

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஊழியர்களின் வாகனங்களை அவர்களின் மிரட்டலையும் மீறி பரிசோதித்த பெண் காவல்துறை அதிகாரி ஸ்ரேஷ்டா தாக்கூர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆளுங்கட்சித் தொண்டர்களுக்கு ‘கவுரவக் குறைவு’ ஏற்பட்டுவிட்டதாக கட்சியின் 11 எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலந்த்ஷார் பகுதியிலிருந்து நேபாள எல்லையில் உள்ள பராய்க்கு ஸ்ரேஷ்டா மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்குப் பிறகும் தான் சந்தோஷமாக இருப்பதாக ஸ்ரேஷ்டா தாக்கூர் முகநூலில் பதிவிட்டுள்ளார். ஒரு பெண் காவல்துறை அதிகாரி தன் கடமையைச் செய்ததற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
மனித உரிமைகளை மீறிய கைது
ஆந்திராவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் எனக் கருதப்படும் ககராலா பத்மா சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு அருகே நள்ளிரவு 12 மணிக்கு ஆந்திர உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். 2002-ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டார். 2005-ம் ஆண்டுவரை சிறையில் இருந்த அவர், பின்னர் பெண்கள் உரிமைகள் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தார். மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதியாக இருந்த பத்மா, பிணையில் 2012-ம் ஆண்டு வெளியே வந்தார். அதன் பின்னர் தலைமறைவாக இருந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
பெண்களை நள்ளிரவில் கைதுசெய்வது மனித உரிமை மீறல் என்று அவருடைய கணவர் விவேக் கூறியுள்ளார். அத்துடன் சட்டவிரோதமான சித்திரவதைகளுக்கு பத்மா உள்ளாக்கப்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். பத்மாவின் கைதைக் கண்டித்துள்ள புரட்சிகர ஜனநாயக முன்னணியின் தலைவரான வரவர ராவ், பத்மாவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் உடனடியாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். பத்மாவின் கைதுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகளிர் பேருந்துகள் அறிமுகம்
மும்பை மாநகரகப் பேருந்துக் கழகம் ‘தேஜஸ்வினி’ என்ற பெயரில் நூறு மகளிர் அரசுப் பேருந்துகளை அறிமுகமாகப்படுத்தி இருக்கிறது. மாநகரப் பேருந்துகளில் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்குத் தீர்வாக இந்தப் பேருந்துகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக காலை ஏழு மணி முதல் 11 மணிவரையும், வீடு திரும்பும் நேரமான மாலை ஐந்து முதல் ஒன்பது மணி வரையும் இவை இயக்கப்பட உள்ளன.
மும்பை நகரத்தைத் தொடர்ந்து நவி மும்பை, தாணே மற்றும் பிற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் பெண் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் பணிபுரிவார்கள். மும்பை போன்ற மாநகரங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இடம்பிடிப்பதே பெண்களுக்கு கனவாக ஆகிவரும் நிலையில், இந்தச் சேவை பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதான் மகளிர் பாதுகாப்பா?
லக்னோவில் உள்ள பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம், பெண் ஊழியர்களுக்கும் மாணவிகளுக்கும் விநோதமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மாலை ஆறு மணிக்கு மேல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தால் துணைவேந்தரிடம் அனுமதியைப் பெறவேண்டும் என்பதே அது. பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சில மோசமான சம்பவங்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கோவிந்த் பாண்டே கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண்கள் பாதுகாப்புக்கான சரியான வழிமுறைகளை மேற்கொள்ளாமல் அவர்களைச் சீக்கிரமாகவே வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை ஏன் என்று பெண் ஊழியர்களும் மாணவிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.