

கிறிஸ்தவப் பெண்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பிரத்யேகப் பிரிவைக் கொண்டிருக்கிறது.
ரோஷினி அமலாவின் கணவர் ஜேம்ஸுக்கு நல்ல வருமானம். ரோஷினியின் காதல் திருமணம் குறித்து அவரது பெற்றோருக்குக் கவலையிருந்தது. ஜேம்ஸ் சரியாகப் படிக்காததால், அவரைப் பொறுப்பற்றவராகக் கருதினர். ரோஷினிக்குத் தன் கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அளவிட முடியாத நம்பிக்கை இருந்தது.
திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தொழிலில் நஷ்டம் வந்ததால், ரோஷினியின் 40 சவரன் நகைகளும் வங்கிக்குப் போய்விட்டன. விசேஷங்களுக்கு நகை வேண்டுமென்றால் பெரிய தொகையை வட்டிக்கு வாங்கி, நகையைக் கொண்டுவருவதும் பிறகு மீண்டும் அடமானம் வைப்பதுமாக இருந்தார் ஜேம்ஸ். ரோஷினி பொருளாதாரப் பிரச்சினைகளைப் பெற்றோருடனோ கணவர் வீட்டாருடனோ பகிர்ந்துகொள்ளவில்லை. ஜேம்ஸ் செய்யும் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சகஜமானவை என்றும், அவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் சொன்னதால் அமைதிகாத்தார்.
ஒரு வருடம் ஆகியும் நகைகள் மீட்கப்படவில்லை. தன்னை ஜேம்ஸ் ஏமாற்றுவது, வேலை இல்லாமல் இருப்பது தெரிந்தும் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக ரோஷினியும் பொய்களைக் சொல்லத் தயங்கவில்லை.
ஜேம்ஸ் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். ஊர் முழுவதும் கடன் வாங்கினார். மனைவி வந்த நேரம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகப் புலம்பினார். நகைகள் ஒவ்வொன்றாக ஏலத்துக்கு வந்தன. ரோஷினி நன்கு படித்திருந்ததால் வேலைக்குப் போக ஆரம்பித்தார். தன்னுடைய சம்பளத்தில் வீட்டுச் செலவுகளைக் கவனித்தார். ரோஷினிக்குக் குழந்தை இல்லை என்ற கவலை இப்போது இல்லை.
பொருளாதாரச் சிக்கல்கள், குடிப்பழக்கம் போன்றவற்றால் ரோஷினி மீது வன்முறையைச் செலுத்தினார் ஜேம்ஸ். பிரிந்து செல்ல முடிவுசெய்தார் ரோஷினி. இவ்வளவு கொடுமைகளையும் பார்த்து வருந்திக்கொண்டிருந்த உறவினர்கள் சட்டபூர்வமான விவாகரத்து என்றவுடன், ரோஷினிக்கு அறிவுரைகள் சொல்லத் தொடங்கினர். ஜேம்ஸைத் திருத்த தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினர். சமயம் சார்ந்த நண்பர்களும் பாதிரியார்களும்கூட ஜேம்ஸுக்கு அறிவுரை சொல்லவில்லை. மாறாக ரோஷினி புத்திக்கூர்மையுள்ள பெண் என்பதால், பிரச்சினைகளை அவரே தீர்க்க வேண்டும் என்றார்கள்.
பாதுகாப்புக்கும் வழி உண்டு
வழக்கறிஞராகப் பணிபுரியும் தோழி ரேச்சலைப் பார்த்தார் ரோஷினி. சம்பளம் முழுவதும் ஜேம்ஸ் குடிப்பதற்கும் வட்டிக்கும் கடன்காரர்களின் தொல்லைக்கும் சரியாக இருந்தது. கடந்த நான்கு வருடங்களாகப் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார் ரோஷினி. ஜேம்ஸ் கடன் வாங்கியபோதெல்லாம் ரோஷினியின் நல்ல வேலையையும் சம்பளத்தையும் காட்டி கடன் வாங்கியதால், கடன் அளித்தவர்கள் கொடுக்கும் தொல்லைகள் மிகவும் துன்பத்தை அளித்தன.
விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாதுகாப்பால் வழக்கறிஞர் உதவியோடு தன்னுடைய சம்பளத்தையும் சொத்து களையும் உடைமைகளையும் பாதுகாக்க உத்தரவு கோரி நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார் ரோஷினி. நீதிமன்றமும் கணவர் கைவிட்டுச் சென்ற பின்னர், அந்தப் பெண் தன்னுடைய பொருளாதாரத் தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும்பட்சத்தில், அவரது உடைமைகள், சொத்துகள் சம்பளத்தை அவர் தன் கணவர் அல்லது கணவரிடமிருந்து கடன் வசூலிக்கத் தகுதியானவர்கள் என யாரும் பெற முடியாது என்ற பாதுகாப்பு உத்தரவை அளித்தது.
இதன் மூலம் ரோஷினியைப் போன்றே, கணவர் கைவிட்டுவிட்ட பின்னரும் தனக்கு நேரக்கூடிய மிகப் பெரும் இழப்புகளை ஒரு பெண் தவிர்க்க முடியும். ஒருவேளை அந்தப் பெண்ணிடமிருந்து பணத்தைப் பெற மூன்றாம் நபர்களுக்குச் சட்டப்பூர்வமான தகுதி இருப்பின், நீதிமன்றத்திடம் முறையிட்டு மனு செய்துதான் அந்தப் பெண் பெற்றுள்ள பாதுகாப்பு உத்தரவை மாற்ற இயலும். எனவே, கிறிஸ்தவர்களுக்கான இந்த விவாகரத்துச் சட்டம் போடப்பட்டப்பட்ட வருடம் 1869 ஆக இருப்பினும், பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரத்தையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது, இன்று வரை பயனுள்ளதாக நடைமுறையில் இருப்பதை அறிய முடிகிறது.
ரோஷினியும் தன்னுடைய விவாகரத்து வழக்கிலேயே இடைக்கால மனுவாகப் பாதுகாப்பு உத்தரவைப் பெற்ற பிறகே இந்த இன்னல்களிலிருந்தும் ஜேம்ஸின் பிடியிலிருந்தும் விடுபட முடிந்தது.
இது போன்ற சட்டப் பாதுகாப்பு இந்துத் திருமணச் சட்டம், இஸ்லாமியத் திருமணச் சட்டங்களில் இல்லை எனினும், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் மூலமோ அல்லது தன்னுடைய சம்பளத்தையும் சொத்து களையும் பாதுகாக்க நீதிமன்றத்திலிருந்து கணவருக்கும் கணவர் சார்பாகக் கடன் கோரும் மூன்றாம் நபர்கள் மீதும் தடையுத்தரவு பெறுவதன் மூலமோ அதைப் பெற முடியும். ஒவ்வொரு சட்டமும் அந்தக் காலகட்டத்தின் எதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டனில் இருந்த விவாகரத்துச் சட்டத்தின் நகல் போன்றதொரு சட்டமே 1869-ல் இயற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம். பிரிட்டனில் அந்தக் காலத்தில் வேலைக்குப் போகும் பெண்களின் ஊதியத்தையும் சொற்பமான சொத்துகளையும் பொறுப்பற்ற கணவரிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போடப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com