

ஒருவரது வீட்டுக்குள் நுழைந்தால் யார் வரவேற்பார்கள்? அந்த வீட்டில் இருக்கிறவர்கள்தானே. ஆனால் சிதம்பரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறார் வண்ண விநாயகர். ஆச்சரியத்தோடு பார்க்கும் முயல், வாலாட்டும் நாய், கோழி, யானை, குரங்கு, ஒட்டகச் சிவிங்கி என விதவிதமான விலங்குகள் அனைத்தும் சாஃப்ட் டாய்ஸ் வடிவத்தில் காட்சி தருகின்றன.
முத்துலட்சுமிக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே கலைகளின் பக்கம் கவனம் திரும்பியது. பொம்மைகள் தவிர கிளாஸ் பெயிண்டிங், கிளாத் பெயிண்டிங் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரையைப் பதித்துவருகிறார்.
கல்லூரிப் படிப்பின்போது கைவினைக் கலைகளைத் தொடர முடியாத முத்துலட்சுமி, மணமாறனை மணம் முடித்த பின் தனது கலையார்வத்துக்கு மீண்டும் வடிவம் தரத் தொடங்கினார். முத்துலட்சுமியின் கலையார்வத்தை அறிந்த அவருடைய சகோதரர் சென்னையிலிருந்து பொம்மைகள் செய்வதற்கான மூலப் பொருள்களை வாங்கி அனுப்ப, அவற்றைக் கொண்டு நேரம் காலம் பாராமல் வீடு முழுக்கக் கலைப் பொருட்களை உருவாக்கி வைத்துள்ளார்.
மூன்று பாடங்களில் எம். ஏ. முடித்திருக்கும் முத்துலட்சுமி, தற்போது இந்தி மொழி பயிற்றுவித்து வருகிறார். தன்னிடம் இந்தி பயில வரும் மாணவ, மாணவியரிடம் கலைகளைப் பற்றி எடுத்துரைத்து, கற்க விரும்புவோருக்குக் கற்றுத் தருகிறார். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும்போது அவர்களுக்குத் தன் கையால் செய்த கலைப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார்.
“ஒவ்வொரு வீட்டிலும் கணவனின் வளர்ச்சியில் ஒரு பெண் இருந்தார் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் என் வீட்டில் என் கணவர்தான் என் வளர்ச்சிக்கு வழிகாட்டி” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் முத்துலட்சுமி.