

உலக பாடிபில்டிங் சாம்பியன் பூமிகா
ஜூன் 17 அன்று இத்தாலி நாட்டில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக டேராடூனைச் சேர்ந்த 21 வயதுப் பெண் பூமிகா சர்மா கலந்துகொண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று மிஸ் வேர்ல்டு ஆனார். வேர்ல்டு அமெச்சூர் பாடிபில்டிங் அசோசியேஷன் நடத்திய இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், முதலில் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக ஆவதை விரும்பியவர். பொதுவாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பாடிபில்டிங் துறையில் கேலி, கிண்டல்களைத் தாண்டி பூமிகா சர்மா இந்த இடத்தை அடைந்துள்ளார்.
“பெண் பாடிபில்டர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களே இன்னும் உள்ள துறை இது. எனது பயிற்சியின் போது முதல் ஆண்டில் எனக்குக் கழுத்தில் அடிபட்டது. என் அம்மாவின் ஊக்கம் காரணமாகவே நான் பயிற்சியைத் தொடர்ந்தேன்” என்கிறார் பூமிகா. இவருடைய அம்மா ஹன்சா மன்ரால், இந்தியப் பெண்கள் வெயிட்லிஃப்டிங் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.
வேலை உண்டு வீடு இல்லை
இந்தியாவிலேயே முன்னோடி நடவடிக்கையாக கொச்சி மெட்ரோ ரெயில் லிமிடெட், 23 திருநங்கைகளை அடிப்படை ஊழியர்களாகப் பணிக்கு அமர்த்தியது. இந்த முயற்சிக்குப் பரவலான பாராட்டும் கிடைத்தது. ஆனால், பணியில் அமர்த்தப்பட்ட ஒரு வாரத்தில் எட்டுப் பேர் வேலையிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றியுள்ள பகுதிகளில் திருநங்கைகளுக்கு வீடு கிடைக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
பணியமர்த்தப்பட்ட 23 பணியாளர்களில் ஒருவரான ராக ரஞ்சனி, எடப்பாளி நிலையத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராக உள்ளார். அவர் தற்போதுவரை லாட்ஜ் ஒன்றிலேயே நாளொன்றுக்கு 600 ரூபாய் வாடகை கொடுத்துத் தங்கிவருகிறார். ஆனால், இவருக்குத் தரப்படும் சம்பளத்தை இவர் தங்குவதற்காக அளிக்கும் வாடகைப் பணமே விழுங்கிவிடும். திருநங்கைகள் போன்ற பாலியல் சிறுபான்மையினருக்கு வேலைகளைத் தவிரவும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருப்பதை இது உணர்த்துகிறது.
இருபதில் ஒரு பங்கு ஊதியம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஆண் நட்சத்திரங்களுக்கும் பெண் நட்சத்திரங்களுக்கும் இடையிலான சம்பளப் பாகுபாடு குறித்து ஒரு இணைய இதழ் அதிகாரபூர்வமான விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ்த் திரையுலகில் இருக்கும் சம்பள வித்தியாசங்கள் வெளியாகியுள்ளன. ஆண், பெண் நட்சத்திரங்களைப் பொறுத்தவரை ஒரு முன்னணி ஆண் நட்சத்திரத்துக்கும் முன்னணிப் பெண் நட்சத்திரத்துக்கும் இருக்கும் வித்தியாசம் இருபது மடங்கு என்று தெரியவந்துள்ளது.
தமிழில் முன்னணி நட்சத்திரம் ஒருவரின் சம்பளம் ரூ.30 கோடியென்றால் அவருடன் ஜோடியாக நடிக்கும் பெண் நட்சத்திரத்தின் சம்பளம் ரூ. 2 கோடி அளவே உள்ளது. மிக மிகச் சொற்பமான முன்னணி நட்சத்திரங்களே கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். தமிழில் நயன்தாராவும் மலையாளத்தில் மஞ்சு வாரியரும் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். திரைக்கதையில் பெண் நட்சத்திரங்களுக்கான இடம் என்பது குறைவாகவே இருப்பதும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அத்துடன் இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பெரும்பாலானோர் ஆண்களாக இருப்பதும் காரணம் என்று சொல்லப்படுகிறது.
கார் வாங்கக் கூடாதா?
ஆண் அரசியல்வாதி கார் வாங்கினால் அது சகஜம். ஆனால் ஒரு ஆதிவாசிப் பெண் அரசியல்வாதி கார் வாங்கினால் அவ்வளவுதான். ஆமாம்! கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கான உரிமைகளைப் பேசும் சி.கே. ஜானு, டொயோட்டோ எடியோஸ் காரைச் சமீபத்தில் வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து முகநூலில், ஆதிவாசிகளின் நலன்களுக்குத் துரோகம் புரிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார். ஆதிவாசிகளுக்கு அரசு உறுதிமொழியளித்த நிலத்தைத் தராததற்காக மக்களைத் திரட்டி போராடியவர் அவர்.
அந்தப் போராட்டம் தொடர்பாக அவர் மீது 75 வழக்குகள் போடப்பட்டன. 2016-ம் ஆண்டில் அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன் கட்சியைச் சேர்த்ததற்காகப் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தார். தனது நிலத்திலிருந்து கிடைத்த விவசாய வருவாயிலிருந்தே இந்த காரை வாங்கியுள்ளதாகவும் தனக்கு ஒரு ஜீப்பும் சொந்தமாக உள்ளதாகவும் கூறியுள்ளார் சி. கே. ஜானு.