Last Updated : 12 Mar, 2017 01:34 PM

 

Published : 12 Mar 2017 01:34 PM
Last Updated : 12 Mar 2017 01:34 PM

புதிய கோணம்: இந்த இருள் கருவறையின் இருளாக இருக்கட்டும்!

வலரி கவுர், அமெரிக்க குடியுரிமைகளுக்காகப் போராடும் செயல்பாட்டாளர், வழக்கறிஞர், ஆவணப்பட இயக்குநர், சீக்கிய மத நல்லிணக்க தலைவர். இவர் புத்தாண்டின் முந்தைய நாள் கொண்டாட்டத்தின்போது வாஷிங்டன் ஆப்ரிக்க அமெரிக்க தேவாலயத்தில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதை முன்னிட்டு ஓர் உரை நிகழ்த்தினார். அமெரிக்காவில் அதிகரித்திருக்கும் இனவாத வெறுப்பு அரசியலை எதிர்த்து மனிதத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும்படி அமைந்திருந்த இவரின் இந்த உரையை இதுவரை 1.7 கோடி பேர் பார்த்திருக்கின்றனர்.

சமூக வலைதளங் களில் லட்சக்கணக்கானவர்கள் இவருடைய உரையைப் பகிர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவில் தெற்காசியர்கள் மீதான இனவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், வலரியின் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, “உன் நாட்டுக்குத் திரும்பிப்போ!” என்று கூறியபடி, இந்தியப் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். மார்ச் 4-ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் தீப் ராயும் “உன் நாட்டுக்குத் திரும்பிப் போ!” என்ற அதே முழக்கத்துடனே சுடப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர், அமைதியிழந்திருக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் வலரியின் உரை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. வலரியின் உரையிலிருந்து...

103 ஆண்டுகளுக்கு முன், ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, என்னுடைய தாத்தா இருண்ட சிறையில் விடுதலைக்காகக் காத்திருந்தார். அவர் இந்தியாவின் காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்டு பசிபிக் பெருங்கடல் வழியாக அமெரிக்காவை வந்தடைந்தார். ஆனால், அவருடைய கருமை நிறத் தோலாலும் சீக்கிய நம்பிக்கைபடி அணிந்திருந்த தலைப்பாகையாலும் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் என் தாத்தாவை சகோதரனாகப் பார்க்காமல் அந்நியனாகப் பார்த்தனர். சந்தேகத்தின் பேரில் பல மாதங்கள் சிறையில் கழித்த அவரை, வெள்ளை இனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி மார்ஷல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து வெளியே கொண்டுவந்தார். 1913-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் இரவுக் கொண்டாட்டத்தின்போது அவர் வெளியே வந்தார்.

என்னுடைய தாத்தா கெஹர் சிங், சீக்கிய தர்மத்தின் அன்பையும் இணக்கத்தையும் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக விவசாயியானார். அப்போது அவருடைய ஜப்பானிய, அமெரிக்க அண்டை வீட்டு நண்பர்கள் சுற்றிவளைக்கப்பட்டு அமெரிக்கப் பாலைவனங்களின் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை யாருமே சென்று பார்க்க முன்வராதபோது, அவர் சென்று பார்த்தார். அவர்கள் திரும்பி வரும்வரை, அவர்களுடைய விவசாய நிலங்களையும் சேர்த்துக் கவனித்துக்கொண்டார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவில் வெறுப்பு வன்முறை அதிகமானது. மாமா என்று நான் அழைத்துவந்த ஒருவர் கொல்லப் பட்டார். நான் அவருக்கு ஆதரவாக நிற்க முயற்சித்தேன். என் தாத்தாவைச் சிறையிலிருந்து விடுவித்த வழக்கறிஞரைப் போல, நானும் வழக்கறிஞரானேன். நாடு கடத்தல், காவலில் வைத்தல், கண்காணிப்பு, சிறப்புப் பதிவு, வெறுப்புக் குற்றங்கள், இன விவரக் குறிப்புகளைச் சேகரித்தல் போன்றவற்றை எதிர்த்து, தலைமுறை தலைமுறையாக இயங்கிவரும் செயல்பாட்டாளர்களுடன் என்னை இணைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகான 15 ஆண்டுகளில் ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் ஒவ்வொரு வழக்கின் மூலமாகவும், ஒவ்வொரு பிரச்சாரத்தின் மூலமாகவும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பான தேசத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாக நான் நினைத்தேன்.

