மாடித் தோட்டம் - வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை உரம்!

மாடித் தோட்டம் - வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை உரம்!
Updated on
2 min read

காய்கறிக் கழிவுகள், உரித்த பூண்டு-வெங்காயத் தோல், முட்டைக் கூடு, அழுகிய பழங்கள்… இவற்றை என்ன செய்வீர்கள்? ‘‘இதென்ன கேள்வி, குப்பையில் எறிவோம்’’என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். கோவை பீளமேட்டைச் சேர்ந்த சித்ரா கிருஷ்ணஸ்வாமி, இந்தக் கேள்விக்கு வேறொரு பதில் வைத்திருக்கிறார். ‘‘எல்லாத்தையும் நான் சத்து நிறைந்த உரமாக மாற்றிவிடுவேன்’’ என்று சொல்லும் சித்ராவின் வார்த்தைகளுக்கு சாட்சி அவரது வீட்டு மாடியில் பரந்திருக்கும் தோட்டம்!

ஒரு பக்கம் மாதுளை காய்த்துக் குலுங்க இன்னொரு பக்கம் எலுமிச்சை அசைந்தாடுகிறது. மணக்கும் நாரத்தைக்கும் அங்கே இடமுண்டு. பாகல், பீர்க்கை, புடலை கொடிகளில் தொங்க, அவற்றுக்குப் போட்டியாகப் பச்சை மிளகாயும் கத்திரியும் அடர்ந்து செழித்திருக்கின்றன.

கீரை வகைகளுக்கும் பஞ்சமில்லை. “எல்லாமே மூன்று ஆண்டு உழைப்பின் பலன்!” என்று சிரித்தபடியே செடிகளுக்கு இடையே நடக்கிறார் சித்ரா. திடக்கழிவு மேலேண்மை குறித்த பயிற்சிக்காக கோவை வந்திருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு தன் வீட்டுத் தோட்டத்தில் நடைபெறும் செயல்பாடுகளை விளக்கிவிட்டு நம்மிடம் பேசினார்.

“நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டு இருக்கற பூச்சி மருந்துகளைப் பத்தி பேசிய என் கணவர், மூணு வருஷத்துக்கு முன்னால சொன்ன யோசனைதான் இது. வீட்டிலேயே நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்யறதுன்னு முடிவு செய்ததுமே அது சம்பந்தமான தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன்” என்கிறார்.

கோவை வேளாண் பல்கலைக் கழகம், விவசாய நண்பர்கள், இணைய தளம் என்று பல்வேறு தரப்பிலும் ஆலோசனை கேட்ட பிறகு தன் வீட்டு மாடியில் செடிகளை வளர்க்கத் தொடங்கினார் சித்ரா. எடுத்ததுமே முட்டைகோஸ், காலிஃபிளவர் என்று வீடுகளில் அரிதாக வளரக்கூடிய ரகங்களைத் தேர்ந்தெடுத்தார்.

“எதிலுமே ஒரு சவால் வேணும் இல்லையா?” என்று அதற்கு விளக்கம் சொல்லும் இவர், முதல் முயற்சியிலேயே 28 முட்டைகோஸ்களை அறுவடை செய்திருக்கிறார்.

செடிகளில் பூச்சித் தாக்குதல் இருப்பதைப் பார்த்தவர் உடனே இஞ்சி பூண்டு கரைசலைத் தயாரித்துத் தெளித்திருக்கிறார். செடிகள் வளர தண்ணீர் மட்டும் போதாது, இதர சத்துக்களும் வேண்டும் என்பதால் பஞ்சகவ்யாவுடன் இயற்கை உரங் களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

தற்போது 360 தொட்டிச் செடிகளின் செழுமையால் சித்ராவின் வீட்டு மாடி பசுமை போர்த்தியிருக்கிறது. காயர் பித் எனப்படும் தேங்காய் நார் கட்டிகளைப் பயன்படுத்தி பலரும் செடிகள் வளர்ப்பார்கள். அதில் செம்மண்ணையும் சேர்த்து செடிகள் வளர்க்கிறார் சித்ரா.

“காயர் பித்தில் தண்ணீர் ஊற்றினால் உப்பிவிடும். அதில் விதைகளைப் போட்டாலே போதும்தான். ஆனால் வேர் நன்றாகப் பிடிக்க மண்ணும் அவசியம்னு தோணுச்சு. அதனால காயர் பித்தில் செம்மண்ணைப் பரப்பி அதில் செடிகள் வளர்க்கிறேன். மண்ணுடன் இயற்கை உரங்களையும் சேர்த்துப் போடுவேன்” என்கிறார் சித்ரா.

உரமாகும் கழிவுகள்

தன் தோட்டத்துச் செடிகளுக்காகத் தேர்ந்தெடுத்த இயற்கை உரங்களையும் மண் புழு உரங்களையும் பயன்படுத்துகிறார்.

“காய்கறிக் கழிவுகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்னு முடிவு செய்தேன். இது தொடர்பான வல்லுநர்களிடம் பேசிவிட்டு மூன்றடுக்கு பானைகளை வாங்கினேன். அடியில் இருப்பது சேமிப்புக் கலன். மற்ற இரண்டும் சுட்ட செம்மண்ணால் செய்யப்பட்டவை.

மேலே இருக்கும் பானையில் செய்தித் தாளைப் பரப்பி அதன் மீது தினமும் சேரும் காய்கறி கழிவுகளைப் போட்டு அதனுடன் உலர்ந்த சாணத்தூளைச் சேர்க்க வேண்டும். இரண்டே நாட்களில் கழிவுகள் நொதித்து நீர்விடும் என்பதால் காய்ந்த இலைகளைச் சிறிதளவு சேர்க்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் விட்டுப்போனால் புழு வந்துவிடும் என்பதால் சருகுகளைப் போதுமான அளவு சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இப்படிச் செய்ய வேண்டும். முதல் பானை முக்கால் பாகம் நிரம்பியதும் அதில் இருப்பவற்றை நடுவில் உள்ள பானையில் கொட்டிவிட்டு மீண்டும் முதல் பானையில் காய்கறிக் கழிவுகளைப் போட வேண்டும். முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் கழிவுகள் நன்றாக மக்கி, உரம் தயாராகிவிடும்” என்று சொல்லும் சித்ரா, சமைத்த உணவு வகைகளை இதில் சேர்க்காமல் இருப்பது நல்லது என்கிறார்.

படங்கள்: ஜெ. மனோகரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in