Published : 01 Jan 2017 02:30 PM
Last Updated : 01 Jan 2017 02:30 PM

நிகழ்வுகள் 2016

காதலின் பெயரால் வன்முறை

பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில், காதலின் பெயரால் பெண்கள் கொல்லப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் கடந்த ஆண்டு அதிகரித்தது, பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. பெண்களைப் பின்தொடர்வதும், காதலிக்க மறுக்கிறவர்களைக் கொல்வதும் தொடர்ச்சியாக நடந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டார் பொறியியல் பட்டதாரி சுவாதி. சுவாதியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் முழுவதும் விலகாத நிலையில் சுவாதியின் கொலைக்கு ஒருதலை காதலே காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

தான் புறக்கணித்தவரால் தன்னுடைய புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தொடர்ந்து சேலத்தையடுத்த இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த வினுப்ரியா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார். புகார் மீது உடனடி நடவடிக்கையில் ஈடுபடாத காவல்துறையின் மெத்தனமும் அவரது மரணத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவருடைய மூன்று மகள்களும் கொலைசெய்யப்பட்டனர். குடும்பத் தகராறில் அந்தப் பெண்ணின் கணவரே அவர்களைக் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை சார்பில் சொல்லப்பட்டது.

தெலங்கானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி, காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கடந்த ஜூலை மாதம் பட்டப்பகலில் பலர் முன்னியிலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோனாலி, அவரது சீனியர் ஒருவரால் கரூரில் உள்ள தனியார் கல்லூரியின் வகுப்பறையிலேயே கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டது வன்முறையின் உச்சம். அதற்கு மறுநாள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பிரான்சினாவை அவரை ஒருதலையாகக் காதலித்தவர் தேவாலயத்தில் வைத்து வெட்டிக் கொன்றார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் தன்யா, கடந்த செப்டம்பர் மாதம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அவரைக் கொன்றதாகச் சொல்லியிருக்கிறார் கைது செய்யப்பட்ட இளைஞர். அதே மாதத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் அப்புராசபுதூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அவரைக் காதலித்த அரசன் என்பவரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தன்னைக் காதலித்துவிட்டு வேறொருவரை தீபிகா மணக்கச் சம்மதித்ததால் கொலை செய்ததாக அரசன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவியும் காதலின் பெயரால் தாக்கப்பட்டார்கள்.

தொடரும் சர்ச்சை

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயது முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து பல அமைப்பினரும் தொடர்ந்து போராடி வந்தனர். பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றால் அவர்களின் தூய்மையைப் பரிசோதிக்கும் கருவிகளைக் கோயிலில் பொருத்த வேண்டும் என்று மத ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையலாம் என்று தங்கள் நிலைப்பாட்டைக் கடந்த ஆண்டு அறிவித்தது கேரள அரசு.

கண்ணால் கண்டது பொய்

‘உலகின் மிக வேகமான காசாளர்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ண்ட வங்கி ஊழியர் மெதுவாக பணிபுரியும் காட்சிகள் அடங்கிய வீடியோ பலரால் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டது. அந்தப் பெண் ஊழியர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஓய்வுபெறும் நிலையிலும், பணியைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்திருக்கிறார். இந்த உண்மை தெரிந்த பிறகு பலரும் அந்தப் பெண் ஊழியருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

அம்மாவுக்கு லீவு

வேலைக்குப் போகும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தின்போது 26 வாரங்கள் (ஆறு மாதம்) விடுப்பை உறுதிசெய்யும் மகப்பேறு சலுகைகள் சட்டத் திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் நிறைவேறியது. ‘பணமதிப்புநீக்கம்’ காரணமாக நாடாளுமன்றம் முடங்கியதால் இந்த மசோதா இன்னும் மக்களவையில் நிறைவேறாமல் காத்திருக்கிறது.

அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை ஆறு மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. குழந்தை பிறப்பால் வேலையைத் தொடர முடியாமல் போகுமோ என்று தவித்த பலருக்கும் அரசின் இந்தப் புதிய திட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார், அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்புகளில் எழுந்தது.

சுரண்டலுக்குக் கடிவாளம்

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா நாடாளு மன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. வாடகைத் தாய் திட்டத்தின் மூலம் ஏதுமறியாத ஏழைப் பெண்கள் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறையாக இது அமையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த மசோதாவின்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசியலும் பெண்களுக்கே

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி போன்ற அமைப்புகளில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்கும் என்பதால் பெண்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் கர்நாடகா, பிஹார், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் போன்ற பதினாறு மாநிலங்களில் இந்த ஐம்பது சதவீத இடஒதுக்கீடு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. சட்டத் திருத்தம் மூலம் நாடு முழுக்கப் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அமைச்சரவை திட்டமிட்டிருக்கிறது.

