

அல்லவை தவிர்த்து நல்லவை நடந்தேற அறத்தின் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்வதே ஆன்மிகத்தின் அடிப்படை. அடுத்த நொடி நடக்க இருக்கும் மர்மத்தை யாராலும் தீர்த்துச் சொல்லிவிட முடியாது. ஆனால் நேரக்கூடிய விஷயங்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், இறைவனின் பேரருளைப் பெற்று உய்யவும் பூஜைகளும் பரிகாரங்களும் துணை நிற்கின்றன. எதுவாக இருந்தாலும் அவற்றின் ஆதியையும் அந்தத்தையும் உணர்ந்து, புரிந்து செய்யும்போதுதான் முழுப் பலன் கிட்டும். அப்படி ஆன்மிகம் சார்ந்த தெளிவு ஏற்பட உதவுகிறார் ஜோதிட ரத்னா வி. அகிலாண்டேஸ்வரி.
ஜோதிடவியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுவதில் வல்லவரான அகிலாண்டேஸ்வரி குரு, ராகு, சனிப்பெயர்ச்சி பலன்களைக் கணித்துச் சொல்வார். மாத, வார இதழ்களில் ராசி பலன்கள், ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஹரிகதை சொல்வதிலும் சிறந்தவர்.
இந்தப் பகுதியில் ஆன்மிகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் நம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் அகிலாண்டேஸ்வரி. பஞ்சாங்கத்தின் அடிப்படை விஷயத்தில் தொடங்கி கிரகங்கள், பூஜைகளும் பலன்களும், பரிகாரங்கள், தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள், புராணக் கதைகள் எனத் தொடரும் இந்த ஆன்மிகப் பயணம். ஒவ்வொரு வாரமும் அந்தப் பயணத்தில் உங்களை இணைத்துக்கொள்ளத் தயாராகுங்கள் தோழிகளே.