

உங்கள் ஆன்லைன் அலுவலகத்தில் வாடிக்கையாளருக்குப் பிடித்தவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு, பிறகு பொறுமையாகப் படித்துப் பயன்படுத்த உதவும் தொழில்நுட்ப வசதி ‘பின் இட்’ (Pin It).
அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் நிறுவனத்தைப் பற்றிய செய்திகள், சமூக வலைதளப் பகிர்வுகள், விடுமுறை தினங்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். செமினார் ஹால் நோட்டீஸ் போர்டில் அன்றைக்கு நடக்கவிருக்கும் செமினார் குறித்த செய்திகள், படங்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள்.
இப்படி ஓர் அலுவலகத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நோட்டீஸ் போர்டுகள் இருப்பதைப் போல நாமும் Pinterest என்ற வெப்சைட்டில் நமக்கான அக்கவுன்ட்டில் எத்தனை போர்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம். படிப்பு, ஷாப்பிங், குழந்தை வளர்ப்பு இப்படி நம் விருப்பத்துக்கு ஏற்ப பின் போர்டுகள், இணையத்தில் பார்வையிடும் வெப்சைட் பின் போர்டுகள் போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்துப் படிக்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
Pinterest என்பது நமக்கு விருப்பமான பின் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள உதவும் வெப்சைட். நாம் பார்வையிடும் வெப்சைட்களில் Pin It பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், Pinterest வெப்சைட்டில் நமக்கான அக்கவுன்ட்டுக்கு அழைத்துச் செல்லும். பொருத்தமான பின் போர்டில் நாம் விரும்பிய தகவல்கள், வெப் பக்கங்கள், ஒளிப்படங்கள், வீடியோக்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
எப்படி உறுப்பினர் ஆவது?
https://www.pinterest.com/ என்ற வெப்சைட்டில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, யூசர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
1. Pinterest வெப்சைட்டில் உறுப்பினரான பிறகு நம் பிசினஸ் குறித்த செய்திகள், படங்கள் போன்றவற்றை நம் வெப்சைட், பிளாக், கூகுள்+, ஃபேஸ்புக் போன்றவற்றிலிருந்து எடுத்து பின் போர்டுகளில் சேகரித்து, வெளியிடலாம்.
2. நம் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு ஷேர் செய்து விளம்பரப்படுத்தலாம். நம் நட்பு வட்டத்தில் இல்லாதவர்களுக்கு இமெயில் மூலம் அவர்கள் பார்வையிடும் வகையில் வசதிகளும் உள்ளன.
3. Pinterest வெப்சைட்டில் நமக்குப் பிடித்த உறுப்பினர்களைப் பின்தொடரலாம் (Follow). நம்மை நம் நண்பர்கள் பின்தொடரும்படி செய்யலாம்.
4. நட்பு வட்டத்தை இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அழைப்புவிடுத்து விரிவுபடுத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் நமக்கு அழைக்கும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம்.
5. நம் பிசினஸ் போட்டியாளர்களின் தயாரிப்புகளை நாம் கண்காணித்துக்கொள்ள முடிவதால் நம் தயாரிப்புகள், சேவையின் தரத்தை உயர்த்திக்கொண்டேவர முடியும். இதற்கு நம் பிசினஸ் போட்டியாளர்களின் Pinterest வெப்சைட்டைப் பின்தொடர வேண்டும்.
6. நம் வெப்சைட், பிளாக் போன்றவற்றில் Pin It பட்டனை இணைக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.
7. நம் பிரவுசரில் Pin It ஐகானை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்குப் பிடித்தவற்றை நம் பின் போர்டில் சேகரிக்க முடியும்.
8. நம் வாடிக்கையாளர்களுக்கு பின் போர்டைப் பற்றியும் பின் இட் பற்றியும் Pinterest வெப்சைட் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் கடமை. நம் விசிட்டிங் கார்ட், இமெயில் சிக்னேச்சர் பகுதி, வெப்சைட், பிளாக் போன்று எங்கெல்லாம் நம்மைப் பற்றிய தகவல்களை வெளியிடுகிறோமோ அங்கெல்லாம் நம் Pinterest முகவரியையும் வெளியிட வேண்டும். Pinterest வெப்சைட்டில் நம் புரொஃபைலில் நம்மைப் பற்றிய தகவல்களை முறைப்படுத்தி டைப் செய்யும்போது நமக்குப் பொருத்தமான முகவரியை உருவாக்கிக்கொள்ளலாம்.
(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com