

‘இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா!’ -
நெருக்கடிநிலை காலகட்டத்தில் இந்த முழக்கம் மிகப் பிரபலம். இதைப் பெரும்பாலோர் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால், ‘இயற்கை என்றால் இந்திரா, இந்திரா என்றால் இயற்கை!’ என்று சொன்னால், அதை அங்கீகரித்தே ஆக வேண்டும். ஆம், இந்தியாவில் இன்று ஓரளவுக்காவது காடுகளும் காட்டுயிர்களும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்கின்றன என்றால் அதற்கு முக்கியக் காரணம் இந்திரா காந்தி!
“அணுகுண்டுப் பரிசோதனையை நடத்திய தலைவர் என்ற நிலையிலும், நெருக்கடிநிலையை அமல்படுத்திய கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற வகையிலுமே இந்திரா காந்தியைப் பலரும் பார்த்திருக்கிறார்கள். அவரைப் பற்றிய புத்தகம் எழுதிய பலரும் அப்படித்தான் அணுகியிருக்கிறார்கள். ஆனால், யாருமே அவரை ஒரு சிறந்த இயற்கையியலாளராகப் பார்த்ததில்லை” என்று இயற்கை மீதான இந்திரா காந்தியின் பார்வையை முன்வைத்து, ‘இந்திரா காந்தி: எ லைஃப் இன் நேச்சர்’ எனும் புத்தகத்தை எழுதிய சுற்றுச்சூழல் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். சுற்றுச்சூழலுக்கு இந்திரா காந்தியின் பங்களிப்பைப் பற்றித் தெரிந்துகொண்டால், அவர் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியும்.
தந்தை காட்டிய திசை
இதர குழந்தைகள் தங்கள் தந்தையுடன் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கையைப் போல இந்திரா காந்திக்கு வாய்க்கவில்லை. காரணம் இந்திரா சிறுமியாக இருந்தபோது, அவருடைய தந்தை ஜவாஹர்லால் நேரு பெரும்பாலான நாட்களைச் சிறையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் கடிதங்கள் மூலமாக மட்டுமே தந்தை - மகள் உறவு பலம் பெற்றது. வழக்கமான நலம் விசாரிப்புகளைக் கொண்டிருக்கும் கடிதங்கள் போல் அல்லாமல், தான் படித்த புத்தகங்கள் குறித்தும் இயற்கை வரலாறு குறித்தும் இந்திராவுக்கு எழுதினார் நேரு. பிரபலப் பறவையியலாளர் சாலிம் அலி எழுதிய ‘தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ்’ எனும் புத்தகம் பற்றி இந்திராவுக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்தார். அந்தப் புத்தகத்தையும் அனுப்பினார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து இந்திராவுக்குப் பறவைகள் மீது ஈடுபாடு வந்தது.
இது ஒரு புறமிருக்க, இந்திராவின் தாய் கமலா நேரு அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். இதனால் காஷ்மீர், டேராடூன், சிம்லா போன்ற மலைப் பிரதேசங்களில் அவர் தங்க வேண்டியிருந்தது. அவருக்குத் துணையாக இந்திராவும் சென்றார். இதனால் இயல்பாகவே இந்திராவுக்கு மலைகள் மீது ஆர்வம் உண்டானது. இவ்வாறு அவரின் இளமைக் காலம், இயற்கை சார்ந்த செறிவான அனுபவத்துடன் திகழ்ந்தது.
முதன்மைப் பிரதமர்
1966 முதல் 1977 வரையும், பிறகு 1980 முதல் 1984-ம் ஆண்டுவரை என 16 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் இந்திரா. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும் கரிசனத்துடன் கவனிக்கப்பட வேண்டியவை.
பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, அனைத்திந்தியப் பணிகள் சட்டம் 1951-ல் திருத்தம் கொண்டுவந்தது. அதற்குப் பிறகுதான் இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்.) எனும் பிரிவே வந்தது. ஆசியாவில் முதன்முறையாக ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்க’த்தின் (ஐ.யு.சி.என்.) 10-வது பொதுச் சபைக் கூட்டம் இந்தியாவில் நடைபெற இந்திரா காரணமாக இருந்தார். அது இந்தியாவின் சூழலியல் வரலாற்றில் ஒரு மைல்கல்.
அதற்குப் பிறகு, 1972-ம் ஆண்டு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐ.நா. மனிதச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பேசினார் இந்திரா. அப்போது ‘வறுமையும் தேவையும்தானே மிகப் பெரிய மாசுபாடுகள்?’ என்று அவர் எழுப்பிய கேள்வி, உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
இவை தவிர, காட்டுயிர்களைக் காப்பாற்ற ‘இந்தியக் காட்டுயிர் வாரியம்’, புலிகளைக் காப்பாற்ற ‘புலி பாதுகாப்புச் செயல்திட்டம்’, தமிழகத்தின் முதுமலை, களக்காடு உட்பட நாடு முழுவதுமுள்ள பல காட்டுப் பகுதிகளைச் சரணாலயங்களாக அறிவித்தது, காற்று, நீர் மாசுபாடுகளைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்றியது என இயற்கை சார்ந்து இந்திரா செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அனைத்துக்கும் மேலாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவென்று, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒன்றைத் தனியே ஏற்படுத்தியது அவரின் முக்கியச் சாதனை. அந்த அமைச்சகத்தின் அமைச்சராகவும் அவரே பணியாற்றினார். பிரதமராக இருந்துகொண்டு, சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பணியாற்றிய ஒரே பிரதமர் இப்போதுவரை இந்திரா காந்தி மட்டும்தான்!
களங்கமும் கறையும்
இத்தனை சாதனைகளைச் செய்தாலும், அவரின் பதவிக் காலத்தில் அவர் மீது களங்கமும் கறையும் ஏற்படாமல் இல்லை. உதாரணத்துக்கு, தாஜ்மகாலுக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கொண்டுவந்தால், அது தாஜ்மகாலின் எழிலையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்று தெரிந்தும், மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அங்கு உருவாக்கினார்.
அதேபோல ஸ்டாக்ஹோமில் அவர் எழுப்பிய கேள்வியும் விமர்சனத்துக்குள்ளானது. மேலோட்டமாகப் பார்த்தால், அவர் ஏழைகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார் என்பதுபோலத் தோன்றும். உண்மையில் அவர் சொல்ல வந்தது இதைத்தான்: “வறுமையைப் போக்குவதற்கும் தேவையை நிறைவேற்றுவதற்கும் நாம் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளாலும் நகரமயமாக்கலாலும்தான் அதிக அளவு மாசுபாடுகள் ஏற்படுகின்றன” என்பதே அது.
நேருவால் ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று கருதப்பட்ட அணைகள்தான், இந்தியாவில் உருவான முதல் சூழலியல் சீர்கேடு என்று சொல்லப்படுவது உண்டு. அவருடைய மகள் இந்திரா, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமைச்சகத்தை உருவாக்கியதை என்னவென்று சொல்ல? இயற்கையின் முரண்தான்! ரவீந்திரநாத் தாகூரை ‘சூழலியல் மனிதன்’ என்று அழைப்பார் இந்திரா. இந்திராவின் சாதனைகளின் அடிப்படையில் ‘சூழலியல் பெண்’ என்று அவரை அழைக்கலாம் என்கிறார் ஜெய்ராம் ரமேஷ். அதில் தவறில்லை!