

என் மகள் பதற்றமாகாமல் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? இரவில் கண் விழித்துப் படிப்பது சரியா?
- சுதா கார்த்திகேயன், ஆவடி
கல்வியாளர் தா. நெடுஞ்செழியன், சென்னை
தேர்வு ஒருவரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் கருவி. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், இந்தத் தேர்வைச் சிறப்பாக எழுதுவேன் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களிடம், ‘உன்னால் முடியும்’, ‘எதற்காகவும் பயப்படக் கூடாது’, ‘தேர்வு பிரச்சினையான விஷயம் இல்லை’ என்பது போன்ற நம்பிக்கையளிக்கக்கூடிய நேர்மறையான வார்த்தைகளைப் பேச வேண்டும்.
மாணவர்கள் தேர்வில் மட்டும்தான் கவனத்தைச் செலுத்த வேண்டும். மதிப்பெண்கள் பற்றிச் சிந்திக்கக் கூடாது. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுப் படித்த விஷயங்கள் இதுபோன்ற நினைப்பால் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கிவிடும்.
இரவு படிப்பு
இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல. 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். மூளைக்குத் தேவையான ஓய்வு கொடுத்தால்தான் படிக்கும் விஷயங்கள் மறக்காமல் இருக்கும். காலை நேரங்களில் படிப்பது நல்லது.
படிக்கும் முறை
நல்ல ஓய்வுக்குப் பின்னர் படிப்பது நல்லது. அதே போல் ஐம்பது நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் எழுந்து வெளியே சென்று வேடிக்கை பார்ப்பது, பிடித்த பாடலைக் கேட்பது, பெற்றோரிடம் சந்தோஷமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். காலையில் கடினமான பகுதிகளையும் மதிய உணவுக்குப் பிறகு சற்று எளிமையான பகுதிகளையும் படிக்க வேண்டும்.
உணவுக்கு முக்கியத்துவம்
தேர்வுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இது மிகவும் தவறான செயல். காலை உணவைச் சாப்பிடாமல் செல்வதால் தேர்வு அறையை நெருங்கியதும் பதற்றம் காரணமாகக் கண்கள் இருண்டது (blackout) போன்ற உணர்வு ஏற்படும். படித்த விஷயங்கள் மறந்து போவதற்கான சாத்தியம் அதிகம். காலை உணவைச் சாப்பிடாதவர்கள் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு பயறு, பழச்சாறு போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
பதில் மறந்துவிட்டால்?
தேர்வு அறையில் நுழைந்தவுடன் எந்தக் கேள்விக்குப் பதில் தெரியுமோ, அந்தப் பதிலை உடனே எழுதிவிட வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களை எழுத எழுத நாம் படித்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். ஏதாவது கேள்விக்குப் பதில் மறந்துவிட்டால் அல்லது பதில் எழுதிக்கொண்டிருக்கும்போது பாதி விடை தெரியாமல் போனாலோ கவலை வேண்டாம். அந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் ஞாபகத்துக்கு வரும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த கேள்விக்குப் பதில் எழுத வேண்டும். ஒரு கேள்விக்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் பதிலை யோசிக்கக் கூடாது.
எதிர்காலத் திட்டம்
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் அன்றைய தினம் பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் நான் டாக்டராக வேண்டும், பொறியாளராக வேண்டும் என்பது போன்ற எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.
உதவி
தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், அடையாள அட்டை, நுழைவுச் சீட்டு ஆகியவற்றை முதல் நாளே தயாராக எடுத்து வைத்துவிட வேண்டும். அமைதியான சூழ்நிலையில் வீடு இருக்க வேண்டும். மற்ற மாணவருடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |