பெண் இன்று: அதற்காக ஒதுங்காதீர், ஒதுக்காதீர்!

பெண் இன்று: அதற்காக ஒதுங்காதீர், ஒதுக்காதீர்!
Updated on
2 min read

வன்முறை என்றாலே அதில் எந்த நியாயங்களையும் எதிர்பாக்க முடியாதுதான். அதிலும் குடும்ப வன்முறையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்களின் நிலை கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட கிளியைப் போன்றது. இது போன்றதொரு நிலைமையில் சிக்கிக் கொண்டவர்தான் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஊர்மிளாசனம்.

இனியும் இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையை அடைந்த அவர் தன்னுடைய மூன்று வயதுப் பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். கல்விச் சான்றிதழ்கள், திருமணத்தின் போது பெற்றோர் அளித்த நகை, பணம் என எதையும் அவர் தன்னுடன் எடுத்து வரவில்லை. ஆனால், எதற்கும் சோர்ந்துபோகாமல் மன தைரியத்துடன் முன்னோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார் ஊர்மிளா.

ஊர்மிளாசனம் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதேபோல் எழுத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இதழியல் படிப்பையும் படித்தார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிராந்திய நாளிதழ்களில் அவர் எழுதியிருக்கிறார். அதேபோல் இயல்பிலேயே பிறருக்கு உதவி செய்வதிலும், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதிலும் ஆர்வம் கொண்டவர். ஊர்மிளாவின் இந்த அம்சங்களே அவரின் மனோ தைரியத்தின் வேராக அமைந்தன.

ஏற்கெனவே பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் கொண்ட ஊர்மிளா, வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு ‘மௌனத்தை உடையுங்கள்’ என்ற தலைப்பில் பெண்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் எழுத்து வடிவிலான பிரசாரத்தைத் தொடங்கினார். அவரின் இந்த பிரசாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக சிறந்த ஊடகவியலாளருக்கான லாட்லி தேசிய விருதைப் பெற்றார். தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக்கொண்ட ஊர்மிளா, தன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்தார். அதேசமயம் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவதையும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதையும் அவர் கவனித்தார்.

“பெண்களை மற்ற நாட்களில் பூஜித்தாலும், மாதவிடாய் நாட்களில் அவர்களைத் தீண்டத்தகாதவர்கள்போல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறும் ஊர்மிளா மாதவிடாய் ஒதுக்கிவைக்கும் விஷயமல்ல; பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார்.

இதன் காரணமாக மகாராஷ்டிரா, பீஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கினார். மாதவிடாய் நாட்களில் பெண்கள் எந்த அளவுக்குச் சுகாதாரமாக இருக்க வேண்டும் அதைத் தீட்டு என்று கருதாமல் பெண் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக பார்ப்பது, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, முக்கியமாக சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது போன்றவை பிரசாரத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தன. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் அதிக அளவில் பெண்கள் மத்தியில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டார்.

ஊர்மிளாவின் இந்தச் செயலைப் பாராட்டும் விதமாக உலக அளவில் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றிவரும் வரும் வேர்ல்டு பிளஸ் அமைப்பு அவருக்கு ‘எங்களுக்கான எதிர்காலக் குரல்’ (voice of our future) என்ற விருதை வழங்கியுள்ளது. 190 நாடுகளில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் சார்பில், உலக அளவில் மூவர் மட்டுமே இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது முக்கியமானது.

ஊர்மிளாசனமின் எதிர்காலத் திட்டம் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. அதேபோல் பருவம் அடைந்தவுடன் பெண் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் மாதவிடாய் குறித்த கல்வி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே.

தன்னுடைய வாழ்க்கை அடுத்து என்னவாக இருக்கும் என்ற எந்தத் திட்டமிடலும் இல்லாமல் புதிய வாழ்வைத் தொடங்கிய ஊர்மிளாசனம், தற்போது உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்றால் அது ஆச்சரியமானதுதானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in