என் பாதையில்: பெண்ணுக்கு மரியாதை

என் பாதையில்: பெண்ணுக்கு மரியாதை
Updated on
1 min read

பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு விசேஷத்துக்குப் பத்திரிகை தரும்போதோ விருந்துக்கு அழைக்க வரும்போதோ ஆண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பொதுவாக நம் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு மணமான பின்னர் பெண் வீட்டார் தொடர்புடைய திருமணங்கள் ஏதேனும் வந்தால், பெண் வீட்டு உறவினர்கள் வந்து மாப்பிள்ளையை மரியாதையுடன் அழைக்க வேண்டும். ஆனால், கணவரின் தம்பிக்கோ தங்கைக்கோ திருமணம் என்றால் ஆணைப் பெற்றவர்கள், மருமகளை நேரில் வந்து அழைப்பதில்லை.

என் தோழி திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் தனிக்குடித்தனம் சென்றாள். நன்கு படித்த பெண். ஆசிரியர் வேலைக்குச் சென்றவள், தற்போது ‘குடும்பத் தலைவி’யாக இருக்கிறாள். அவள் கொழுந்தனார் திருமணத்தின்போது நடந்த விஷயம் இது. நம் சமூகம் வழக்கப்படுத்தி வைத்திருக்கும் இந்தப் பழக்கத்திலிருந்து மாறுபட்டு நடந்துகொண்டாள். அவள் கொழுந்தனார் திருமணத்துக்கு மாமனார், மாமியார் இருவரும் நேரில் வந்து அழைத்தால்தான் திருமணத்துக்கு வருவேன் என்று சொன்னாள். அவர்களும் இவள் சொல்லியபடியே வீட்டுக்கு வந்து அழைக்க, திருமணத்தை முன் நின்று நடத்தினாள். அவளின் இந்தச் செயல் அப்போது எனக்கு வித்தியாசமாகத் தோன்றியது.

ஆனால் ‘பெண் இன்று’ இணைப்பிதழைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து அன்று நான் நினைத்தது தவறோ என்று தோன்றியது. உண்மையிலேயே எல்லாவிதத்திலும் பெண் ஆணுக்கு நிகரானவள், மரியாதை வழங்குவதில்கூட என்ற உண்மை புலப்படத் தொடங்கியது. என் தோழியின் அன்றைய துணிச்சலான முடிவை நினைத்து இப்போது பெருமைகொள்கிறேன்.

இதெல்லாம் ஒரு புரட்சியா என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சமூகம் வகுத்து வைத்திருக்கும் வழக்கங்களை எந்த எதிர்ப்பும் இன்றிச் செக்குமாடுபோல் சுற்றிவந்துகொண்டிருக்கிறபோது, ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று என் தோழி கேட்டதே பெரிய விஷயம்தான். கணவனும் மனைவியும் சமம் எனும்போது, ஏன் எல்லா இடங்களிலும் ஆணுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது? பெண்ணும் மரியாதைக்கு உரியவள்தானே?

- பெயர் குறிப்பிட விரும்பாத ஈரோடு வாசகி

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்திலிருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in