

பதினெட்டு வயது பூர்த்தியடைந்த நம் வீட்டுக் குழந்தைகளின் திருமணத்தில் தலையிடவே நமக்கு உரிமையில்லை. ஆனால், இங்கே பலர் அடுத்தவர் வீட்டுத் திருமண விவகாரத்தில் தலையை நுழைக்கவும் கருத்துச் சொல்லவும் காத்திருக்கின்றனர். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனுடைய மகள் மாளவிகா, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மைக்கேல் மர்ஃபி என்பவரை மணக்க இருக்கிறார்.
அதற்கான திருமண அழைப்பிதழை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிலர் மோசமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இந்து தர்மத்தை, குறிப்பாக பிராமண சமூகத்தின் கலாச்சாரத்தைக் காக்கிறவர்களாகத் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளும் பலரும் சுதா ரகுநாதனை மோசமாக வசைபாடியிருந்தனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் அவப் பிரச்சாரம் செய்தனர்.
திருமண வயதை அடைந்த ஒரு பெண் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்துகொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. இந்நிலையில் மாளவிகா, மைக்கேலை மணந்துகொள்ளக் கூடாது என எப்படி ஒருவர் சொல்ல முடியும்? “டிக்கெட் வாங்கி உங்கள் கச்சேரியைக் கேட்டோமே. இப்படிச் செய்துவிட்டீர்களே” என ஒருவர் புலம்பியிருக்கிறார். இன்னொருவரோ, “இந்து மதச் சடங்குகளின்படி இனி எதையும் செய்யும் உரிமை உங்கள் குடும்பத்துக்கு இல்லை” என்று சொன்னதுடன், மனு ஸ்மிருதியைவிட மோசமான தடைகளை எல்லாம் விதித்திருந்தார்! கர்னாடக இசையில் அமைந்த கிறிஸ்தவ மதப் பாடல்கள் சிலவற்றை பாடகர்கள் ஓ.எஸ். அருண், நித்ய இருவரும் பாடியது தொடர்பாக சில மாதங்களுக்குமுன் இதுபோன்ற வெறுப்பைக் கக்கும் விமர்சனங்கள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக இப்போது இந்த விவகாரம் எழுந்திருக்கிறது.
இப்படிப் பேசியவர்களில் பலரும் படித்த, மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் போன்றவர்கள்தாம் சமூகம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பெயரால் சாதியப் பாகுபாட்டையும் மத வெறுப்பையும் நிற வேற்றுமையையும் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஒருவர் பிரபலமாக இருந்தாலும் சாதியக் கட்டமைப்பு எப்படியெல்லாம் அழுத்தம் கொடுத்து வதைக்கும் என்பதைத்தான் இதுபோன்ற சமூக வலைத்தளத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன.