

எதற்கும் அஞ்சாத பெண்களைக்கூட மாதவிடாய் சிறிது அசைத்துப் பார்த்துவிடுகிறது. மாதவிடாய் காலங்களில் பயணம் மேற்கொள்வது, புதிய இடங்களில் தங்குவது போன்ற விஷயங்கள் இன்றும் பெண்களுக்குச் சிறிது அச்சத்தையே தருகின்றன. ஆனாலும் மாதவிடாய் பெண்களை ஒரேடியாக முடக்காமல் இருக்க சானிட்டரி நாப்கின்கள் இன்று உதவுகின்றன. அதே சமயம் வேதிப் பொருட்கள் கலந்த சானிட்டரி நாப்கின்களால் உடலுக்கு ஆபத்து உண்டாகுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுவருகிறது.
உடைகளில் கறைபட்டுவிடுமோ என்ற பதற்றத்தை சானிட்டரி நாப்கின் ஏற்படுத்துவதில்லை. நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பதும் சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் காரணம். இன்று சானிட்டரி நாப்கின் விற்பனை மிகப் பெரிய சந்தையாக வளர்ந்திருக்கிறது. ‘நாப்கின்களில் உள்ள ‘மேஜிக் ஜெல்’ நீண்ட நேரம் உங்களைப் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது, அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என்று நொடிக்கொரு தரம் விளம்பரம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாகக் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க, பெரும்பாலான பெண்கள் நாள் முழுவதும் ஒரே நாப்கினைப் பயன்படுத்துகிறார்கள். சானிட்டரி நாப்கினைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துவதால், கருப்பை வாய் புற்றுநோய் உட்பட கருப்பை சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இது போன்ற காரணங்களை வலியுறுத்தி மாதவிடாய் நாட்களில் பெண்களின் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day) கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பின் முன்னாள் செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இயக்குநர் மற்றும் தலைவர் ந.மணிமேகலை கூறுகையில், “விளம்பரங்களில் சொல்கிறார்கள் என்பதற்காக சானிட்டரி நாப்கின்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது தவறு. குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்குள் சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும். தொடர்ச்சியாக ஒரே நாப்கினைப் பயன்படுத்துவதால் நுண்ணுயிர்க் கிருமித் தொற்று ஏற்படும்.
இதனால் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்படும். குழந்தையின்மை, அதிக உதிரப்போக்கு போன்றவை உடனடியாக ஏற்படும் பாதிப்புகள். ஒரு சிலருக்கு மூன்றாவது, நான்காவது நாட்களில் ஒரு துளி உதிரப்போக்கு மட்டும்தான் இருக்கும். அதற்காக நாப்கினை நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடாது. உடலின் மிக முக்கியப் பகுதியான கருப்பை வாய்க்கு மிக அருகில் நாப்கின்களை வைப்பதால் அதில் உதிரப்போக்கு ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐந்து மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டியது கட்டாயம். இது துணிகளுக்கும் பொருந்தும். அவற்றையும் சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகக்கூடும் என்கிறார்.
சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் என்ன மாதிரியான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் மணிமேகலை கூறுகிறார். தற்போது சந்தையில் ரசாயன நாப்கின்களுக்குப் பதிலாக மூலிகை நாப்கின்களும் பருத்தி நாப்கின்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படாமல் தடுப்பதுடன் ரசாயனங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
“மாதவிடாய் தீட்டு என்று ஒதுக்கி வைக்கக் கூடிய விஷயம் அல்ல. உடல் ரீதியாக நடைபெறும் செயல்பாடு என்பதைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். மாதவிடாய் நாட்களில் காய்கறிகள், பழங்கள் போன்ற ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியம். மாதவிடாய் நாட்களில் பெண்கள் தங்களின் உடலையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலுறுப்பு, உள்ளுறுப்பு சார்ந்த பிரச்சினை என்பதால் மாதவிடாய் நாட்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று அக்கறையோடு எச்சரிக்கிறார்.