பெண்ணுரிமைக்கு எதிரானது

இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைகளை ‘முத்தலாக்’ முறை பாதிப்பதாகத் தொடர்ச்சியான விவாதங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம், “முத்தலாக் இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது; அரசியலமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது. தனிப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்புக்கு மேலே இருக்க முடியாது” என்று கருத்து தெரிவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல தரப்பிலும் விவாதங்களை உருவாக்கியது.

இதற்குமா விவாகரத்து?

குறிப்பிட்ட சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் படும்போது முன்வைக்கப்படும் வார்த்தைகள், பல சமயம் சமூகத்தைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடுவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் “வயதான காலத்தில் மகனை நம்பியிருக்கும் பெற்றோரிடமிருந்து கணவனைப் பிரிந்துவரத் தூண்டும் மனைவியை விவாகரத்து செய்யலாம்” என்று குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்களிடமும் பெண்ணிய அமைப்புகளிடமும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.

வீதிகளும் எங்களுக்குச் சொந்தம்

‘வீடுகள் மட்டுமல்ல, வீதிகளும் எங்களுக்குச் சொந்தமே. பகல் மட்டுமல்ல, இரவும் எங்களுக்கு உரியதே’ என்ற முழக்கங்களுடன் பின்னிரவு நேரங்களில் வீதிகளில் களமிறங்கினார்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள்.

பொதுவெளி என்பது பெண்களுக்கு ஆபத்தானது, பாதுகாப்பற்றது என்ற அச்சம் உண்டாக்கும் எதிர்மறையான சிந்தனைகள், பேச்சுகளுக்கு மாற்றாக ‘பொதுவெளி பெண்களுக்கும் உரியதே’ என்ற நேர்மறையான பார்வையை உண்டாக்க ‘வொய் லாய்ட்டர்?’ என்ற பரப்புரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களில் பெண்கள் ஈடுபட்டனர்.

தடை அகன்றது

மகாராஷ்டிர மாநிலம் சிங்கணாபூரில் இருக்கும் சனீஸ்வரர் கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நானூறு ஆண்டு காலத் தடையை எதிர்த்து, திருப்தி தேசாய் தலைமையில் ‘பூமாதா படை’யைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ‘கடவுளை வழிபடுவதில் ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. வழிபாடு என்பது பெண்களின் அடிப்படை உரிமை. அதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை’ என்று குறிப்பிட்ட மும்பை உயர் நீதிமன்றம், பெண்களும் கோயில் கருவறைக்குள் நுழைந்து வழிபடலாம் எனத் தீர்ப்பளித்தது. அதேபோல மும்பையில் இருக்கும் ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய ஐந்து ஆண்டுகளாக இருந்த தடையும் விலக்கப்பட்டது.

எது கறுப்புப் பணம்?

பண மதிப்பு நீக்க அறிவிப்பையொட்டி நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானாலும் பெண்களும் முதியவர்களும் பெரும் துயரத்துக்குத் தள்ளப்பட்டார்கள். வீட்டுச் செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை மிச்சம் பிடித்து சேமித்து வைத்திருந்த பெண்கள், வங்கிக் கணக்கு இல்லாத நிலையில் அவற்றை மீண்டும் தங்கள் கணவனிடமே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பணப் புழக்கம் இல்லாததால் முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது.

கொலையில் என்ன கவுரவம்?

காதலின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளுக்கு இணையாக, சாதி ஆணவக் கொலைகளாலும் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். காட்டுமன்னார் கோயிலையடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் காதலனுடன் போனில் பேசினார் என்பதற்காக அவருடைய தாத்தாவால் கொலை செய்யப்பட்டார். தன் மகனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காகத் தங்கள் மருமகளை வெட்டிக் கொன்றார்கள் அந்தப் பெண்ணின் மாமனாரும் மாமியாரும். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் – கௌசல்யா மீது தாக்குதல் நடத்தப்பட, சங்கர் கொல்லப்பட்டார். கௌசல்யா, மரணத்துடன் போராடி மீண்டார். தெலங்கானாவைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததால் அவருடைய அம்மா, பாட்டியால் கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x