

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை நிரூபித்து வருகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த சுகாந்தினி. நாம் ஆம்லெட் செய்துவிட்டுத் தூக்கியெறிகிற முட்டை ஓட்டைக்கூட மீண்டும் பயன்படும் வகையில் மாற்றுகிற பக்குவம் தெரிந்து வைத்திருக்கிறார்.
முட்டை ஓட்டில் பேப்பர் வெயிட், பென்குயின், தேங்காய் ஓட்டில் குருவிக் கூடு, கூம்பு கரண்டி, சி.டி.யில் டெடி பியர், முயல், மீன், கிளி, பறவை, அலங்காரப் பொருட்கள், பென் ஸ்டாண்ட், சணலில் வால் ஹேங்கிங்ஸ், டேபிள் மேட் என அவரது கைவண்ணத்தில் மிளிர்கிற எல்லாமே கவனம் ஈர்க்கின்றன.
பொதுவாக வீட்டுக்குள் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் வீட்டின் அழகைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அந்தப் பொருட்களை வைத்தே வீட்டுக்கு அழகைக் கொடுக்கும் கைவினைப் பொருட்களைச் செய்யலாம் என்கிறார் சுகாந்தினி.
“என் அம்மா எம்ப்ராய்டரி வொர்க் செய்வார். என் சிறு வயது முதலே அதைப் பார்த்து வளர்ந்ததால் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே சின்னச் சின்ன தையல் வேலைப்பாடுகளைச் செய்தேன். அதில் சில மாற்றங்கள் செய்யப்போய் உருவானதுதான் மயில் மெட்டல் எம்போரியம்” என்று சொல்லும் சுகாந்தினி, அதன் பிறகு சோலார் வுட் வொர்க், பாண்ட் வொர்க், க்வில்லிங், பட்டுப்பூச்சி கூடு மாலை எனப் படிப்படியாக முன்னேறினார். கடந்த 17 வருடங்களாகக் கைவினைக் கலையில் ஈடுபட்டு வரும் இவர், இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு அவற்றைக் கற்றுத் தந்திருக்கிறார்.
“நான் கைவினைப் பொருட்கள் செய்வதைப் பார்த்து என் பக்கத்து வீட்டில் வசித்தவர் தனக்கும் கற்றுத் தரும்படி கேட்டார். அன்று தொடங்கிய பயிற்சி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லும் இவர், இல்லத்தரசிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் பயிற்சியளிக்கிறார்.