

தோழி மாலினி கோபால் தன் பூர்விக வீட்டின் பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதைப் படித்ததும் நானும் பல வருடம் பின்னோக்கிப் பயணித்தேன். எனக்குத் திருமணமான புதிதில் நாங்கள் வேலை காரணமாக வெளியூரில் தங்கியிருந்தாலும் மாதம் ஒரு முறை கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று மாமனார், மாமியாருடன் தங்கிவிட்டு வருவோம்.
வீட்டுக்கு முன் பெரிய மாட்டுத் தொழுவம். அதில் இரண்டு எருதுகள். தோட்டம் உழ, வண்டி இழுக்க, ஏற்றம் இறைக்க எனப் பல வேலைகளை அவை கச்சிதமாகச் செய்யும். என் மாமனார் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் இருபதடி தூரத்தில் வரும்போதே மாடுகள் அவரைப் பார்த்துவிடும்.
அதுவரை அமைதியாக அசைபோட்டுக்கொண்டிருந்தவை, அவர் வீட்டை நெருங்கும்போது எழுந்து நிற்கும். அவரும் அவற்றை ஆசையோடு தடவிக்கொடுத்த பிறகுதான் வீட்டுக்குள் வருவார். நாய், பூனை, ஆடு, மாடு, எருது என சகல ஜீவன்களோடும் இயற்கையோடும் இணைந்த அற்புதமான வாழ்க்கை அது.
ஒரு நாள் இரவில் தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டைப் பாம்பு தீண்டிவிட்டது. மாட்டின் கதறல் கேட்டு அனைவரும் பதறியபடி வெளியே சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி மாடு மயங்கி இருந்தது. எங்கள் கண் எதிரிலேயே அது இறந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்தது. நம் வீட்டில் ஒரு அங்கத்தினராக வலம்வந்த மாடு இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருந்தது.
மறுநாள் காலை கிராமத்தில் இருந்த அனைவரும் துக்கம் கேட்டு வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். வயதானவர்கள்கூட, “அடடா... இப்படி ஆகிவிட்டதே” என்று எங்களுக்கு ஆறுதல் சொன்னது இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. மாடுதானே என்று நினைக்காமல் அதையும் ஒரு உயிராக நினைத்து துக்கம் விசாரித்த அவர்களது மனித நேயமும் கருணையும் என்னை நெகிழச் செய்தன.
இப்போது நாளிதழ்களில் நிறைந்து கிடக்கிற கொலை செய்திகளைப் படிக்கும்போது மனித உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா எனத் தோன்றுகிறது. மனித நேயத்தைத் தொலைத்துவிட்டு நாம் எதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
- பானு பெரியதம்பி, சேலம்.