

அலுவலகம், வீடு என இரண்டு இடங்களிலும் வேலை பாரத்தைச் சுமக்கும் பெண்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் தற்போதைய பணி நேர வரைமுறைகளும் எதிர்பார்ப்புகளும் பெண்களின் ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிப்பவை என்றும் அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஆண்களைவிட இரண்டு மடங்கிலிருந்து பத்து மடங்குவரை அதிகமாக, ஊதியமற்ற வீட்டுப் பணிகளை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் செய்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. ஜப்பானைச் சேர்ந்த 24 வயது பெண், ஒரு மாதத்தில் 105 மணி நேரம் ஓவர்டைம் செய்ய வற்புறுத்தப்பட்டதால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘வேலை தர சீர்திருத்த திட்டம்’ ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கைப்படி, ஆண்களைவிட ஒரு வருடத்தில் பெண்கள் 39 நாட்கள் கூடுதலாகப் பணிபுரிகின்றனர். குடும்பங்களில் ஆண்களைவிட அதிகமாகப் பணியாற்றியும் ஆண்களைவிடப் பாதியளவே சம்பாதிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் பெண்கள் ரக்பி
இந்தியாவில் பெண்கள் ரக்பி அணி இருக்கிறதா? உள்ளது. அந்த அணி, லாவோசில் உள்ள வியன்டியான் நகரில் ஏசியா ரக்பி வுமன்ஸ் செவன் டிராபி பந்தயத்தில் பங்கேற்று லாவோஸ் அணியை ஆரம்பச் சுற்றில் 22-7 கணக்கில் தோற்கடித்தது. இந்தியப் பெண்கள் ரக்பி அணியுடன் தென் கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் லாவோஸ் அணிகள் கலந்துகொள்கின்றன. ரக்பி இந்திய அமைப்பின் தலைமைச் செயலரும் திரைப்பட இயக்குநருமான மகேஷ் மத்தாய், இந்தியாவில் பெண்கள் ரக்பி வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் தற்போது ரக்பி விளையாட்டில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 42 ஆயிரம்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கலவரம்
நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் சாசனத்தின் 243-வது சட்டப்பிரிவின் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து நாகாலாந்து முழுவதும் கலவரமும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. நாகா தாய்மார்கள் அமைப்பின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னணியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான நாகாலாந்து மாநில அரசு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்செய்ய முடிவு செய்ததையடுத்து நாகாலாந்து பழங்குடிகள் அமைப்பும் நாகா மக்கள் முன்னணியும் அவரைப் பதவி விலகக் கோரின. இதைத் தொடர்ந்து டி.ஆர்.ஜெலியாங் பதவி விலகினார்.
இந்த இடஒதுக்கீடு நடைமுறை, நாகாலாந்தின் மரபு உரிமைகளை மீறுவதாகப் பழங்குடி அமைப்புகள் தெரிவித்துள்ளன. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து இத்தனை பெரிய கலவரங்களும் தாக்குதல்களும் நடைபெற்றது குறித்து நாகாலாந்து பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.