

ஜூன் 4-ம் தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘அடையாளத்தை மறக்கவைத்த தாய்லாந்து’ என்ற கட்டுரை இந்தியப் பெண்களின் ஏக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை பெண் என்ற அடையாளத்தை மறப்பது என்பது கனவில்கூட நிறைவேறாத ஒன்று. இன்றைய கட்டமைப்பில் பெண்கள் படிக்கலாம், வேலைக்குப் போகலாம், அரசியலில் ஈடுபடலாம், மாநாடுகளில் உரையாற்றலாம், ஊடகங்களில் மிளிரலாம் என்று சில அம்சங்களைச் சாத்தியமாக்கியுள்ளனர்.
இவையெல்லாம் பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கலாம். ஆனால், பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் பெற்றோருக்கு மகளாக, அண்ணனுக்குத் தங்கையாக, கணவனுக்கு மனைவியாக, மகனுக்குத் தாயாக என்று எப்போதும் ஒரு ஆணின் பாதுகாப்பில் அடங்கியிருக்க வேண்டிய நிலைதான் இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது.
குடும்ப கவுரவம் என்பது பெண்களிடம்தான் உள்ளது என்ற கற்பிதம் மதரீதியாகவும், சாதியரீதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணைத் தெய்வமாகப் போற்றி ஆராதிக்கும் நம் நாட்டில்தான், சிறுமிகள்கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் நடைபெறுகின்றன. தான் ஒரு பெண் என்பதை இருபத்தி நான்கு மணி நேரமும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர்.
இந்தச் சமூகம் பெண்களைப் பற்றி உருவாக்கிவைத்திருக்கும் கற்பிதங்கள் நியாயமானவையல்ல, தவறானவை என்பதை ஆண்களுக்குக் கற்பிக்க வேண்டும். தாய்களின் நாடு எனப் பொருள் தருகின்ற தாய்லாந்து புத்தரின் வழி நிற்கும் நாடு. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதைவிட ஆண்களுக்கு மேலானவர்கள் என்பதை ஆண்கள்தான் முதலில் உணர வேண்டும். பெண்களை சக மனுஷியாகப் பார்க்கச் சிறுவயதிலேயே ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்குச் சம உரிமை, சுதந்திரம் போன்றவை அளிக்கப்பட வேண்டும். இந்தியப் பெண்கள் ‘பெண்’ என்ற அடையாளத்தை மாற்ற வேண்டுமானால் அதற்கான திறவுகோல் சமய, சாதி, சாஸ்திர, கலாச்சாரம் ஆகியவற்றில் மறைவாகப் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும். அதிலிருந்து வெளிவர முயன்றால்தான் பெண்களால் தங்களின் சுயத்தை உணர முடியும்.
- பாரதிமகள், புதுச்சேரி.