

முத்தப் போராட்டம் கடந்த சில வாரங்களாகப் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திவருகிறது. காபி ஷாப், கடற்கரை போன்ற இடங்களில் ஆணும் பெண்ணும் விரும்பி முத்தம் பரிமாறிக்கொள்வதைச் சில இயக்கங்கள் வன்முறை உள்ளிட்ட வழிமுறைகளில் எதிர்த்ததையொட்டி எழுந்த இயக்கம் இது.
முத்தம் என்பது இரண்டு பேர் தமக்குள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளவும் பரிமாறிக்கொள்ளவுமான ஒரு வழி. இதில் மூன்றாமவருக்கு இடமில்லை என்பது ‘அன்பின் முத்தம்’ (Kiss of Love) இயக்கத்தை ஆதரிப்பவர்களின் வாதம். பொது இடங்களில் இப்படிச் செய்யக் கூடாது என்று தடுப்பதும் அடிப்பதுமான கலாச்சார போலீஸ் வேலையை எதிர்த்தே இந்தப் போராட்டம் எழுந்தது.
அன்பின் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமையை இத்தகைய போராட்டத்தின் மூலம்தான் மீட்டெடுக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். முத்தத்தை இப்படிப் பொது வெளிக்கான கண்காட்சிச் சரக்காக ஆக்குவது இங்கிதமானதுதானா என்றும் கேட்கிறார்கள். எதிர்ப்பை எதிர்க்கப் பல வழிகள் இருக்க, அந்தரங்கமான அன்பின் அடையாளத்தை இப்படிச் கொச்சைப்படுத்தலாமா என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.
முத்தப் போராட்டத்தைச் சாக்காகக் கொண்டு பெண்களிடம் அத்து மீறும் முயற்சியிலும் சில ஆண்கள் ஈடுபட்டதையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளைப் போல பொது வெளியில் முத்தத்தை இயல்பாகக் கடந்து செல்லும் வழக்கம் இல்லாத இந்தியப் பொது வெளியில் இந்தப் போராட்டம் பொருத்தமானதுதானா என்றும் வாதிடுகிறார்கள்.
உணவு, உடை, வாழ்க்கை வசதிகள் என அனைத்திலும் மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் இந்தியர்கள், இரண்டு பேர் முத்தம் கொடுத்துக் கொள்வதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் கலாச்சாரத்தையும் அதற்கான மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்று முத்தப் போராட்ட்டத்தின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.