சில காலத்துக்குப் பிறகு, என்னுடைய மகன் பிறந்தான். கிறிஸ்துமஸ் இரவு அன்று, அவன் சாண்டா கிளாஸுக்கு மகிழ்ச்சியுடன் பாலையும் குக்கீஸையும் வைப்பதைப் பார்த்தேன். அவன் உறங்கிய பிறகு, நானே பாலை அருந்திவிட்டு, குக்கீஸையும் சாப்பிட்டேன். அவன் எழுந்து பார்க்கும்போது, அவையில்லாமல் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். மாயாஜால உலகத்தை அவன் நம்ப வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், எனக்கு அளிக்கப்பட்ட ஓர் உலகத்தைவிட ஆபத்தான உலகில் அவனை விட்டுச் செல்கிறேன். நானும் நீங்களும் அமெரிக்காவில் மாநிறமுள்ள ஒரு பையனை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் வளர்ந்த பிறகு, அவனுடைய மதநம்பிக்கையின் காரணமாகத் தலைப்பாகை அணிய நேரலாம்.

இன்று அமெரிக்காவில், பெருங்கோபமான ஒரு யுகத்துக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். வெள்ளை இன தேசியவாதிகள் பெரும் எழுச்சியாக இதைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். சீக்கியர்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறுப்பு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, என்னுடைய மகன் தெருவிலோ, பள்ளி வளாகத்திலோ அந்நியனாக, சந்தேகத்துக்குரியவனாக, தீவிரவாதியாகப் பார்க்கப்படுவதற்கான தருணங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இன்றும் கறுப்பு உடல்கள் குற்றவாளியாகப் பார்க்கப்படு கின்றன. மாநிற உடல்கள் சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகின்றன.

மாற்றுப் பாலினத்தவரின் உடல்கள் ஒழுக்கமற்றதாகப் பார்க்கப்படுகின்றன. நாட்டுப்புற உடல்கள் காட்டுமிராண்டித்தனமானதாகப் பார்க்கப்படுகின்றன. பெண்கள், சிறுமிகளின் உடல்கள் மற்றவர்களின் சொத்தாகப் பார்க்கப்படுகின்றன. இந்த உடல்களைச் சகோதர, சகோதரிகளாகப் பார்க்க முடியாதபோது, அவர்களை ஒடுக்குவதும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதும், புறக்கணிக்கும் கொள்கைகளை அனுமதிப்பதும், சிறைபிடிப்பதும், கொல்வதும் எளிதாக இருக்கிறது.

ஆமாம், எதிர்காலத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. புத்தாண்டு பிறக்கப்போகும் இந்த நேரத்தில், என் கண்களை மூடி என் தாத்தாவின் சிறையில் மூண்டிருந்த இருளைப் பார்க்கிறேன். சீக்கிய மரபின் நேர்மறை சக்தியான ‘சர்தி கலா’வை இந்த நேரத்தில் உணர்கிறேன்.

அதனால், எனக்குள் இருக்கும் தாய்மை உணர்வுடன் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்டுக் கொண்டேன் - இந்த இருள் கல்லறையின் இருளாக இல்லாமல், கருவறையின் இருளாக இருந்தால் எப்படி இருக்கும்? நம்முடைய அமெரிக்கா இறந்துபோகாமல், புதிதாகப் பிறப்பதற்காகக் காத்திருக்கும் ஒரு புதிய நாடாக இருந்தால், எப்படி இருக்கும்? அமெரிக்காவின் இந்தக் கதை ஒரு நீண்ட பிரசவமாக இருந்தால், எப்படி இருக்கும்? இனப் படுகொலை, அடிமைத்தனம், ஜிம் க்ரோ சட்டங்கள், கைதுகள், அரசியல் தாக்குதல் போன்றவற்றில் பிழைத்துவந்த நம்முடைய தாத்தாக்களும் பாட்டிகளும் நமக்கு அருகில் நின்றுகொண்டு, நம்முடைய காதுகளில் “நீங்கள் தைரியசாலி” என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நம்முடைய இந்த நாடு ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொண்டிருக்குமானால் எப்படி இருக்கும்?

பிரசவத்தின்போது மருத்துவச்சிகள் நம்மை என்ன செய்யச் சொல்வார்கள்? மூச்சை இழுத்து விடச் சொல்வார்கள், பிறகு? தள்ளச் சொல்வார்கள். ஏனென்றால், நாம் உந்தித் தள்ளவில்லையென்றால் நாம் இறந்துவிடுவோம். நாமும் உந்தித் தள்ளவில்லையென்றால் நம்முடைய தேசம் இறந்துவிடும். இன்றிரவு நாம் நன்றாக மூச்சுவிடுவோம். நாளை அன்பின் வழியாக நாம் பிரசவிக்கலாம். உங்களுடைய இந்தப் புரட்சிகரமான அன்பின் மாயத்தை நம்முடைய குழந்தைகளுக்குக் காட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x