வாழ்ந்து காட்டுவோம் 12: அரவணைத்துத் துயர் தீர்ப்போம்

வாழ்ந்து காட்டுவோம் 12: அரவணைத்துத் துயர் தீர்ப்போம்
Updated on
3 min read

ஒன்றுமறியாக் குழந்தைகளைப் பார்த்துச் சொல்லப்படும், ‘ஆதரவற்ற குழந்தைகள்’ என்ற வார்த்தையைக் கேட்கும்போது கோபம் வருகிறது. ஒரு குழந்தைக்கு ஆதரவற்ற நிலையை அளித்தது யார்? எதிர்பாராத நிலையில் தாய், தந்தை இருவரையும் ஏதாவதொரு விபத்தில் இழந்தால்கூட தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா என உறவினர் கூட்டம் இருக்கும். தாய், தந்தை யாரென்று அறியாமல் உறவென்று சொல்ல யாருமே இல்லாமல் ஒரு குழந்தை இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அப்படி இருக்குமானால் அது யாருடைய தவறு? பெற்றவர் செய்யும் தவறுக்குப் பிள்ளைக்கு ஆதரவற்றோர் பட்டமா?

விபத்து, பெற்றோரின் எதிர்பாராத மரணம் போன்றவற்றால் ஒரு குழந்தை ஆதரவற்றுப்போவது வேறு; ஆனால், வேண்டாத கர்ப்பமாக அந்தக் குழந்தை உருவாகி நிராகரிக்கப்படுவது வேறு.

திருமணமாகாத நிலையில் பெண் ஒரு குழந்தையைச் சுமக்க நேரிடும்போது அந்தக் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் பெற்ற குழந்தையையே குப்பைத்தொட்டியில் வீசிவிட்டுச் செல்லும் நிலைகூட சில நேரம் ஏற்படுகிறது. தொப்புள்கொடிகூட அறுக்கப்படாத நிலையில் தண்டவாளத்திலும் பேருந்து நிலையத்தின் கழிவறையிலும் கோயில் வாசலிலும் முட்புதரிலும் இப்படி இன்னும் பல இடங்களில் வீசப்பட்டுச் சென்ற குழந்தைகளின் கதைகள் மனத்தைக் கலங்கடிக்கும். ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தைகளில் ஆண், பெண் பேதம் இருக்கவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, குழந்தையின்மைக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் இன்று பெருகிவருகின்றன. திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லாமல் ஏங்கும் பெற்றோர்கள் இந்தச் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில்கூட செலவுசெய்யத் தயாராக உள்ளனர். இந்தச் சிகிச்சையால் ஏற்படக்கூடிய உடல் வலியையும் மன வலியையும்கூடத் தாங்கிக்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர். ஆனாலும், ஆதரவில்லாமல் கைவிடப்பட்டு, குழந்தைகள் காப்பகங்களில் தவிப்போடு வாழ்ந்துவரும் சின்னஞ்சிறு குழந்தைகளைத் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கென்று ஒரு வீட்டையும் சுற்றத்தையும் அளிக்க முன்வருவதில்லை.

சமூகத்தில் இப்படி ஆதரவற்று விடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு, பாதுகாப்பு, அன்பு, அரவணைப்பு, திறன் வளர்ப்பு போன்றவற்றுடன் சுதந்திரத்தையும் உரிமையையும் அளிப்பதற்கான ஒரு குடும்பச் சூழலை ஏற்படுத்துவதே ‘தத்தெடுத்தல்’ என்னும் நிகழ்வின் நோக்கம். இது குழந்தைக்கு உடல்-உணர்வுரீதியான பாதுகாப்பையும் முறையான வளர்ச்சியையும் அளிக்கும். அது மட்டுமல்லாமல், தம்பதிகளுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியான மன உணர்வையும் இந்தக் குழந்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் உள்நாட்டுத் தத்தெடுத்தலை ஊக்கப்படுத்தவும் வெளிநாட்டுத் தத்தெடுத்தலை நெறிப்படுத்தவும் ‘ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்புத் திட்ட’த்தின் துணையுடன் ‘மாநில தத்தெடுப்பு வள ஆதார மையம்’ (State Adoption Resource Agency) நிறுவப்பட்டுள்ளது.

