

இசைப் பாரம்பரியமிக்க சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர் ஹர்ஷ்தீப் கவுர். இசையின் பாலபாடத்தை அவருடைய தந்தை சவிந்தர் சிங்கிடம் தொடங்கினார். பலதரப்பட்ட இசைக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை சவிந்தர் நடத்திவந்தார். அதனால் பலவகையான இசைக் கருவிகளை வாசிக்கும் வாய்ப்பை இளம் வயதிலேயே பெற்றார் கவுர்.
இந்துஸ்தானி இசையை தேஜ்பால் சிங்கிடமும் மேற்கத்திய இசையை ஜார்ஜ் புல்லின்கலாவிடமும் கற்றார். டெல்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் கற்றுக்கொண்டார். பலதரப்பட்ட இசை பாணிகளை அறிந்திருந்தாலும் சூஃபி இசைதான் இவருடைய அடையாளமாக மாறியது. எம் டி.வி, என்.டி.டி.வி. என இரண்டிலும் சிறந்த பாடகிக்கான பட்டத்தைப் பெற்றிருப்பவர். என்.டி.டி.வி. நடத்திய சூஃபி, கிராமிய இசை, திரைப் பாடல்கள் போட்டியில் பங்கெடுத்து ‘சூஃபி கி சுல்தானா’ பட்டத்தைப் பெற்றார். இந்த வெற்றி இவருடைய திரைப் பிரவேசத்துக்கு அடித்தளமிட்டது.
2003-ம் ஆண்டிலேயே பாலிவுட்டில் பின்னணி பாடினாலும் ‘ரங் தே பசந்தி’ படத்தில் சீக்கிய இறைவணக்கப் பாடலைப் பாடும் வாய்ப்பை ஏ.ஆர்.ரஹ்மான், ஹர்ஷ்தீப் கவுருக்கு வழங்க, அவரது ஆத்மார்த்தமான குரல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“இந்தப் பாடலைப் பாடுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பெரும் வரமாக நினைக்கிறேன். தினமும் நான் பாடும் பாடல்தான் அது. ஆனாலும் காலை 4 மணிக்கு அதை ரெக்கார்டிங் தியேட்டரில் பாடியபோது மெய் சிலிர்த்தது” என்று தன் வலைப்பக்கத்தில் நெகிழ்ந்திருக்கிறார் கவுர்.
தொடர்ந்து அமித் திரிவேதி, ப்ரீத்தம் சக்ரவர்த்தி, விஷால் சேகர், சலீம் சுலைமான் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு வந்தது. லண்டனில் நடைபெறும் சவுத்பேங்க் சென்ட்ர் மியூஸிக் ஃபெஸ்டிவல், கனடாவில் நடைபெறும் மொசேக் ஃபெஸ்டிவல் ஆகியவற்றில் சூஃபி இசையைப் பிரபலப்படுத்தியிருக்கும் கலைஞர் கவுர்.
கேட்பரீஸ், விசா கார்ட் போன்றவற்றுக்கான விளம்பர இசையை அமைத்திருப்பவர். ரெப்பா ரெப்பா, ரங்கீலா ரே, ரொமான்டிகா ஆகிய இவரின் ரீமிக்ஸ் ஆல்பங்கள் வடக்கு, தெற்கு பாகுபாடு இல்லாமல் இளைஞர்களால் கொண்டாடப்படுபவை. அதேசமயம் பக்திமயமான பஞ்சாபி பாடல்கள் அடங்கிய எண்ணற்ற ஆல்பங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
“பாடுவது ஒரு பரிமாணம். இசையமைப்பது இன்னொரு பரிமாணம். இசையின் எல்லாப் பரிமாணங்களிலும் பேர் சொல்லும் பிள்ளை என பெயர் எடுக்க வேண்டுமென்பதே இந்தப் பிறவியின் பயனாக நினைக்கிறேன்” என்கிறார் ஹர்ஷ்தீப் கவுர்.