

அரசியல் போன்ற பொதுத்தளத்தில் சாதனை படைத்த பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய கணவர்கள்தாம் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரக் ஷா கட்சே, தன் கணவரது மறைவுக்குப் பிறகே அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார்.
மே மாதம் நடந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரத்தின் ராவீர் தொகுதி சார்பாக ரக் ஷா கட்சே போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட மூன்று லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரக் ஷா வெற்றிபெற்றபோது அவருக்கு 26 வயது. இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என ஊடகங்களால் அப்போது புகழப்பட்டார் ரக் ஷா. ஆனால், இந்த வெற்றிக்கு ஓர் ஆண்டுக்கு முன்புதான் ரக் ஷாவின் கணவர் நிகில், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.
அரசியல் குடும்பம்
“தேர்தலில் தோற்றதில் நிகிலுக்கு வருத்தம். அவரது மனத்தை மாற்ற குடும்பத்தினருடன் காஷ்மீர் செல்ல முடிவு செய்திருந்தோம். அப்போது நிகில் படுக்கை அறையில் இருந்தார். நான் குழந்தைகளுக்காகச் சமைத்துக்கொண்டிருந்தேன். திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டுக்கு வெளியே குரங்குகளை விரட்டத்தான் துப்பாக்கியால் சுடுகிறார்கள் என நினைத்து வெளியே சென்று பார்த்தேன். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அறைக்குள் வந்து பார்த்தபோதுதான் நிகில் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரிந்தது” எனத் தன் கணவரின் மரணத்தைக் குறித்துச் சொல்கிறார் ரக் ஷா.
கணவரின் மறைவால் முடங்கிவிட்ட ரக்ஷாவை அதிலிருந்து மீட்பதற்காக அரசியலில் களமிறங்க ஆலோசனை வழங்கியது அவரது குடும்பம். ஜல்கான் மாவட்டத்தின் கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்துள்ளார் ரக் ஷா. மேலும், குருநாத் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மருத்துவ முகாம்கள் நடத்துவது, ஏழை மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். அதுவரை ஜல்கான் மாவட்டத்தைத் தாண்டி வெளியே செல்லாத ரக் ஷா கட்சே, நாடாளுமன்றத் தேர்தலில் நுழைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அவருடைய மாமனார் ஏக்நாத் கட்சே. இவர் மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியின்போது நிதியமைச்சராகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.
பெண்கள் மேம்பாடு
தன் கணவர் தோல்வியடைந்த தொகுதியில் இருந்தே தன்னுடைய அரசியல் பயணத்தை ரக்ஷா தொடங்கினார். தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கைகளைப் பிடித்தபடி முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ரக் ஷா. சமூகசேவைப் பணிகள் மூலம் அந்தப் பகுதி மக்கள் ரக்ஷாவை ஏற்கெனவே அறிந்துவைத்திருத்தனர். அதனால், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதை அவர்கள் வரவேற்று வெற்றியும் பெறச் செய்தனர்.
அந்த வெற்றி தற்போது இரண்டாவது முறையாகவும் தொடர்கிறது. இளங்கலைப் பட்டதாரியான ரக்ஷா கட்சேவுக்கு, திருமணத்துக்கு முன்புவரை அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரை மணந்துகொண்டதன்மூலம் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டார். பஞ்சாயத்துத் தலைவியாகத் தொடங்கிய ரக்ஷாவின் பயணம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ளது. தன்னுடைய பணிகாலத்தில் தொகுதியில் உள்ள ஏழைப் பெண்களுக்குச் சுயதொழிலை ஏற்படுத்தித் தருவதை லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர், ராவீர் தொகுதியில் ஐந்து கிராமங்களில் மகளிர் பொது சுகாதார நிலையங்களைத் திறந்துவைத்துள்ளார். பெண்களுக்கான தனிக் கழிவறை அமைத்துக் கொடுப்பது, கிராமப் பஞ்சாயத்துப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கற்றல் முறையை அறிமுகப்படுத்துவது போன்றவற்றையும் இவர் செயல்படுத்திவருகிறார்.
-தமிழ் முல்லை