சிங்கப்பூர் அணியின் மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவந்தது. ரக்பியைப் பொறுத்தவரை இந்திய மகளிர் அணி ஒரு கத்துக்குட்டி. ஆனால், பல ஆண்டுகளாக ரக்பியில் களம்கண்டுவரும் சிங்கப்பூர் அணி இந்திய அணியிடம் தடுமாறியதைப் பார்த்துப் பார்வையாளர்களுக்கே ஆச்சரியம் ஏற்பட்டது.  வீராங்கனைகள் சுமத்ரா நாயக், ஸ்வீட்டி குமாரி, கேப்டன் வபீஸ் பரூச்சா, அன்னாபெல் என மகளிர் அணியில் வீராங்கனைகள் குழுவாக விளையாடி சிங்கப்பூரைச் சின்னாபின்னமாக்கினார்கள்.

சிங்கப்பூர் அணி எவ்வளவோ முயன்றும் கடைசியில் 21 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவிடம் வீழ்ந்தது. சர்வதேசப் போட்டியில் இந்திய மகளிர் அணி பெற்ற முதல் வெற்றி இது. அதுவும் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஓர் அணி, பலம் பொருந்திய அணியை வீழ்த்தியது மிகப் பெரிய சாதனை. அந்த வகையில் இந்திய மகளிர் ரக்பி அணி வீராங்கனைகள் மகத்தான முன்னுரையை இந்த விளையாட்டில் எழுதியிருக்கிறார்கள். அதோடு இத்தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் இந்திய அணி பெற்றுத் திரும்பியது.

சிங்கப்பூர் உடனான போட்டி முடிவடைந்ததும், இந்திய வீராங்கனை ஒருவர் பயிற்சியாளரிடம் கண்ணீர் வடிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவை ஆசிய ரக்பி கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்தியாவின் வெற்றியைப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தது. அதை உலக ரக்பி அமைப்பும் ரீட்வீட் செய்து ‘இந்திய அணியின் நம்ப முடியாத சாதனை’ எனக் குறிப்பிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x