தத்தெடுக்கப் பதிவுசெய்யும் வழிமுறைகள்

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர், மத்திய தத்து வளதெடுப்பு ஆதார மையத்தின் இணையதளம் (www.cara.nic.in) மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் பெற்றோருக்கான Prospective Adoptive Parents - PAPs பகுதியியைச் சொடுக்கி அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து கீழ்க்கண்ட சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.

l தம்பதியின் பிறப்புச் சான்று.

l தம்பதியின் ஒளிப்படம்

l திருமணப் பத்திரிகை/

திருமணப் பதிவுச் சான்று.

l பான் கார்டு (Pan Card)

l வாக்காளர் அடையாள அட்டை

l வருமானச் சான்று

l உடற்தகுதிச் சான்று

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய சான்றிதழ் விவரம்

l ஆளறிச் சான்று

(நண்பர்/உறவினரிடமிருந்து பெற வேண்டும்)

l சொத்து,சேமிப்புப் பத்திரம்

l ஆண்டு வருமானச் சான்று

l குடும்ப அட்டை

l பணிபுரிவதற்கான சான்று

யாரெல்லாம் தத்தெடுக்கலாம்?

l தத்தெடுக்க விரும்பும் பெற்றோர், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிலையான திருமண பந்தம் உள்ளவராக இருக்க வேண்டும்.

l 0-4 வயது குழந்தையைத் தத்தெடுக்க, தத்தெடுக்கும் தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சம் 90-க்குள் இருக்க வேண்டும்

(தனி நபரின் வயது 25-க்குக் குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்).

l 4-8 வயது குழந்தையைத் தத்தெடுக்க, தத்தெடுக்கும் தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சம் 100-க்குள் இருக்க வேண்டும் (தனி நபரின் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்).

l 8-18 வயது குழந்தையைத் தத்தெடுக்க, தத்தெடுக்கும் தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சம் 110-க்குள் இருக்க வேண்டும் (தனி நபரின் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்)

l தனி நபராக இருக்கும் தாய்/திருமணமாகாத பெண் 30 வயதுக்குக் குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சிறப்புத் தத்தெடுக்கும் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

1. சம்பந்தப்பட்ட சிறப்புத் தத்தெடுக்கும் நிறுவனம், மனுதாரர் பற்றிய குடும்ப விவர அறிக்கையைச் சமூகப் பணியாளரின் நேரடி கள ஆய்வு மூலம் தயார் செய்தல்.

l தயார் செய்யப்பட்ட குடும்ப விவர அறிக்கை, தத்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையின் விவர அறிக்கையுடன் ஒத்திசைவு செய்யப்படும்.

l குழந்தையின் விவரம் நிறுவனத்தினரால், விண்ணப்பித்த மனுதாரருக்குத் தெரிவிக்கப் படும்.

l தத்தெடுக்க விரும்பும் பெற்றோர், குழந்தை தேர்வுசெய்த பின்னர், சட்ட விதிமுறைகளின்படி, உரிய நடவடிக்கையைச் சிறப்புத் தத்தெடுக்கும் நிறுவனம் மேற்கொள்ளும்.

l நீதிமன்ற ஆணை பெற்ற பின்னர், குழந்தையைத் தத்தெடுக்க விண்ணப்பித்த, தகுந்த பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

தத்தெடுக்க ஆகும் செலவு

l தத்தெடுக்கப் பதிவுக் கட்டணம் ரூ.1,000.

lதத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லத்தில் கள ஆய்வு ரூ.5,000 – ரூ.6,000.

l தத்தெடுக்கும் வரையிலான காலத்துக்குக் குழந்தைப் பராமரிப்புச் செலவு ரூ.40,000.

lஉள்நாட்டில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மேற்கண்ட அளவில் செலவாகும். இதுவே வெளிநாட்டுக்குத் தத்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கான செலவு 5,000 டாலர்வரை ஆகும்.

தத்தெடுத்தலை முறைப்படுத்தும் சட்டங்கள்

l இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச்

சட்டம் 1956(HAMA)

l இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000, திருத்தப்பட்ட சட்டம் 2006

மேலும் தகவலுக்கு

அணுக வேண்டிய அலுவலகம்:

சமூக பாதுகாப்புத் துறை;

எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600010

தொலைபேசி எண்; 044- 26427022

கட்டுரையாளர்,

மாநில அளவிலான

சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு:

somurukmani@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in